Monday, June 6, 2011

அழகர்சாமியின் குதிரை

பெயரற்ற எண்ணிலிருந்து என் கைப்பேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது.
“யாரு யாழன் ஆதியா?”
“ஆமாம். வணக்கம்.யாருங்க பேசறது?”
“ தோழர் நான் யுகபாரதி பேசறேன்”
யுகபாரதி என்னுடைய நெருங்கிய கவித்தோழமை. திரைத்துறையில் பாடலாசிரியராக ஆகப்போதுமான உயரத்தினை அடைந்திருந்தாலும் நண்பர்களை சக மனிதனை நேசிக்கிற அன்பு அவரிடம் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடித்த ஒன்று.
யுகபாரதி பேசினார்.
“பாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை நாவலைத் திரைப்படமாக இயக்குநர் சுசீந்திரன் பண்ணியிருக்கிறார். அப்படத்தை எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்களுக்கு தனிக்காட்சியாகப் போட்டுக் காட்டவேணுமின்னு
நெனக்கிறார். உங்க முகவரி குடுங்க தோழர்.”
முகவரியைச் சொல்ல எழுதிக்கொண்டார். அக்கடிதம் வந்தது. மே 10ந்தேதி, மாலை 6 மணிக்கு சத்யம் திரையரங்கில் என்று அக்கடிதம் சொன்னது. கடிதம் எழுதப்பட்ட முறை உண்மையிலே அக்கறையோடு அழைப்பதாக இருந்தது.


10ந்தேதி காலை ஆம்பூரிலிருந்து தொடர்வண்டி ஏறி 3.00 மணிக்கு சென்னையை அடைந்தேன். அங்கிருந்து நுங்கம்பாக்கம் சென்று தலித்முரசு அலுவலகத்தில் இருந்த வேலைகளை முடித்துக்கொண்டு ஆசிரியர் புனிதபாண்டியனின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சத்யம் திரையரங்கு வந்து சேர்ந்தேன். சென்னையில் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது எனக்கு மிகவும் பிடித்தமானது.வெயில் தணிந்த அந்த மாலை என்னை வசீகரித்திருந்தது. தியேட்டருக்கு முன்பு வண்டியை நிறுத்திவிட்டு பார்த்த போது கவிஞர் ரவி சுப்பிரமணியம் அன்பு ததும்ப கையசைத்தார். சல்மாவும் வந்திருந்தார். நேரம் ஆக ஆக சென்னையில் இருக்கும் படைப்பாளிகள் எல்லாம் வந்திருந்தனர். கவிஞர்கள் கடற்கரை,ரகசியன், கவின்மலர், இந்திரன், ஓவியர் மருது, திரைப்பட இயக்குனர் அஜயன் பாலா, பொன் சுதா, அருள் எழிலன், எழுத்தாளர் பா.ராகவன், வெளி.ரங்கராஜன் இன்னும் சில நடிகர்கள், என கலைப்பட்டாளமே அழைக்கப்பட்டிருந்தது. ஒரு இலக்கிய அந்தஸ்த்தை அந்தத் தனிக்காட்சிப் பெற்றிருந்தது.

7.00 மணிக்கு படம் ஆரம்பித்தது. வாயிலிர்ருந்து அனைவரையும் வரவேற்றார் இயக்குனர் சுசீந்திரன். ஏற்கெனவே இரண்டு வெற்றிப்படங்களைத் தந்தவர் என்னும் கர்வம் சிறிதும் இன்றி முதல் படத்தை இயக்கிய ஒருவரின் வாஞ்சை அவரின் முகத்தில் இருந்தது. அருகில் அப்படத்தின் முக்கிய பாடலை எழுதிய கவிஞர் யுகபாரதி.

பாஸ்கர் சக்தி எழுதிய அழகர்சாமியின் குதிரை என்னும் கதை தமிழ் வாசிப்புத்தளத்தில் படிக்கப்படவேண்டிய முக்கியமான கதைகளில் ஒன்று என்று ஏற்கெனவே வரிசைப்படுத்தப்பட்டது.

தமிழ் இலக்கிய உலகிற்கும் திரை உலகிற்கும் ரொம்ப தூரம். சிறந்த திரைப்படங்களை சிறந்த இலக்கியங்களிலிருந்து உருவாக்கலாம் என்பதற்கு தமிழ்சினிமா ஒரு விதிவிலக்கு. தமிழ் நாவல்களின் இயங்குநிலை என்பது தமிழ்சினிமாவின் வரையறுக்கப்பட்ட வாய்ப்பாட்சு சூத்திரத்திற்கு ஒத்துவரவில்லை. இன்னொரு செய்தியையும் நம்மால் கூற முடியும். தமிழ் இலக்கியத்தைத் தொடர்ந்து வாசிக்கின்ற இயக்குனர்கள் மிகக்குறைவு. ஆனால் இப்போதிருக்கும் இயக்குனர்கள் வாசகர்களாக இருப்பதினால் சில படங்கள் வருகின்றன. மகேந்திரன் புதுமைப்பித்தன் கதையைப் படமாக்கினார்.உமாசந்திரன் கதையைப் படமாக்கினார். தங்கர் பச்சானின் அழகி ஒரு நல்ல நம்பிக்கையான இடம். அடுத்து அவரே இயக்கிய சொல்ல மறந்த கதை நாஞ்சில் நாடனின் கதை. இயக்குனர் கௌதமன் இயக்கிய மகிழ்ச்சி நீலபத்ம நாபனின் தலைமுறைகள் என அவ்வரிசை மிகச்சொற்ப எண்ணிக்கையையே கொண்டது.

அழகர்சாமியின் குதிரை படம் முடிந்து வெளியேறும்போது ஒரு கிராமத்தின் வாழ்விலிருந்து வெளிவந்ததைப்போல இருந்தது. அது ஒரு எண்பதுகளில் நடக்கும் ஒரு கதை. தேனிமாவட்ட கிராமம் ஒன்றில் கதை நிகழுகின்றது. எண்பதுகளில் பயன்படுத்தப்பட்ட கிராமம், செல்போன் இல்லாத மனிதர்கள், பகுத்தறிவு பேசும் இளைஞர்கள்( தற்போதைய தொழில்வளர்ச்சியில் அப்படிப்பட்ட சமூக அக்கறையுள்ள இளைஞர்களைப் பார்க்க முடியாது) பயன் படுத்தப்படும் ரூபாய் நோட்டுகள், பாத்திரங்களின் உடைகள் என மிகவும் துல்லியமாகப் படம் திட்டமிடப்பட்டுள்ளது.

ஹீரோயிசம் என்னும் தனிமனித வழிப்பாடு படத்தில் எந்த இடத்திலும் இல்லை. சாதாரண மக்கள். அவர்களின் இயற்கையான உரையாடல்கள். அழகிய மலைகள் சூழ்ந்த இடங்கள், எல்லா இடங்களிலும் பொருந்திபோகின்ற இசைஞானியின் இசைக்கோவைகள் என படம் தமிழ் சினிமாவிற்கு நம்பிக்கைத் தரும் மாற்று சினிமாவாக வந்திருக்கின்றது.

மனித வாழ்வில் பிறருக்காக ஈரம் கசிவது என்பது அக்கால கிராமங்களின் இதயமாக இருந்தது. அதை அப்படியே இயல்புகெடாமல் தந்திருப்பது இயக்குனர் சுசீந்தரனின் உழைப்பும் சினிமா ஆர்வமும்தான். மழையே வராத அக்கிராமத்தில் அழகர்சாமியின் குதிரை காணாமல் போவதும் அதனால் ஏற்படும் அந்த கிராமத்து மக்களின் மாற்றங்களும் சிறப்பாக இருக்கின்றன. குதிரை காணாமல் போனது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கும் காட்சி அப்பாவி கிராம மக்களின் வெள்ளந்தி மனங்களைச் சொல்லுகின்றது. கட்டை குதிரை காணாமல் போக ஒரு உண்மையானக் குதிரை வர அதை வைத்துக்கொண்டு மலையாள மாந்திரீகரும் போலீஸ்காரர் ஒருவரும்செய்யும் மோசடிகள் நகைச்சுவையானவை. பிரபு என்னும் சிறுவன் பாத்திரம் அருமையான சித்தரிப்பு. படத்தில் வரும் காதல் மிகவும் யதார்த்தமாக நகர்த்தப்பட்டிருப்பதும் மற்ற படங்களின் காதலைப் போலல்லாமல் உண்மையாக இருப்பதும் மிகவும் அருமை.

உயிர் உள்ள குதிரையின் சொந்தக்காரன் அழகர்சாமியின் பாத்திரம் அவருடைய திருமணம், அவர் நடிப்பு, அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கின்றது.

படத்தின் இன்னொரு சிறப்பு கதையோட்டத்தோடு அமைந்திருக்கும் நகைச்சுவை.

இப்படி எல்லாவற்றையும் சொல்லலாம்.

அழகர்சாமியின் குதிரை திரைப்படம் தமிழ்சினிமா நல்ல திசைநோக்கிப் பயணிக்க பயன்படும் கைக்காட்டி மரம்.

புரிந்துகொள்வார்களா தமிழ்சினிமாக்காரர்களும் சினிமா பார்வையாளர்களும்.

Saturday, May 21, 2011

வரலாற்றின் மொழி

ஆந்திர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் டாக்டர் பி.டி.சத்யபால் இந்திய மரபார்ந்த வரலாற்றின் பின்னணியில் தன் உரையாடலை நிகழ்த்துபவர். சாதி அதன் தோற்றம் வரலாற்றில் சாதி அடைந்திருக்கும் இடம் என அவர் அடுக்கும் ஆண்டு கணக்குகளும் நிகழ்ச்சிகளும் ஆச்சர்யம் தரத்தக்கன. ஒரு துண்டு காகித குறிப்பும் இன்றி ஒவ்வொரு ஆண்டும் அதில் நடந்த நிகழ்வுகளையும் அவரின் அழகான ஆழமான எளிமையாய் யாருக்கு வேண்டுமானாலும் புரியக் கூடிய ஆங்கிலத்தில் கூறும் போது ஆயிரக்கணக்கான வரலாற்று நூல்களைப் படித்த அனுபவம் கிட்டும்.

இந்திய மக்களின் ஒரே ஒற்றுமையாய் விளங்கும் சாதிய அமைப்பின் தோற்றம் அதன் வளர்ச்சி அது இன்றுவரை அடைந்திருக்கும் பல்வேறு பரிணாமங்கள், பருவநிலை மாற்றங்கள் என அனைத்தையும் அறிவியல்பூர்வமாக தன் உரையாடல் மூலம் அவர் வெளிக்கொணர்கின்றார். பெரும்பான்மை மக்களை குறைந்தபட்ச அளவே உள்ள பார்ப்பனர்கள் எப்படி வரலாற்றின் இடுக்குகளிலெல்லாம் இருந்துகொண்டு ஆட்டிப்படைக்கின்றார்கள் என்பதை சத்யபாலின் உரையில் தெளிவாக நம்மால் உணரமுடியும்.

சாதியற்ற சமூகத்தை உருவாக்க பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் ஒற்றுமையும் வலிமையும் எவ்வளவு அவசியம் என்றும் அதை உருவாக்க இந்திய நிலப்பரப்பெங்கும் எழுந்த தலைவர்கள் அவர்களின் பணிகள் ஆளுமைகள் என ஆண்டின் அடிச்சுவடியோடு அவரின் உரை அமைந்திருக்கும்.

வெற்றுக் கூச்சல் போடும் அரங்காக அது இல்லாமல் அறிவின் ஊற்றாக கற்றுக் கொள்வதற்கான வகுபறையாக புத்தாக்கம் செய்துகொள்வதற்கான இடமாக சத்யபால் அவர்களின் உரை அமைந்திருக்கும்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் உரையாற்றும் திறன் தொடர்ந்து எட்டு மணிநேரங்கள் அவ்வளவு கருத்துகள் சுரக்கும் அறிவார்ந்த தகவல்கள். இப்படிப்பட்ட மனிதரை சந்திக்க அது சரியான தருணம்.

ஒருமுறை அவரின் கூட்டத்தில் பங்கெடுத்துப் பாருங்கள்.

சத்யபால் மீண்டும் சென்னையில் பேசுகின்றார்

நாள்: 28.05.2011
தொடர்பு கொள்ள : ஆர்.ஆர்.சீனிவாசன் 9444065336
மோகன் 99620 71957, 94432 21600

Friday, May 13, 2011

அப்படியே ஆகக்கடவது

அடைவதின் காயத்தை சுமந்து தவிக்கின்றது
தேவனால் கைவிடப்பட்ட
ஆடொன்று
முட்கள் நிறைந்தொரு பள்ளத்தாக்கில்
கம்மிய தன் தொண்டைய
செருமிசெருமி கத்தும் அதன் சன்னக் குரலில்
தாகம் இழையோடுகிறது
ஆட்டைத் தேடிவந்த தேவகுமாரனின்
கண்களில் விழுந்த தூசியை எடுக்க
கானாற்றில் கண்கழுவ போனவனை
கால்களை கடித்து உள்ளிழுத்துக்கொள்கிறது
நீண்ட வாயும் கூரிய பற்களையும் உடைய
முதலை
விழுங்கப்படும் தேவகுமாரனின் கடைசி வார்த்தை
என் கடவுளே என் கடவுளே ஏன் என்னை கைவிட்டீர்
என்பதாம். ஆமென்

Sunday, February 13, 2011

புறாக்களின் கைகளைக் கொத்தி
தின்றுவிட்டு
உதிர்ந்துவிட்டன ஆலிவ்மர இலைகள்
நிழல்கள் எரியும் ஒரு தருணத்தில்
பூத்து இருக்கும் பூவொன்றை
கடித்து சாப்பிட்டுவிட்டு
வேகமாகத் தாவி ஓடுகின்றது
சாமிக்கு நேர்ந்துவிட்ட ஆட்டுக்கிடாய்
கோலங்களை மிதித்து அழித்துவிட்டு
அழுக்கேறிய கால்களோடு நடக்கிறாள்
வீதிக் கம்பங்களில் விளக்கேற்றும் பெண்
புராதனக் கோயில்களின் மேல் அமர்ந்த
கருப்புப் பறவைகள் எச்சமிடுகின்றன
சிதைந்த வெளிச்சுவர் மீதிருக்கும் சிற்பங்கள்மீது
என்னவென்று அறியா கருப்பு மனநிலையில்
இக்கவிதையைப் பிடித்துத்
தொங்கிக் கொண்டிருக்கின்றேன் நான்

Tuesday, November 30, 2010

யாழன் ஆதி: அ. முத்துகிருஷ்ணனின் பயணம் - ஒளியுடன் வழி

யாழன் ஆதி: அ. முத்துகிருஷ்ணனின் பயணம் - ஒளியுடன் வழி

அ. முத்துகிருஷ்ணனின் பயணம் - ஒளியுடன் வழி


சமீபத்தில் அ.முத்துகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு நூல் ஒன்று வந்தது. அருந்ததி ராயின் கட்டுரைகளை மொழிபெயர்த்து எழுதியது.அதன் தலைப்பு தோழர்களுடன் ஒரு பயணம். தூரங்களில் அல்லல்படும் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் அறிவாளர்கள் மத்தியில் முத்துகிருஷ்ணன் தீவிரமான ஆளுமை. தற்போது ஆசியாவிலிருந்து காசாவிற்குச் செல்லும் ஆசிய கண்டத்தின் அறிவாளர்கள் குழுவில் தமிழ் எழுத்தாளர் அ.மு. பங்கேற்கின்றார். டிச.2ந்தேதி டில்லியிலிருந்து அவர் பயணம் தொடர்கின்றது. தரை வழியாக அவர் பாகித்தான். ஈரான், துருக்கி, சிரியா, லெபனன், ஜோர்டன், எகிப்து என பல நாடுகளைக் கடந்து அவர்கள் காசாவை அடைகின்றனர்.

துன்பப்படும் காசா மக்களுக்காகவும் பாலத்தீனத்தின் நிலையை உலகுக்கு உணர்த்தவும் இந்தப் பயணம். இது முக்கியமானது. வழியெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் அம்மக்களுக்காக நிதித்திரட்டும் நிகழ்ச்சிகள் நிவாரணப் பொருட்களைச் சேகரித்தல் எனவும் அவர்கள் நிகழ்ச்சியை வடிவமைத்திருக்கின்றார்கள். மிகவும் போற்றுதலுகுரியது இது. இத்தகைய அறிவாளர்கள் ஒருமுறை இலங்கையை நோக்கியும் செல்லலாம். இந்தியா முழுமையும் உள்ள சேரிகளுக்கும் செல்லலாம் சாதிக் கொடுமையின் தன்மையை உலகுக்கு உணார்த்தும் இத்தகைய பயணத்தை இந்தியாவில் இருக்கின்ற அறிவாளர்கள் இந்தியாவிற்குள்ளாவது நடத்தினார்கள் என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதற்கான முன்னோடிப் பயணமாக இதை நாம் முன்வைக்கலாம். தோழர் முத்துக் கிருஷ்ணன் அதற்கான அனுபவச் சேகரிப்பில் இந்தப் பயணத்தை அவர் தொடர வேண்டும். அவருடைய இந்தக் கனவு, மாந்தநேயப் பணி தமிழ் எழுத்தாளர்களுக்கு கிடைத்த வெகுமானம்.தோழர்களுடன் ஒரு பயணத்தை மேர்கொண்ட முத்துகிருஷ்ணனை வாழ்த்துகிறோம்.

காசா மக்களுக்கு உதவ நினைப்பவர்கள் அ.மு. வைத்தொடர்புகொள்ள வேண்டும். அவருடைய வேண்டுகோளையும் இத்துடன் இணைத்துள்ளோம்



பாலஸ்தீன மக்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக அனுபவித்து வரும் துயரவாழ்வு இன்று உலக மக்கள் நன்கு அறிந்த ஒரு விஷயமே. நம் அவசரமான வாழ்வில் அவர்களின் கதையை செவி மடுத்து கேட்க அவகாசம் இல்லாத அளவுக்கு உலகம் அதிவேகமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. தினந்தோறும் அங்கு பெரும் குண்டு வெடிப்புகளின் ஓசையுடன் தான் அவர்களின் காலை பொழுது விடிகிறது.

கடந்த அறுபது ஆண்டுகளில் தங்களின் சொந்த நிலத்திலேயே அகதிகளாக அலைகழிக்கப்படுவது மட்டுமின்றி மெல்ல மெல்ல தங்களின் நிலத்தையும் பறிகொடுத்து சிறு கீற்றான நிலப்பகுதிகளுக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். சிறு காலனிகளாக குடியேறி மெல்ல மெல்ல பாலஸ்தீன மக்களின் நிலத்தை அபகரித்து இஸ்ரேல் உலக வரைபடத்தில் தன் இருப்பை ஏற்படுத்தி பின்னர் நிலைப்படுத்திக் கொண்டது. 1950கள் முதல் 2010 வரையிலான உலக வரைபடங்களை சேகரித்து அதனை ஒப்பிட்டு பார்த்தால் இந்த உண்மை யாவருக்கும் விளங்கும்.

15 லட்சம் மக்கள் வாழும் காசா பகுதி இருப்பதிலேயே மிகவும் துயர மேகங்கள் சூழ்ந்த பகுதி. இந்த காசா மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பாலஸ்தீனத்தின் நிலையை உலகிற்கு எடுத்துரைக்கவும் ஒரு பயணத்தை மேற்கொள்வது என ஆசியாவில் உள்ள முற்போக்காளர்கள் சிலர் தீர்மானித்த அது இப்பொழுது செயல் வடிவம் பெற்றுள்ளது..

எகிப்தின் அல்-அரீஷ் துறைமுகத்திலிருந்து கப்பலில் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு காசாவை சென்றடைந்து பயணக் குழு 2011 புத்தாண்டை அந்த மக்களுடன் கொண்டாட இருக்கிறது.

பாலஸ்தீன நிவாரண நிதிக்காக மக்களிடம் நன்கொடைகளை திரட்டி வருகிறோம். இந்த நிதி துயருற்ற மக்களுக்கானது, மருந்துகள், கட்டுமான பொருட்கள் என அவர்களின் அன்றாடங்களை சீர்படுத்தும் பல பொருட்களை வாங்குவதற்கு இந்த நிதி செலவிடப்படும்.

நிதி அளிக்க விருப்பம் உள்ளவர்கள்



A.MUTHUKRISHNAN +919443477353 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது பணத்தை A.MUTHUKRISHNAN State Bank of India SB A/C no 30322814376 வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தலாம். அல்லது A.MUTHUKRISHNAN பெயரில் காசோலை எடுத்து அனுப்பலாம்.



துயருற்ற மக்கள் மீது நிஜமான அக்கறையும் மனித அவலங்கள் குறித்து மனசாட்சியும் விழிப்புணர்வும் உள்ள அனைவரும் தங்களால் ஆன நிதியை அளிக்க வேண்டுகிறேன்



அ.முத்துகிருஷ்ணன்

Friday, October 15, 2010

வழிதல்


நீரற்ற பெருவெளியெங்கும்
அலைந்த கால்கள்
திணறும் நடுநேரத்தின் வெப்பத்தில்
திளைக்கும் உடல்கள்
களைத்திருந்தன
கால்களின் வழியேறிய வெம்மையின்
திறவுகோல்களை சுழற்றி வீசிய
விரல் பிடித்து அனுப்புகின்றேன்
உன்னை.