எத்தனையோ பாடல்களை உங்களால் சிலாகிக்க முடியும். ஆனாலும் அவற்றின் நுனியில் அமர்ந்துக் கொண்டு வாலாட்ட முடியாது அதுபோலத்தான் எல்லாம் தெரிந்திருந்தாலும் உங்களுக்கு ஏதும் தெரியாது என்று காலம் சொல்லிவிடும். எனவே ஜாக்கிரதையாக உங்களால் பேச முடியும் என்றால் பேசலாம். மதுவருந்தும் பழக்கம் உங்களிடம் இருப்பின் தாராளமாக நீங்கள் குடிக்கலாம். அதில் ஆண் பெண் வேறுபாடு என்று எதுவும் இல்லை. இங்கே அரவாணிகளும் வரலாம். அவர்கள் எந்த காரணத்தைக்கொண்டும் தனித்தோ வெட்கப்பட்டுகொண்டோ இருக்கவேண்டியதில்லை. ஓரினப்புணர்ச்சியின் ஆதரவாளர்களும் இங்கே உண்டு. என்ன கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவ்வளவுதான். அப்படி என்ன அங்கே பேசப்போகிறீர்கள் என்ற கேள்வி உங்களுக்குள் ஒரு புகையைப்போல எழுகிறது என்பது எனக்குத்தெரிகிறது. ஆனாலும் புகையை ஆகாயம் நோக்கி அனுப்பாதீர்கள். ஆது மேலே ஏற்றப்பட்ட வானூர்தியின் வால் என்றோ அல்லது அது சென்ற வழித்தடத்தின் அடையாளம் என்றோ பார்க்கிற சிறுவர்கள் கருதிவிட கூடும். எனவே உங்கள் கேள்விகளை கமுக்கமாக அமுக்கிவையுங்கள். இல்லையெனில் உங்களுக்கு கேட்கவே தெரியாது என்பது போல பாவணையைச் செய்யுங்கள். அது உங்களுக்கு ரொம்ப நல்லது. ஏனென்றால் கேள்விகளால் என்ன இருக்கிறது. எதற்காக வந்தோம் என்பதுபற்றி கவலைபடாதீர்கள். அது அழைத்தவர்களுக்கு.பேசவந்துவிட்டபின் ஒருபோதும் நீங்கள் அழைத்தவர்களின் முகத்தை பார்க்கலாகாது. அது உங்கள் பேச்சின் திசையை மாற்றிவிடுவதற்கும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது.
முதல் சந்திப்பிலேயே அனைத்தையும் பேசிவிட முடியாது. அதனால் அடுத்த சந்திப்பிற்கான தேதியைக் குறிப்பதற்கு ஒரு அரை மணி நேரத்தை செலவிடவேண்டும். அதற்குள் தேநீர் குடித்துவிட்டு வந்துவிடலாம். தேநீர் குடிக்கையில் அது முக்கிய நகரமாக இருப்பதனால் அதுவும் தொடர்வண்டி நிலையத்திற்குள் சென்றுவரும் சாலையாக இருப்பின் அழகழகான பெண்கள் வந்தால் மனசுக்குள் ரசிக்கலாம். இல்லையென்றால் மசாலா தேநீர் சும்மா இருக்காது. வாயைச் சுடும். எந்த முடிவும் இன்றி வந்துவிட முடியுமெனின் நீங்கள் கலந்துக்கொண்ட பேச்சுவார்த்தை சரிதான். உங்களின் தைரியம் பாராட்டப்படவேண்டியது. இல்லை என்றால் இவ்வளவு செலவு செய்து ஒரு உரையாடலில் உங்களால் பங்கேற்க இயலுமா?
சரி அடுத்த கட்டம் என்ன உங்கள் கதையில். ஒரு பாட்டுதான். சரியான தமிழ்சினிமா பைத்தியமாக இருக்கவேண்டும். என்ன செய்வது எழுதுவது என்பதே பைத்தியத்தனமையோடு தொடர்புக்கொண்டதுதான். பாட்டு என்றால் நீங்கள் நினைக்கிற மாதிரியெல்லாம் சுவிஸ் நாட்டுக்கு சென்று மாடு மேய்க்கிற உடையணிந்து பாடுவது இல்லை. நம்மூரிலே இருந்துக்கொண்டுதான் பாட வேண்டும். பாட்டு முடிந்துவிட்டது. அருமையான பாடல். இசை அமைத்து பாட்டு எழுதியதே நான் தான். இல்லையென்றால் இவ்வளவு அழகாக வருமா? மீண்டும் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. மழை ஆரம்பமாகிவிட்டது. இதற்குமேல் வெளியே போகமுடியாது. மீண்டும் பேசிதான் ஆகவேண்டும்.மழை எப்போது விடும்? விடும்வரை இங்குதான் இருக்கவேண்டுமா? கேள்விகள் துளைத்தன. என்ன இருந்தாலும் இப்படி ஆகியிருக்கக் கூடாது!
இலேசாக பூட்டிவிட்டு வெளியே வந்தோம். எதற்காக பேசினோம் என்று படிகளில் இறங்கும்போதே பேசிக்கொண்டே வந்தோம். மழை நின்ற பாடில்லை. அவரவர் மழைக்கோட்டுகளை அணிந்துக்கொண்டு இரு சக்கர வாகனங்களை வெளியே தள்ளினார்கள். மழை நின்றாலும் இனி பேச முடியாது. ஏன் சொல்லுங்கள். வேறென்ன எல்லோரும் போய்விட்டார்கள்.நானும் அந்த அழகிய குட்டிக் காரில் ஏறிக்கொண்டேன். வழியெல்லாம் பேசினோம் நாங்கள் மட்டும். தோழர் காரை மிகவும் சரியாகவும் லாவகமாகவும் ஓட்டினார்கள். பத்திரமாக நனையாமல் வீடு வந்து சேர்ந்தேன். அடுத்து பேசுவதற்கு கூப்பிட்டால் தட்டாமல் போய்விட வேண்டும்.
Wednesday, November 19, 2008
பேசுவதற்கான ஓர் உரையாடல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment