Monday, October 22, 2012



இடிந்த கரை
 
யாழன் ஆதி


1
அலைகள் எழும்பும் மண்ணில்
அசைகிறது துர்கனவின் வாசனை
அதிகாரங்களின் சமையலறையில் சிக்கிச் சிதறுண்ட
ஒரு வெள்ளரிப்பிஞ்சைப் போல் சிதைந்துகிடக்கிறது
அன்றையப் பகல்
கடற்கரையின் மணற்பரப்பில் மனிதர்கள்மீது
விடிந்த நாளின் கணம் தாளாது தத்தளிக்கிறது கடல்
போர்க்குழந்தைகள் தங்கள் கைகளை எழுதுகுச்சிகளாக்கி
எழுதிக்கொண்டிருக்கின்றனர் கடற்கரையில்
கடலில் துரத்தப்பட்ட மக்கள் அலைகளாகி
திரும்பி வருவார்களா என
வலைகளோடு காத்திருக்கின்றனர் காவலர்கள்
ஆணைகள் நிரம்பிய பைகளில் அவர்கள்
குண்டுகளையும் கண்ணீர்ப் புகைகளையும் வைத்திருக்கிறார்கள்
மக்கள் நிரப்ப விடாமல் தடுக்கும் எரிபொருளை
அவர்கள் வயிறுகளில் நிரப்ப எத்தனிக்கிறார்
முண்டாசும் தாடியும் வைத்திருக்கும் ஆட்சியாளர்
யாரோ வெளியிலிருந்து தூண்டுவதாக வந்ததாம்
தகவல் என்று கூறி விட்டு
மக்கள் சாவதைக் குறித்த கவலைகளுக்கானக் குறிப்புகள்
ஏதுமின்றி
கிளம்புகின்றனர் அவர்கள்
அடுத்த நாள் என்ன போராட்டம் என
திட்டமிடுகின்றனர் மக்கள்.











2.
கைகளிலிருந்து ஓங்கி
தூற்றிய மணலில்
தன் வசவுகளையும்
வயிற்றெரிச்சலையும்
வாரி இறைக்கிறாள் அந்த மாணவி
கூடவே விழுகின்றன
அன்றைக்கு அவள் படித்த வீட்டுப்பாடங்கள்.


3.
இரும்புக்கவசங்களோடும்
தடிகளோடும் நிற்கின்றன
காவல் படைகள்
கையில் மண்ணோடும்
காய்ந்த தாவரங்களோடும்
எதிர்கொள்ள வருகின்றனர் மக்கள்.


4.
கடல் வென்றவர்கள்
அலை நின்றவர்கள் மக்கள்
உலை வெல்வர்
நிலை கொள்வர்.


5.
விபரீதங்களைக் கனவுக் காணும்
அரச வம்சங்கள்
மக்களைக் கண்டு அச்சமுறுகின்றன
மக்களின் வெறுங்கைகளே அவர்களுக்கு ஆயுதங்களாய்த்
தெரிகின்றன
அவர்களின் விழிகள் கோபம் கொண்ட
தீக்கோளங்களாய் புனையப்பட்ட நேரத்தில்
ரகசிய உத்திரவோடு வருகிறார்கள் காவலர்கள்
தாங்கள் வாழ்வதற்கு அனுமதி கேட்கும்
மக்களில் குழந்தைகள்
பாடல்களைப் பாடுகின்றன
பீடி சுற்றும் பெண்ணொருத்தி
முறத்தை கீழே வைத்துவிட்டு முழக்கமெழுப்பிவிட்டு
செல்கிறாள்
தீராத பக்கங்களைப் படித்துக்கொண்டே இருக்கின்றனர் மக்கள்
அவ்வப்போது அவர்கள் சாப்பிடுகிறார்கள்
வீடுகளைவிட்டு கடலைவிட்டு
அவர்கள் போராட்டத்திற்கு வந்துவிடுகின்றனர்
குழந்தைகள் கோயிலுக்குப் போவதைப் போல
காலையிலும் மாலையிலும் பந்தலுக்கு வருகிறார்கள்
அவர்கள் கேட்கிறார்கள்
நாங்கள் கேட்கிறோம்
நீங்கள் ஏன் அதை மூடிவிடக்கூடாது?
மக்களற்ற வீதியில்
யாருக்கு விளக்கெரிக்கப் போகிறீர்கள்
அணுவுலையில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தில்.
  •  







யாழன் ஆதி
கஸ்பா
ஆம்பூர்.வே.மா.
9443104443

Sunday, September 30, 2012

மழைப்பயணம்

மழையின் சப்தம் கூரையில் விழுந்து கேட்கிறது
இருளை ஈரமாக்கி அதன் எடையைக் கூட்டுகிறது குளிர்
மழைத்துளிகளின் பலம் தாளாமல் வளைந்து கொடுக்கின்றன தளிர்கள்
முட்டைகளை பத்திரமாக்கத் தவிக்கிறது காகம்
கொய்யா மரத்தின் அணிலின் வால் நனைந்திருக்கும்
நேற்று ஈரப்பதத்தில் நட்ட மணிச்செடி மழையின் நீர் உறிஞ்சுகிறது
குருவியின் இறகொன்று தொப்பலாய் நனைந்து மாமரத்தின் தண்டில்
ஒட்டிக் கொள்ள  பயந்து கிளம்புகின்றன எறும்புகள்
மழை நீரைக் குடித்த மண்குழிகள் நிறைந்து மகிழ்கின்றன
அழகிய மழை பொழியும் இந்த இரவின் அடர்ந்த ஏகாந்தத்தில்
நீ வருகிறாய் நினைவுகளில்
மழைச்சாரல் வராமல் பேருந்து சன்னல் கண்ணாடியை இறக்கிய
பயண நினைவுகளோடு
கண்ணாடியில் வழிந்துகொண்டிருந்த மழைத்தாரைகளை மறித்து
ன் மாவிலைக் கண்களில் தீட்டுகிறேன்.

Wednesday, June 20, 2012

யாழன் ஆதி

யாழன் ஆதி

தேடுகை
தேடுகை


எப்போதும் அலையும் காற்றின் இயக்கத்தில்
சுழன்றுகொண்டிருக்கிறது அகன்ற சருகொன்று
சிவந்த கூரிய அலகுடையப் பறவை
பிய்த்துச் சென்ற செம்மரக்கட்டையின் ஓரிழையை
அது தனது கூட்டுக்குள் பதுக்கி வைக்க
அதன் பிம்பம் எதிரொலிக்கும் மாலைநேர வானில்
மேகங்கள் முப்பரிமாணக் கூடல் காட்ட
மோகினி ஒருத்தி ஆடைகளற்ற பின்புறத்தைக் காட்டி
நடக்கிறாள்
விலகாத தவிப்புகளடங்கியப் பெட்டியை வைத்துக்கொண்டு
சுமையின் வலிதாளாமல் கால்கள் இடர
கண்களிலிருந்து வழியும் காமத்தைத் துடைத்துக்கொண்டே
நடக்கிறான்
யாருமற்றத் தெருவில்
புணர்ந்துத் தீர்க்கப்பட்டவர்கள் நிறைந்த அந்தத் தெருவின்
புராதனத்தில் வீழ்ந்து கிடந்த வாளொன்றை எடுத்து
அவன் பெட்டியை உடைக்க
அதிலிருந்து கிளம்பிய புகையில்
இருந்தன அவன் முன்னோர்களின் கண்கள்.