Wednesday, December 17, 2008

தமிழ் படைப்பாளிகளின் கவிதைப் போர் : காலத்தின் எழுத்து

காலத்தின் நீண்ட மௌனத்தை எறிந்து தங்கள் குரலைப் பதிவு செய்து இருக்கின்றனர் தமிழின் தீவிர படைப்பாளிகள். அரை நூற்றாண்டாய் துயரத்தின் மீது தகிக்கும் ஈழத்தமிழர்களின் இன்னல்கள் பதினேழு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்ற தமிழர்களின் மனங்களில் ஆழமான பாதிப்பினை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. தொடக்க காலங்களில் இலங்கையில் வெலிக்கடைச் சிறையில் அநியாயமாகக் கொலை செய்யப்பட்ட குட்டிமணி ஜெகன் மறைவுக்குப் பிறகு ஒரு பெரும் எழுச்சி ஈழத்தமிழர் பிரச்சனையில் இங்குள்ள தமிழருக்கு ஏற்பட்டது. அது தமிழக அரசியலில் ஒரு பகடைக்காயாக மாற்றப்பட்டது. அதற்குப் பிறகு தமிழ் தேசியம் பேசும் இயக்கங்கள் மட்டுமே ஈழப்பிரச்சனையில் தொடர் அக்கறையை செலுத்தி வந்தன என்றால் அது அவ்வளவு தவறில்லை. கொடுங்கனவாய் முடிந்துப் போன ராசீவ் காந்தி மரணத்துக்குப்பிறகு ஈழத்தமிழர் பிரச்சனைப் பற்றிப் பேசுவது அனேகமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது எனலாம்.
துன்பப்படும் மக்கள்துயரின் காத்திரத்தைப் பேசினால் கூட விடுதலைப் புலிகளின் ஆதரவாக அது மாற்றப்பட்டது. வைகோ,நெடுமாறன் போன்றோர் பேசியதற்காகவே நெடு நாளைய சிறை தண்டனையைப் பெற்றனர். பிறகான காலக்கட்டங்களில் எத்தனையோ அழிவுகளை சிங்கள பேரினவாத ராணுவம் தமிழ்மக்கள் மீது நடத்தியது. யாழ் நூலக அழித்தொழிப்பு,செம்மணி புதைகுழி,செஞ்சோலைக் குழந்தைகள் படுகொலை என்று பட்டிலிடமுடியாத எத்தனையோ அழிசெயல்களை இலங்கை ராணுவம் செய்தது. உலக அரங்கில் அதற்குப் பின் இப்போது ஈழத்தில் நடந்துவரும் கடும்போரில் தமிழருக்கு ஏற்பட்ட பேரிழப்புகள் எல்லாம் இங்குள்ளவர்களின் மனசாட்சியை உலுக்க திரண்டது மக்கள் எழுச்சி.ஒரு சில அரசியல் கட்சிகள் தவிர மற்றைய கட்சிகள் தமிழீழம் என்ற கருத்தி உடன்பாடில்லாத இடதுசாரிகள் கூட இந்த எழுச்சியில் பெரும் அக்கறைக் காட்டினர். தீவிரமாக அரசும் இதில் கவனம் செலுத்தியது. அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தி போர் நிறுத்தத்தை வேண்டி மத்திய அரசை வலியுறுத்தியது.
இந்நிலையில் தமிழ்த்திரையுலகின் போராட்டம் குறிப்பிடத்தக்கது.அக்டோபர் 19ந் தேதி ராமேஸ்வரத்தில் நடைப்பெற்ற திரை உலக போராட்டத்தில் ஏற்பட்ட எழுச்சி தமிழ் மக்கள் உள்ளத்தில் உள்ள அச்ச உணர்வினை நீக்கியது. இயக்குனர்கள் சீமான்,அமீர் போன்றோரின் வரலாற்று ரீதியான அரசியல் விரவிய உரை தமிழ் இளைஞர்கள் மட்டுமல்ல பொதுமக்கள் உள்ளத்திலும் பொதுவான அறத்தன்மையை ஏற்படுத்தியது. அதற்குப்பிறகான அனைத்துக் கட்சியின் தமிழர் சங்கிலிப் போராட்டம் கொட்டும் மழையில் 100 கி.மீ தூரத்திற்கு நடைபெற்றது.
தொடர்ந்துப் பல்வேறு மக்கள் அமைப்புகள் ஈழத்தமிழர்களின் ஆதரவுக்குரலை உயர்த்தியது.ஆனால் அறிவுலகம் எனப்படும் படைப்பாளிகள் அடர்ந்த மவுனத்தைக் கடைப்பிடித்தனர். பாப்லோ நெரூடா, மொகமத் தார்வீஷ் போன்றோரின் கவிதைகளையும் சேகுவேராவின் புரட்சியையும் சாவேசின் அமெரிக்க எதிர்ப்பையும் சிலாகித்து பத்திகளாக கட்டுரைகளாக எழுதிக்குவிக்கும் தமிழ் எழுத்துலகம் தலித்துகளின் மீதான வன்முறையானாலும் சரி வேறுஎந்த பிரச்சனையிலும் தன்னை உட்படுத்திக்கொள்ளாத எச்சரிக்கை உணர்வுடனேதான் இயங்கிவந்திருக்கிறது. 19 ஆண்டுகாலமாக தலித் மக்களைப் பிரித்துவைத்த உத்தபுரத்தின் சுவர் வெளிச்சத்திற்கு வந்தபின் எத்தனை தமிழ் படைப்பாளிகள் தங்கள் வருத்தத்தையோ கோபத்தையோ பதிவு செய்தனர்? கயர்லாஞ்சியின் கொடுமைக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்து குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டும் படைப்பாளிகள் ஒரு இயக்கமாகி ஏதும் சொல்லவில்லை.அதே போல ஒரிசா கர்நாடகாவில் கிறித்தவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை படைப்பாளிகள் அரங்கம் கண்டுகொள்ளவில்லை.
உலக அளவிலான வன்முறைகளயும் விடுதலைப்போராட்டங்களையும் மாங்கிமாங்கி எழுதும் நம் படைப்பாளிகள் நம் மொழியைப் பேசுகின்ற சொந்த சகோதரர்கள் துன்பப்படும்போது வாய்மூடி இருப்பதான கோரம் வேறு எதுவுமில்லை.
அதைத்தான் இக்கட்டுரையின் முதலில் சொல்லியிருந்தேன்.மவுனத்தைக் கலைத்த கவிஞர்கள் லீனா மணிமேகலைக்கும் சுகிர்தராணிக்கும் நன்றியைத் தெரிவிக்கலாம்.
இவர்கள் ஒருங்கிணைத்த தமிழ் படைப்பாளிகள் பங்கேற்ற கவிதைப் போராட்டம் சென்னை காந்தி சிலை அருகில் நடைப்பெற்றது. காவல்துறையின் அனுமதிப் பெறுவதற்கு பெரும்பாடு பட்டதாக அவர்கள் கூறியது தமிழ்நாட்டில் தமிழர்களாகத்தான் நாம் வாழுகிறோமோ என்ற அய்யத்தை எழுப்பியது. அதற்கான நிபந்தனைக் கடிதத்தையும் படித்தபோது அந்த உணர்வு இன்னும் மேலோங்கியது.
தமிழ் படைப்புத்தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் முக்கிய படைப்பாளிகள் அனைவரும் வந்திருந்தனர். ராமேசுவரத்திலிருந்தும் இன்னும் பல மூலைகளிலிருந்தும் படைப்பாளிகள் வந்திருந்தது சிறப்பு. எந்தவிதமான அறிக்கையோ சுவரொட்டியொ இல்லாமல் வெறுமனே தொலைபேசி, குறுஞ்செய்திகள் ஆகியன மூலமே தகவல் பரப்பப்பட்டு இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்குத் தலைமை என்று எந்த அரசியலும் இல்லாமல் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்று சனநாயகத்தன்மை இருந்தது படைப்பு நேர்மையைக் காட்டியது.
கனிமொழியும் தமிழச்சியும் மிகவும் தங்களுக்குரிய அரசியல் அதிகாரங்களைத் துறந்து படைப்பாளிகள் என்ற அடிப்படையில் இந்த நிகழ்வில் பங்காற்றியது அடுத்த தலைமுறை அரசியலின் போக்கை கணிக்கவைத்தது.
எழுத்தின் ஆங்காரத்தோடு ஒரு பயணியாக அறியப்படும் கோணங்கி நவீன கவிதைத் தளத்தில் மட்டுமே இயங்கக்கூடிய இன்னும் பிற கவிஞர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்றதும் குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமான கவிஞர்களும் எழுத்தாளர்களும் இந்த நிகழ்வில் பங்காற்றியது பெருமைக்குரியதும் பொறுப்பானதும் ஆகும்.

Tuesday, December 2, 2008

தமிழ்க் கவிஞர்களின் குரல் ஒலிக்கும் தருணம்

நாள் : 07.12.08
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
காந்தி சிலை அருகில், மெரினா கடற்கரை, சென்னை


நவீன தளத்தில் இயங்கக்கூடிய தமிழ் கவிஞர்கள் முதல் முறையாக சென்னையில் ஒரு கூடுகையை நடத்துகின்றனர். வெறுமனே பயிற்சி பட்டறைகளையும் குளிரூட்டப்பட்ட
அறைகளில் கவிதைகளை வாசித்தும் நிகழும் நிகழ்ச்சியாக இல்லாமல் புது தளத்திலே இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல இந்த நிகழ்ச்சி
ஒருநாள் முழுக்க சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறவுள்ளது. 100 கவிஞர்கள் கவிதைகளை வாசிக்கப்போகின்றனர். ஈழத்தில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் இனப்படு
கொலையின் கோரத்தை அதன் கொடூர மனப்போக்கை மொழி இனம் தேசம் என்ற எல்லைகளைக்கடந்து மனிதர்கள் என்னும் அடிப்படையில் அங்கு போர் நிறுத்தம் நடைமுறைப்
படுத்தப்பட வேண்டும் என்றும் இந்த ஒரு நாள் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது.
ஈழப்பிரச்சனையில் இந்தியா தலையிடக் கோரி பல்வேறு நிலைகளில் அரசியல் அரங்குகளில் தற்போது போராட்டங்கள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன. திரையுலகினில் பல
மட்டங்களில் இதற்கான போராட்டங்கள் நிகழ்ந்தன. அதுமட்டுமல்ல தங்களின் இனவுணர்வினால் அரசின் கெடுபிடிகளால் இயக்குனர்கள் சீமான்,அமீர் போன்றோர் கைது செய்யப்பட்டு
இன்றுவரை வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் அறிவுச்சூழலிலிருந்து எந்தக் குரலும் இதற்காக ஒலிக்கவில்லை என்ற வெற்றிடம் நிரம்பியிருந்தது.
மொழியின் குழைவுகளிலும் அதன் தீராத சமவெளிகளிலும் தங்களைக் கட்டமைக்கிற படைப்பாளிகள் ஏன் இப்படி அமைதிக்காக்கின்றனர் என்ற கேள்வி வாசகத்தளத்திலும்
இருந்துவந்தது. நடிகர்களுக்கு இருக்கும் உணர்வு வெளிப்பாட்டுத் தன்மை உணர்வுகளையே வாழ்வாகக் கொண்டு படைப்புக்கலனாகக் கொண்டு இயங்கும் தமிழ் படைப்பாளிகளுக்கு
இல்லையோ என்ற ஏக்கம் இருந்தது.
அந்த எதிர்ப்பார்பை நிறைவு செய்யும் வகையில் மட்டுமில்லை உள்ளப்பூர்வமாக படைப்பாளிகள் வெறும் காகிதத்தில் மட்டுமில்லை தேவையானால் களத்தில்கூட இறங்கக்கூடியவர்கள்
என்ற பொறுப்பினை உலகுக்கு எடுத்துக்காட்ட சில பெண் படைப்பாளிகள் ஒன்று கூடி இந்த நிகழ்ச்சிக்கான முன்கையை எடுத்து தொடர்ந்து செயலாற்றிவருகின்றனர்.அவர்கள்
பாராட்டுக்குரியவர்கள். நாம் வேண்டுகின்ற நியாயமான பெண் தலைமை இங்குதான் தொடங்குகின்றது என்று நான் கருதுகிறேன்.அதற்காகவே இந்தப் போராட்டத்தில் அனைவரும்
கலந்துக்கொள்ளவேண்டும் என்பதும் அவா. கோரிக்கையின் நியாயம் வலியுறுத்துகிற அவசியம் மிகவும் முக்கியமானது. நெடுங்காலம் அவதியுறுகிற மக்களின் பின்னால் நிற்பது
மனிதத்தன்மை. அதனடிப்படையிலும் இந்த நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
நர்மதா நதிப்பிரச்சனையிலும் காஷ்மீர் பிரச்சனையிலும் அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்குறித்த பிரச்சனையிலும் தன்னுடைய கருத்தினை வலுவாக வைத்து ஒரு எழுத்தாளர்
எவ்வளவுதான் புகழ் அடைந்திருந்தாலும் அதை தூக்கி தூரவைத்துவிட்டு துயரப்படும் மக்களுக்காக பாடு எடுக்கக்கூடிய பண்பு அருந்ததிராயின் ஆளுமையை வெளிபடுத்தியது. அவருடைய
கருத்துக்களால் அப்பிரச்சனைகள் மீதான கவனத்தின் வெளிச்சம் மிக அதிகமாக குவிக்கப்பட்டது. அந்த வகைமையில் இப்போது ஈழத்தமிழ் மக்களுக்காக தமிழ் இலக்கிய படைப்பாளிகள்
தங்கள் குரல்களை படைப்புகளின் வழியாக வெளிப்படுத்த ஒரு போராட்ட வடிவமாக கவன ஈர்ப்பின் குவிமையமாக அது அமைய இருக்கிறது
இத்தகைய நிகழ்வுகள் தமிழ் இலக்கிய உலகில் மட்டுமல்ல உலகளாவிய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வடிவமாக மாற இருக்கிறது. உலக தமிழர்களின் கவனத்தை
ஒரு புள்ளியில் மையப்படுத்தும் இந்நிகழ்வு தமிழ் இலக்கிய உலகில் மட்டுமல்ல அரசியல் தளத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தலாம். இதற்கான முன் முயற்சியில் ஈடுபட்டுள்வ்ள தோழர்கள்
ஒவ்வொருவரும் போற்றுதலுக்குரியோர்.போற்றுகிறோம்.

Monday, November 24, 2008

ஆயிரம் ஆண்டுகள் அன்புடன் வாழ்க


திருமணவிழாவில் யாழன் ஆதி





அன்பிற்கினிய நண்பர் கவிஞர் யுகபாரதியின் திருமணம் 23 நவம்பர் 2008 அன்று தஞ்சையில் நடைபெற்றது. மனசுக்கு மிக அண்மையில் வெகு எளிதாக குடியேறும் யுகபாரதிக்கு ஏராளமான நண்பர்கள். என்னுடைய இரண்டாம் தொகுப்பான ‘செவிப்பறை’ நூல் வெளியீட்டு விழாவிற்கு அவரை அழைத்தேன். ஏற்கெனவே என் கவிதைகள தலித் முரசிலும் பிற இதழ்களிலும் படித்திருந்த யுகபாரதி அன்புடன் அதற்கு ஒப்புக்கொண்டு வந்திருந்தார். தொடர் வண்டியில் இடம் கிடைக்காமல் பொருட்களை வைக்கும் இடத்தில் ஏறி உட்கார்ந்துக் கொண்டு வந்திருந்தார். எந்த சூழ்நிலையிலும் தன்னையும் தன் புன்னகையையும் இழக்காதவர் யுகபாரதி. திருமணத்திலும் அப்படியே இருந்தார். தமிழகத்தின் முக்கியமான தலைவர் அய்யா நல்லக்கண்ணு மற்றும் அவருடைய துணைவியார் ரஞ்சிதம்மாள் தலைமையில் திருமணம் நடைபெற்றது. தமிழ் இலக்கிய மற்றும் திரைப்பட முன்னணியினர் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.இயக்குனர்கள் லிங்குசாமி, சுப்ரமணியம் சிவா, பாலாஜி சக்திவேல், கரு.பழனியப்பன், சேரன் ஆகியோர் வந்திருந்தனர். பாடலாசிரியர்கள் வைரமுத்து, நா. முத்துக்குமார் போன்றவர்களும் கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், தமிழச்சி. லீனா மணிமேகலை, இசையமைப்பாளர் வித்யாசாகர், எழுத்தாளர் நாகூர் ரூமி, திரு.வீரபாண்டியன் ஆகியோரும் வந்திருந்தனர். தமிழகம் முழுக்க ஏராளமான நண்பர்கள் வாசகர்கள் படைப்பாளிகள் கலந்துக்கொண்டு யுகபாரதியையும் மணமகள் அன்புச்செல்வியையும் வாழ்த்தினர்.
தன்னுடைய சொந்த மண்ணிலே மணவிழாவை நடத்தினார் யுகபாரதி. அவர்களுடைய உற்றார் உறவினரின் மண்வாசம் அந்த மணவிழா முழுவதும் இருந்தது. அவர் தன் தாய்மேல் வைத்திருந்த அபரிதமான அன்பும் நம்பிக்கையுமே அவரை இவ்வளவு உயரத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது என்று பேசியவர்கள் அனைவரும் கூறியது உண்மையாகத்தான் இருந்தது. அந்தத் தாய் தன் மகனை சான்றோன் எனக் கேட்டவர். ஆயிரம் ஆண்டுகள் யுகபாரதி ‘அன்புடன்’ வாழவேண்டும்.
தமிழ் கவிஞர்களின் வேடந்தாங்கல் அண்ணன் அறிவுமதி மணவிழாவில் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அறிவுமதியை யுகபாரதி திருமணத்தில் சந்தித்தேன். அதே தாயுள்ளத்தோடு என்னை எல்லாரிட்த்திலும் ‘ஏந்தம்பி’ என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.
எல்லாருக்கும் மனநிறைவான மணவிழா யுகபாரதியினுடையது.
அன்பிற்கினிய நண்பர் கவிஞர் யுகபாரதியின் திருமணம் 23 நவம்பர் 2008 அன்று தஞ்சையில் நடைபெற்றது. மனசுக்கு மிக அண்மையில் வெகு எளிதாக குடியேறும் யுகபாரதிக்கு ஏராளமான நண்பர்கள். என்னுடைய இரண்டாம் தொகுப்பான ‘செவிப்பறை’ நூல் வெளியீட்டு விழாவிற்கு அவரை அழைத்தேன். ஏற்கெனவே என் கவிதைகள தலித் முரசிலும் பிற இதழ்களிலும் படித்திருந்த யுகபாரதி அன்புடன் அதற்கு ஒப்புக்கொண்டு வந்திருந்தார். தொடர் வண்டியில் இடம் கிடைக்காமல் பொருட்களை வைக்கும் இடத்தில் ஏறி உட்கார்ந்துக் கொண்டு வந்திருந்தார். எந்த சூழ்நிலையிலும் தன்னையும் தன் புன்னகையையும் இழக்காதவர் யுகபாரதி. திருமணத்திலும் அப்படியே இருந்தார். தமிழகத்தின் முக்கியமான தலைவர் அய்யா நல்லக்கண்ணு மற்றும் அவருடைய துணைவியார் ரஞ்சிதம்மாள் தலைமையில் திருமணம் நடைபெற்றது. தமிழ் இலக்கிய மற்றும் திரைப்பட முன்னணியினர் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.இயக்குனர்கள் லிங்குசாமி, சுப்ரமணியம் சிவா, பாலாஜி சக்திவேல், கரு.பழனியப்பன், சேரன் ஆகியோர் வந்திருந்தனர். பாடலாசிரியர்கள் வைரமுத்து, நா. முத்துக்குமார் போன்றவர்களும் கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், தமிழச்சி. லீனா மணிமேகலை, இசையமைப்பாளர் வித்யாசாகர், எழுத்தாளர் நாகூர் ரூமி, திரு.வீரபாண்டியன் ஆகியோரும் வந்திருந்தனர். தமிழகம் முழுக்க ஏராளமான நண்பர்கள் வாசகர்கள் படைப்பாளிகள் கலந்துக்கொண்டு யுகபாரதியையும் மணமகள் அன்புச்செல்வியையும் வாழ்த்தினர்.
தன்னுடைய சொந்த மண்ணிலே மணவிழாவை நடத்தினார் யுகபாரதி. அவர்களுடைய உற்றார் உறவினரின் மண்வாசம் அந்த மணவிழா முழுவதும் இருந்தது. அவர் தன் தாய்மேல் வைத்திருந்த அபரிதமான அன்பும் நம்பிக்கையுமே அவரை இவ்வளவு உயரத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது என்று பேசியவர்கள் அனைவரும் கூறியது உண்மையாகத்தான் இருந்தது. அந்தத் தாய் தன் மகனை சான்றோன் எனக் கேட்டவர். ஆயிரம் ஆண்டுகள் யுகபாரதி ‘அன்புடன்’ வாழவேண்டும்.
தமிழ் கவிஞர்களின் வேடந்தாங்கல் அண்ணன் அறிவுமதி மணவிழாவில் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அறிவுமதியை யுகபாரதி திருமணத்தில் சந்தித்தேன். அதே தாயுள்ளத்தோடு என்னை எல்லாரிட்த்திலும் ‘ஏந்தம்பி’ என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.
எல்லாருக்கும் மனநிறைவான மணவிழா யுகபாரதியினுடையது.

எண்தேர் செய்யும் தச்சன்


2008 ஆகத்து மற்றும் அக்தோபர் தலித் முரசு இதழ்களில் தலித்சூழலில் ஒரு புதிய உரையாடலைத் துவக்கியிருக்கிறார் பேராசிரியர் அய்.இளங்கோவன். வேலூர் ஊரிசுக்கல்லூரியின் ஆங்கிலத்துறைத் தலைவாராக இருக்கும் இவர் சில நேரங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பாக பேசப்படுவர். அப்படி தொற்றிக்கொள்ளும் பரபரப்பின் அழுத்தத்தில் அன்றைய மாலை இதழ்கள் மற்றும் மறுநாளைய காலை இதழ்களில் உயர்நீதிமன்ற முக்கியமான தீர்ப்பினை படிக்கலாம். ஒரு இயக்கம் செய்ய வேண்டிய அனைத்துப் பணிகளையும் தான் ஒருவரே இழுத்துப்போட்டுக்கொண்டுச் செய்யும் அவரின் தனித்தன்மை எண்ணற்கரியது. நிரப்பப்படாமல் இருந்த 500 க்கும் மேற்பட்ட தலித்துகளுக்கான விரிவுரையாளர் பதவியை போட வேண்டி இவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில்தான். ஆனால் தமிழக அரசு தானே வழங்கியதாக தம்பட்டம் அடித்துக்கொள்வது கொடுமை. புதிய புதிய செய்திகளைச் சிந்தித்து அவற்றை நடைமுறைப் படுத்த தேவையான தரவுகளைத் திரட்டிக் கொண்டு நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டும் இவர் தயாரித்த வழக்கின் பிரதிகள்.
எழுத்தால் அசைக்க முடிந்த நீதியின் இருண்ட பக்கங்களை தன் பலங்கொண்ட மட்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் திருப்ப நினைப்பவர் அய்.இளங்கோவன்.தன்னுடைய வருவாயின் பாதிக்குமேல் அதற்காகவே பயன்படுத்துபவர்.


மேற்கூறிய இதழகளில் காலங்காலமாய் பேசப்பட்டுவந்த இடஒதுக்கீட்டின் பயன்பாட்டினால் ஏற்பட்ட குறைந்த பட்ச மாற்றங்களினால் பிரதித்துவம் என்ற சனநாயக அமைப்பு காப்பாற்றப்பட வேண்டும் என்ற அறைகூவல் பொது புத்தியை நோக்கி விடப்பட்டுள்ளது.தனியார் துறைகளில் இடஒதுக்கீடு கேட்பது என்பது எவ்வளவு நியாயம்? இன்றைக்கு அமெரிக்க வெள்ளை மாளிகையில் கறுப்பினத்தைச் சார்ந்த ஒபாமா கோலோச்ச வருவது என்ற மாற்றம் இன்று நேற்று வந்ததல்ல. ஆப்பிரிக்க அமெரிக்க கருப்பின மக்கள் அடிமைகளாய் இருக்கிறோம் என்று உணர்ந்த காலத்திலிருந்து தொடங்கியது அது. மார்டின் லூதர்கிங், மால்கம் எக்ஸ் போன்ற போராளிகள் எத்தனையோ கறுப்பின எழுத்தாளர்கள் நெல்சன் மண்டேலா போன்றோர் ஏற்படுத்திய எழுச்சிதான் அது. அங்கே கொஞ்சம் கொஞ்சமாய் கறுப்பின மக்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டன. தனியார் துறைகளில் ஜி இ சி போன்ற பெரும் நிறுவனங்களில் எல்லாம் நிர்வாக அமைப்பில் கறுப்பின மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவற்றின் உச்சப்பட்சமாகத்தான் ஒபாமாவின் தேர்வு.ஆனால் இத்தகைய நிலை இந்தியாவில் இல்லை. தலித் மக்கள் தங்களின் பிரதிநிதித்துவத்தை அரசுத்துறைகளில் மட்டுந்தான் கேட்கிறார்கள். அதுவே இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. தனியார் துறை இடஒதுக்கீடுப் பற்றி பேசப்பட்ட்து. பல்வேறு உயர்சாதி பார்ப்பன பனியா நிறுவனங்கள் தகுதி திறமை என்ற சொற்களை வைத்து அரசின் வாயை அடைத்துவிட்டது. தமிழகத்தில் மட்டும் இன்னும் 17 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் விடியலை சுமந்து வரும் ஒற்றைச் சூரியனைப்போல ஒரு குரல் ஓங்கிக் கேட்கிறது. இடஒதுக்கீட்டின் நிலை சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களில் எப்படியுள்ளது? முழுமையாக நிறைவேற்றப்படுகின்றதா? உரிமைகளுக்காக போராடும் இந்தியச் சிறுபான்மையர்கள் தலித் மக்களின் உரிமைகளை மதித்தார்களா என்பது தான் அந்தக் குரல். சிறுபான்மை மக்கள் நடத்தும் நிறுவனங்களில் யாரும் தலையிட முடியாது என்ற தருக்கம் தாண்டி அறங்களை தன் பக்கம் வைத்துக்கொண்டுதான் அது தனித்து துணிந்து உரைக்கிறது.மக்களால் தரப்படும் வரிப்பணத்தில் பெறப்படும் சலுகைகளின் அடிப்படையில் இந்நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. அரசின் சாலைகள், அரசு தரும் ஊதியம் இவற்றைப் பயன்படுத்தும் இந்த நிறுவனங்கள் தங்களை சிறுபான்மை மக்களுக்கானவைகளாக மட்டுமே காட்டிக்கொள்கின்றன. இன்னும் சொல்லப் போனால் தங்களுக்கு எதிரானவர்களையே தலைமைப்பொறுப்புகளுக்கும் கொண்டுவைத்திருக்கின்றன என்றால் அது பொய்யில்லை.
இத்தகு சூழ்நிலையில் தான் திரட்டிய தரவுகளை முன்வைத்து சிறுபான்மை நிறுவனங்கள் எங்ஙனம் தலித்துகளின் உரிமைகளுக்கும் அவர்களுக்கான பிரதிநிதித்துவ முன்னுரிமைக்கும் இடைஞ்சலாக இருக்கின்றன என்பதை தெள்ளிதின் கூறியுள்ளார். அது முழுமையும் உண்மையாகவும் மறுக்கமுடியாத்தாகவும் இருக்கிறது என்பது அப்பட்டமான மெய். பேரா.அய்.இளங்கோவன் அவர்களின் இத்தகைய தனித்துவமான உண்மைக்காய் ஓங்கி ஒலிக்க கூடிய குரல் மனசாட்சியின் சத்தமாய் வீறிட்டு கிளம்பி நீதிமன்றத்தின் தீர்ப்பு மேசைகளில் அசைகிறது. இதுவரை எத்தனையோ பொதுநல வழக்குகளில் வெற்றிப் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மைகளை தந்தாலும் தன்னை முன்னிருத்திக் கொள்ளாத அவரின் பெருந்தன்மை மிகுந்த போற்றுதலுக்குரியது.
புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதைப்போல தேரை பின்னுக்குத் தள்ளாமல் முன்னுக்குத்தள்ளுவதில் முதன்மயான்வராகவும் புதிய புதிய தேர்களைச் செய்யக்கூடியவராகவும் விளங்கிவருபவர் பேரா.அய்.இளங்கோவன் அவர்கள்.

Wednesday, November 19, 2008

பேசுவதற்கான ஓர் உரையாடல்




எத்தனையோ பாடல்களை உங்களால் சிலாகிக்க முடியும். ஆனாலும் அவற்றின் நுனியில் அமர்ந்துக் கொண்டு வாலாட்ட முடியாது அதுபோலத்தான் எல்லாம் தெரிந்திருந்தாலும் உங்களுக்கு ஏதும் தெரியாது என்று காலம் சொல்லிவிடும். எனவே ஜாக்கிரதையாக உங்களால் பேச முடியும் என்றால் பேசலாம். மதுவருந்தும் பழக்கம் உங்களிடம் இருப்பின் தாராளமாக நீங்கள் குடிக்கலாம். அதில் ஆண் பெண் வேறுபாடு என்று எதுவும் இல்லை. இங்கே அரவாணிகளும் வரலாம். அவர்கள் எந்த காரணத்தைக்கொண்டும் தனித்தோ வெட்கப்பட்டுகொண்டோ இருக்கவேண்டியதில்லை. ஓரினப்புணர்ச்சியின் ஆதரவாளர்களும் இங்கே உண்டு. என்ன கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவ்வளவுதான். அப்படி என்ன அங்கே பேசப்போகிறீர்கள் என்ற கேள்வி உங்களுக்குள் ஒரு புகையைப்போல எழுகிறது என்பது எனக்குத்தெரிகிறது. ஆனாலும் புகையை ஆகாயம் நோக்கி அனுப்பாதீர்கள். ஆது மேலே ஏற்றப்பட்ட வானூர்தியின் வால் என்றோ அல்லது அது சென்ற வழித்தடத்தின் அடையாளம் என்றோ பார்க்கிற சிறுவர்கள் கருதிவிட கூடும். எனவே உங்கள் கேள்விகளை கமுக்கமாக அமுக்கிவையுங்கள். இல்லையெனில் உங்களுக்கு கேட்கவே தெரியாது என்பது போல பாவணையைச் செய்யுங்கள். அது உங்களுக்கு ரொம்ப நல்லது. ஏனென்றால் கேள்விகளால் என்ன இருக்கிறது. எதற்காக வந்தோம் என்பதுபற்றி கவலைபடாதீர்கள். அது அழைத்தவர்களுக்கு.பேசவந்துவிட்டபின் ஒருபோதும் நீங்கள் அழைத்தவர்களின் முகத்தை பார்க்கலாகாது. அது உங்கள் பேச்சின் திசையை மாற்றிவிடுவதற்கும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது.
முதல் சந்திப்பிலேயே அனைத்தையும் பேசிவிட முடியாது. அதனால் அடுத்த சந்திப்பிற்கான தேதியைக் குறிப்பதற்கு ஒரு அரை மணி நேரத்தை செலவிடவேண்டும். அதற்குள் தேநீர் குடித்துவிட்டு வந்துவிடலாம். தேநீர் குடிக்கையில் அது முக்கிய நகரமாக இருப்பதனால் அதுவும் தொடர்வண்டி நிலையத்திற்குள் சென்றுவரும் சாலையாக இருப்பின் அழகழகான பெண்கள் வந்தால் மனசுக்குள் ரசிக்கலாம். இல்லையென்றால் மசாலா தேநீர் சும்மா இருக்காது. வாயைச் சுடும். எந்த முடிவும் இன்றி வந்துவிட முடியுமெனின் நீங்கள் கலந்துக்கொண்ட பேச்சுவார்த்தை சரிதான். உங்களின் தைரியம் பாராட்டப்படவேண்டியது. இல்லை என்றால் இவ்வளவு செலவு செய்து ஒரு உரையாடலில் உங்களால் பங்கேற்க இயலுமா?
சரி அடுத்த கட்டம் என்ன உங்கள் கதையில். ஒரு பாட்டுதான். சரியான தமிழ்சினிமா பைத்தியமாக இருக்கவேண்டும். என்ன செய்வது எழுதுவது என்பதே பைத்தியத்தனமையோடு தொடர்புக்கொண்டதுதான். பாட்டு என்றால் நீங்கள் நினைக்கிற மாதிரியெல்லாம் சுவிஸ் நாட்டுக்கு சென்று மாடு மேய்க்கிற உடையணிந்து பாடுவது இல்லை. நம்மூரிலே இருந்துக்கொண்டுதான் பாட வேண்டும். பாட்டு முடிந்துவிட்டது. அருமையான பாடல். இசை அமைத்து பாட்டு எழுதியதே நான் தான். இல்லையென்றால் இவ்வளவு அழகாக வருமா? மீண்டும் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. மழை ஆரம்பமாகிவிட்டது. இதற்குமேல் வெளியே போகமுடியாது. மீண்டும் பேசிதான் ஆகவேண்டும்.மழை எப்போது விடும்? விடும்வரை இங்குதான் இருக்கவேண்டுமா? கேள்விகள் துளைத்தன. என்ன இருந்தாலும் இப்படி ஆகியிருக்கக் கூடாது!
இலேசாக பூட்டிவிட்டு வெளியே வந்தோம். எதற்காக பேசினோம் என்று படிகளில் இறங்கும்போதே பேசிக்கொண்டே வந்தோம். மழை நின்ற பாடில்லை. அவரவர் மழைக்கோட்டுகளை அணிந்துக்கொண்டு இரு சக்கர வாகனங்களை வெளியே தள்ளினார்கள். மழை நின்றாலும் இனி பேச முடியாது. ஏன் சொல்லுங்கள். வேறென்ன எல்லோரும் போய்விட்டார்கள்.நானும் அந்த அழகிய குட்டிக் காரில் ஏறிக்கொண்டேன். வழியெல்லாம் பேசினோம் நாங்கள் மட்டும். தோழர் காரை மிகவும் சரியாகவும் லாவகமாகவும் ஓட்டினார்கள். பத்திரமாக நனையாமல் வீடு வந்து சேர்ந்தேன். அடுத்து பேசுவதற்கு கூப்பிட்டால் தட்டாமல் போய்விட வேண்டும்.

Sunday, October 26, 2008

கருத்துரிமை என்னும் மாயை

எந்த சூழலும் நம் மனத்தின் சிந்தனைகளயும் வாழ்வின் விழுமியங்களயும் மாற்றிவிடாமல் பார்த்துக்கொள்வது சரியானது. இல்லையென்றால் கருத்தும் எழுத்தும் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். இதைவிட மோசம் என்னவெனில் எதைப்பற்றி ஒரு காலத்தில் பேசுகிறோமோ அதற்கு எதிராக பேசவேண்டி வரலாம். இல்லையென்றால் முன்பு எதிர்த்ததை தற்போது ஆதரிக்க வேண்டிய அவசியமும் வரலாம். இதனால் மலிவான அரசியல்தனம் நம்முள் குடியேறலாம். காலங்கள் மாறுவதுப்போல கருத்துக்களும் மாறுவது நியதிதானே என்று பேசுவது நியாயமானதுதான். ஆனால் ஒரு குறிப்பிட்ட கருத்தின் மீது நாம் கொண்ட ஆழமான நம்பிக்கை என்பது மாறாததுதானே!

இந்த அடிப்படையில்தான் கருத்துச் சுதந்திரம் அமைய வேண்டும்.ஆனால் மாற்றிக்கொள்ளாத அடிப்படைக்கொள்கையில் நம்பிக்கைத்தளராதவார்கள் பயங்கரவாத தடைச் சட்டத்திற்குள் சிக்கிக்கொள்வது என்பது தமிழகச்சூழலாக இருக்கிறது. ஈழத்தில் தமிழர்கள் அளவுக்கதிகமாக கொல்லப்படுகிறார்கள் என்பதும் அங்கே சாதாரண மக்களின் வாழக்கை கேள்விக்குறியாகவே இருக்கின்றது என்பதும் உலகுக்கே தெரிகின்ற ஒன்று. பதினேழு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ரத்த உறவுகளுக்கு தெரியக்கூடாது என்பது எவ்வகை நியாயம். ஒரிசாவில் மற்றும் பிற இடங்களில் மக்களின் ஒரு பிரிவினர் தாக்கப்படுகின்றனர் என்பதை அறிந்தும் மானுட நேயம் மிக்கவர்கள் அதற்காக தங்களை வருத்திக்கொள்வதும் பிறர் உணரும்படி கருத்தறிவிப்பதும் மனித நேயம் மட்டுமல்ல உரிமையும் தான்.

உலகின் மிகப்பெரிய சனநாயக நாடான இந்தியா தமிழன் துன்பப்படுகிறான் என்று சொன்னால் பயங்கரவாதமாக இருக்கிறது என்றால் என்ன நியாயம்?
எங்கள் ரத்த உறவுகளாகிய ஈழத்தமிழர்களை கொல்வதற்கு ஆயுதம் தராதீர்கள் என்றால் அதில் எங்கே இருக்கிறது பயங்கரவாதம்? என் அண்ணன் அடிக்கப்படுகிறான் அவனைக்காப்பாற்றுங்கள் என்று நாங்கள் கதறுவது எப்படி பயங்கரவாதமாக இருக்கமுடியும்?
சிந்திக்க வேண்டும்.

Sunday, April 27, 2008