
வேலூர் வாசகர் பேரவையும் ஆழி அறக்கட்டளையும் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு வேலூரில் புத்தகத் திருவிழாவை நடத்தின. வேலூர் மாவட்ட மக்களுக்கு இது மிகப்பெரிய பரிசாகத்தான் இருந்தது.
கலை இலக்கியத்தைப் பொருத்தவரை வேலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டம் என அறிவித்துவிடலாம். திருநெல்வேலி மாவட்டத்தைப் பற்றிப் பேசும்போது எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் கலைஞர்களை லாரியில் தான் ஏற்றிவர வேண்டும் என்பார். ஆனால் வேலூர் மாவட்ட கலைஞர்களை ஆட்டோவிலேயே ஏற்றிக்கொண்டு சென்றுவிடலாம். அவ்வளவு குறைவானர்கள்தான் எழுத்துலகிலும் திரையுலகிலும் இருக்கின்றனர். இதற்குக் காரணத்தை மிக எளிதாக நாம் அலசிவிடலாம். வேலூர் மாவட்டம் அரசியல் விழிப்புணர்வு பெற்ற மாவட்டம். அது மட்டுமல்ல தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம். இங்கு வாழ்வியல் என்பது தொழிற்சார்ந்த பண்பாட்டு முறையால் பொருளீட்டி அதன்மூலம் வசதிகளைப் பெருக்கிக்கொள்வது என்பதுதான். எனவேதான் ஆக்கவாளிகளுக்கு ஊக்கம் தரக்கூடிய வாழ்வியல் இல்லாததுதான் அதற்குக் காரணம்.
எனவே புத்தக வாசிப்பு என்பது மிகவும் குறைவு. தற்காலங்களில்தான் நவீன இலக்கியம் சார்ந்த படைப்பாளிகள் வேலூர் மாவட்டத்தில் தோன்றியுள்ளனர். அவர்களின் ஆக்கங்களும் பரவலாக அறியப்படுகின்றன. அதற்கு முன் இலக்கிய ஆளுமைகள் இல்லையா என்று தோன்றுகின்றது உங்களுக்கு. இருந்தார்கள் வானம்பாடி கவிஞர்களின் முக்கிய கவியாகச் திகழும் கவிக்கோ அப்துல்ரகுமான், கவிமாமணி அப்துல்காதர் ஆகியோரும் அவர்களைப் பற்றித் தொடர்ந்த என்னைப் போன்றவர்களும் இருந்தார்கள். ஆனால் நடந்த தவறு என்னவென்றால் இவர்கள் இருவரும் திராவிட இயக்க தீவிர பிரச்சாரகர்களாக இருந்தனர். அப்துல் ரகுமான் எழுதினார் என்றால் அப்துல்காதர் பேசினார். மேடைகளிலும் வகுப்பறைகளிலும் இவர்கள் தீவிர இலக்கியம் பேசியதைவிட அரசியல் பேசியதே அதிகம். ஆனால் இருவருமே தமிழ் இலக்கியத்திலும் ஆக்கத்தன்மையிலும் அற்புதமானவர்கள். அப்துல்காதர் அவர்கள் பேசுவதில் செலுத்திய அக்கறையையும் கடத்திய நேரத்தையும் எழுதுவதில் செலுத்தியிருந்தால் தமிழுக்கு இன்னும் வளம் சேர்ந்திருக்கும். அவருடைய படிமங்கள் உவமைகள் விவரிக்க முடியாத உணர்வுகளைத் தரக் கூடியன.
இதனால் நிகழ்ந்தது என்னவென்றால் வேலூர் மாவட்டத்தில் பட்டிமன்ற பேச்சாளர்கள் அதிகம் வளர்ந்தனர். கோவில் திருவிழாக்கள் போன்ற பொது நிகழ்வுகளில் பட்டி மன்றம் கண்டிப்பாக நிகழ்ச்சி நிரலில் இருந்தது. இந்த இருவரின் ஆக்கிரமிப்பால் இக்பால் என்னும் ஒரு நுட்பமானக் கவிஞன் இலக்கிய உலகில் அறியப்படமுடியாமலேயே ஆகிவிட்டது எனவே தீவிர இலக்கியத்திற்கு எதுவும் வேலூர் மாவட்டத்தில் இல்லாமல் போனது.
நவீன எழுத்தின் அறிமுகம் என்பது வேலூர் மாவட்டத்திற்கு வாணியம்பாடியில் நிகழ்த்தப்பட்டது. அதனால் நிறைய ஆக்கவாளிகள் கிடைத்தார்கள் நேசன், குலசேகரன், நீல்கண்ட், போன்ற கவிஞர்கள் கிடைத்தார்கள். இன்னொரு பக்கம் தீவிர தமிழ்த்தேசியம் பேசக்கூடியவர்கள் ஈழவிடுதலையை முன்னிட்டு எழுதியும் நிகழ்ச்சிகளை நடத்தியும் வந்தனர். அவர்களும் எளிமையான அதே நேரத்தில் அரசியல் முழக்கங்களை முன்வைத்து எழுதினர். இவர்களே பின்பு ஹைக்கூ போன்ற வடிவங்களில் கவிதைகள் எழுதிவந்தனர்.
தலித்திய எழுச்சி ஏற்பட்டபிறகு அழகியபெரியவன்,சுகிர்தராணி, யாழன் ஆதி போன்றோர் எழுதவந்தனர். இதில் அழகியபெரியவனின் பங்கை குறிப்பிட்டே ஆகவேண்டும் அவர் எழுதிய தீட்டு என்னும் கதை முதன்முதலில் வேலூரை கதைக்களமாகக் கொண்டு எழுதப்பட்டது. கொஞ்சம் விட்டிருந்தால் மும்பையின் பாலியல் தொழில் நடக்கும் இடத்தைப் போல மாறியிருக்க வாய்ப்பிருந்த சூரியகுளம் என்னும் பகுதியும் அங்கு வாழ்ந்த அடித்தட்டு மக்களின் வாழ்வும் அக்கதையில் பேசப்பட்டு அழகியபெரியவன் சிறந்த கலைஞனாக இலக்கிய உலகில் அறிமுகம் ஆனார். அதற்குப் பிறகு அழகியபெரியவன் எழுதிய அத்தனைக் கதைகளுமே வேலூர் மாவட்டத்தைக் குறிப்பாக அவர் வாழ்கின்ற பேர்ணாம்பட்டுப் பகுதியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டன. தமிழ் இலக்கியத்தில் வேலூர் மாவட்ட இடங்களின் பெயர்கள் இடம் பெற்றதற்கு அழகியபெரியவன் மிக முக்கியமானவராக இருக்கின்றார். இந்த நேரத்தில் ஸ்ரீநேசனின் காலத்தின்முன் ஒரு செடி என்னும் கவிதைத் தொகுப்பும் இன்னும் சிலரின் ஆக்கங்களும் வெளிவருகின்றன. குலசேகரனின் ஆயிரம் காலங்களுக்குப் பிறகு என்னும் தொகுப்பும் இப்போது வெளிவந்துள்ளது.
இதற்கு அப்படியே அடுத்த இலக்கில் சுகிர்தராணி. அவருடைய கவிதைகள் உலகப்பெண்ணியத்தைப் பேசக் கூடியதாய் இருந்தன. சுகிர்தராணியின் கவிதைகள் இலக்கிய தளத்திலும் பெண்ணிய தளத்திலும் புதிய அதிர்வுகளையும் பெண்ணிய விடுதலையினையும் சாத்தியப்படுத்தின என்பது சரியானதுதான். சுகிர்தராணியின் கவிதைகள் அவருக்கு உலகப்புகழைப்பெற்று தந்திருக்கின்றன. அவருடைய மூன்று தொகுப்புகள் கைப்பற்றி என் கனவு கேள், இரவு மிருகம், அவளை மொழிப்பெயர்த்தல் என்பன. இதில் இரவுமிருகம் அய்ந்தாவது பதிப்பைக் கண்டிருக்கின்றது. யாழன் ஆதியின் இசையுதிர்காலம். செவிப்பறை, நெடுந்தீ, கஸ்பா ஆகிய தொகுப்புகளும் வெளிவந்திருந்தன.
இதற்கிடையில் அறிவொளி இயக்கத்தின் தாக்கத்தால் அதில் பணியாற்றியவர்கள் பண்பாட்டுரீதியாக கலைத்துறைகளில் பணியாற்றும் போது கிடைத்த அனுபவத்தை வைத்துக்கொண்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைத்து இலக்கியப் பணிகள் ஆற்றினர். திருவண்ணாமலை கலை இரவின் தாக்கத்தில் இங்கும் பல கலை இரவுகள் நடத்தப்பட்டன. இதன் மூலமும் தீவிர இலக்கிய ஆளுமைகள் உருவாகவில்லை. மாறாக குரலிசைக் கலைஞர்கள், தப்பாட்டக் கலைஞர்கள், பெண்கலைஞர்கள் உருவாகினர். இது ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றம் என்றே கூறலாம். மார்க்சியம் அவர்களின் மூலப்பொருளாகி இருந்தது. இதற்கு முதல் காரணமாக கவிஞர் முகில் அவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவரின் குரல் வளமும் மேடையை அவதானிக்கும் தன்மையும் பலரைக் கலைஞர்களாக மாற்றியது. கூச்சத்தை விட்டுவிட்டு பாடவும் ஆடவும் நடிக்கவும் முன்வந்தனர் மக்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வேலூர் மாவட்ட கவிஞராக அறியப்பட்டு தொகுப்புகளைத் தந்தவர் முல்லைவாசன். இவர் குடியாத்தத்தைச் சார்ந்தவர்.
முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள நாகூர் ரூமியும் வேலூர் மாவட்டத்தில்தான் இருக்கின்றார். அவருடைய நூல்கள். மொழிபெயர்ப்புகள் தமிழிலக்கிய உலகத்திற்கு அதிக அறிமுகமானவை. குட்டியாப்பா என்ற அவரின் குறுநாவல் வேலூர் மாவட்ட களங்களைக் காட்சிப்படுத்தியுள்ளது. அவரின் பிறகதைகளும் அப்படியே.
ஆற்காடு வாலாஜா பகுதிகளில் இயங்கிக்கொண்டிருக்கும் கவிப்பித்தன் கவிதை நூலொன்றையும் சிறுகதை நூலொன்றையும் வெளியிட்டுள்ளார். சோலையார் பேட்டையில் வசிக்கும் சோலை இசைக்குயில் ஹைக்கூத் துறையில் பல நூல்களை எழுதிக் கொண்டிருக்கின்றார். இவர்கள் தவிர வேலூரில் ம.நாரயணன், இலக்குமிபதி போன்றோர்களின் நூல்கள் பெரிய அளவில் வெளி வந்திருக்கின்றன. பாரதிதாசனின் பரம்பரை என்று சொல்லக்கூடிய வகைமையில் இவர்களை நாம் அடையாளப்படுத்தலாம். உவமைக்கவிஞர் சுரதா போன்றோருடன் இவர்களுக்கு நல்ல தொடர்பும் உறவும் இருந்திருகின்றது. இப்படி ஓர் இலக்கிய வரைவியலை வேலூர் மாவட்டத்தில் நம்மால் உருவாக்க இயலும்.
எனினும் இப்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகத்திருவிழா வேலூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல அங்கிருக்கும் ஆக்கவாளிகளுக்கும் ஒரு உத்வேகத்தையும் உணர்ச்சியையும் கொடுத்துள்ளது என்பது உண்மை. மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட செயல்பாடுகளால் மிகக் குறைந்த காலத்தில் கடைகள் அமைக்கப்பட்டன. பெரும்பாலும் அனைத்துப் பள்ளிக்குழந்தைகளும் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டனர். அவர்களுக்குப் பேருந்து வசதி செய்துகொடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இலக்கிய நிகழ்ச்சிகளை அழகியபெரியவன் ஒருங்கிணைத்திருந்தார். தமிழகத்தின் முக்கிய ஆக்கவாளிகள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். மாவட்ட ஆக்கவாளிகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. புத்தகத்திருவிழாவிற்கு அழகியபெரியவனின் பங்களிப்பு முதன்மையானதாக இருந்தது. ஆழி செந்தில்நாதன் இன்னொரு திசையில் இந்தப் புத்தகத் திருவிழா வெற்றியடைவதற்குக் காரணமாக இருந்தார். கடை வைத்திருப்பவர்களுக்கு வேண்டியவற்றைத் தருவது. அவர்களின் தேவைகளைச் சரியாகத் தீர்த்துவைப்பது. இலக்கிய அரங்குகளில் பங்கேற்பது என அந்த அமைப்பு முழுவதும் அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
இதற்கெல்லாம் எல்லாவகையிலும் உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சியர் செ. ராஜேந்திரன் அவர்களும் பாராட்டுக்குரியவர். அவருடைய அதிகாரிகளும் சிறந்த பணிகளை ஆற்றினார்கள்.
இந்த ஆண்டு தொடங்கப்பட்ட வேலூர் புத்தகத்திருவிழா நூலாறு என்னும் பெயரிலேயே இனிவரும் ஆண்டுகளிலும் தொடரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
No comments:
Post a Comment