Wednesday, October 6, 2010

தண்டனை

மழையில் நனையாததைக்
கண்டித்து
தலையில் குட்டியது
மரத்திலிருந்த துளியொன்று

Wednesday, September 15, 2010

நூலாறு: வறண்ட நிலத்தில் பாய்ந்த வெள்ளம்





வேலூர் வாசகர் பேரவையும் ஆழி அறக்கட்டளையும் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு வேலூரில் புத்தகத் திருவிழாவை நடத்தின. வேலூர் மாவட்ட மக்களுக்கு இது மிகப்பெரிய பரிசாகத்தான் இருந்தது.

கலை இலக்கியத்தைப் பொருத்தவரை வேலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டம் என அறிவித்துவிடலாம். திருநெல்வேலி மாவட்டத்தைப் பற்றிப் பேசும்போது எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் கலைஞர்களை லாரியில் தான் ஏற்றிவர வேண்டும் என்பார். ஆனால் வேலூர் மாவட்ட கலைஞர்களை ஆட்டோவிலேயே ஏற்றிக்கொண்டு சென்றுவிடலாம். அவ்வளவு குறைவானர்கள்தான் எழுத்துலகிலும் திரையுலகிலும் இருக்கின்றனர். இதற்குக் காரணத்தை மிக எளிதாக நாம் அலசிவிடலாம். வேலூர் மாவட்டம் அரசியல் விழிப்புணர்வு பெற்ற மாவட்டம். அது மட்டுமல்ல தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம். இங்கு வாழ்வியல் என்பது தொழிற்சார்ந்த பண்பாட்டு முறையால் பொருளீட்டி அதன்மூலம் வசதிகளைப் பெருக்கிக்கொள்வது என்பதுதான். எனவேதான் ஆக்கவாளிகளுக்கு ஊக்கம் தரக்கூடிய வாழ்வியல் இல்லாததுதான் அதற்குக் காரணம்.

எனவே புத்தக வாசிப்பு என்பது மிகவும் குறைவு. தற்காலங்களில்தான் நவீன இலக்கியம் சார்ந்த படைப்பாளிகள் வேலூர் மாவட்டத்தில் தோன்றியுள்ளனர். அவர்களின் ஆக்கங்களும் பரவலாக அறியப்படுகின்றன. அதற்கு முன் இலக்கிய ஆளுமைகள் இல்லையா என்று தோன்றுகின்றது உங்களுக்கு. இருந்தார்கள் வானம்பாடி கவிஞர்களின் முக்கிய கவியாகச் திகழும் கவிக்கோ அப்துல்ரகுமான், கவிமாமணி அப்துல்காதர் ஆகியோரும் அவர்களைப் பற்றித் தொடர்ந்த என்னைப் போன்றவர்களும் இருந்தார்கள். ஆனால் நடந்த தவறு என்னவென்றால் இவர்கள் இருவரும் திராவிட இயக்க தீவிர பிரச்சாரகர்களாக இருந்தனர். அப்துல் ரகுமான் எழுதினார் என்றால் அப்துல்காதர் பேசினார். மேடைகளிலும் வகுப்பறைகளிலும் இவர்கள் தீவிர இலக்கியம் பேசியதைவிட அரசியல் பேசியதே அதிகம். ஆனால் இருவருமே தமிழ் இலக்கியத்திலும் ஆக்கத்தன்மையிலும் அற்புதமானவர்கள். அப்துல்காதர் அவர்கள் பேசுவதில் செலுத்திய அக்கறையையும் கடத்திய நேரத்தையும் எழுதுவதில் செலுத்தியிருந்தால் தமிழுக்கு இன்னும் வளம் சேர்ந்திருக்கும். அவருடைய படிமங்கள் உவமைகள் விவரிக்க முடியாத உணர்வுகளைத் தரக் கூடியன.

இதனால் நிகழ்ந்தது என்னவென்றால் வேலூர் மாவட்டத்தில் பட்டிமன்ற பேச்சாளர்கள் அதிகம் வளர்ந்தனர். கோவில் திருவிழாக்கள் போன்ற பொது நிகழ்வுகளில் பட்டி மன்றம் கண்டிப்பாக நிகழ்ச்சி நிரலில் இருந்தது. இந்த இருவரின் ஆக்கிரமிப்பால் இக்பால் என்னும் ஒரு நுட்பமானக் கவிஞன் இலக்கிய உலகில் அறியப்படமுடியாமலேயே ஆகிவிட்டது எனவே தீவிர இலக்கியத்திற்கு எதுவும் வேலூர் மாவட்டத்தில் இல்லாமல் போனது.

நவீன எழுத்தின் அறிமுகம் என்பது வேலூர் மாவட்டத்திற்கு வாணியம்பாடியில் நிகழ்த்தப்பட்டது. அதனால் நிறைய ஆக்கவாளிகள் கிடைத்தார்கள் நேசன், குலசேகரன், நீல்கண்ட், போன்ற கவிஞர்கள் கிடைத்தார்கள். இன்னொரு பக்கம் தீவிர தமிழ்த்தேசியம் பேசக்கூடியவர்கள் ஈழவிடுதலையை முன்னிட்டு எழுதியும் நிகழ்ச்சிகளை நடத்தியும் வந்தனர். அவர்களும் எளிமையான அதே நேரத்தில் அரசியல் முழக்கங்களை முன்வைத்து எழுதினர். இவர்களே பின்பு ஹைக்கூ போன்ற வடிவங்களில் கவிதைகள் எழுதிவந்தனர்.

தலித்திய எழுச்சி ஏற்பட்டபிறகு அழகியபெரியவன்,சுகிர்தராணி, யாழன் ஆதி போன்றோர் எழுதவந்தனர். இதில் அழகியபெரியவனின் பங்கை குறிப்பிட்டே ஆகவேண்டும் அவர் எழுதிய தீட்டு என்னும் கதை முதன்முதலில் வேலூரை கதைக்களமாகக் கொண்டு எழுதப்பட்டது. கொஞ்சம் விட்டிருந்தால் மும்பையின் பாலியல் தொழில் நடக்கும் இடத்தைப் போல மாறியிருக்க வாய்ப்பிருந்த சூரியகுளம் என்னும் பகுதியும் அங்கு வாழ்ந்த அடித்தட்டு மக்களின் வாழ்வும் அக்கதையில் பேசப்பட்டு அழகியபெரியவன் சிறந்த கலைஞனாக இலக்கிய உலகில் அறிமுகம் ஆனார். அதற்குப் பிறகு அழகியபெரியவன் எழுதிய அத்தனைக் கதைகளுமே வேலூர் மாவட்டத்தைக் குறிப்பாக அவர் வாழ்கின்ற பேர்ணாம்பட்டுப் பகுதியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டன. தமிழ் இலக்கியத்தில் வேலூர் மாவட்ட இடங்களின் பெயர்கள் இடம் பெற்றதற்கு அழகியபெரியவன் மிக முக்கியமானவராக இருக்கின்றார். இந்த நேரத்தில் ஸ்ரீநேசனின் காலத்தின்முன் ஒரு செடி என்னும் கவிதைத் தொகுப்பும் இன்னும் சிலரின் ஆக்கங்களும் வெளிவருகின்றன. குலசேகரனின் ஆயிரம் காலங்களுக்குப் பிறகு என்னும் தொகுப்பும் இப்போது வெளிவந்துள்ளது.

இதற்கு அப்படியே அடுத்த இலக்கில் சுகிர்தராணி. அவருடைய கவிதைகள் உலகப்பெண்ணியத்தைப் பேசக் கூடியதாய் இருந்தன. சுகிர்தராணியின் கவிதைகள் இலக்கிய தளத்திலும் பெண்ணிய தளத்திலும் புதிய அதிர்வுகளையும் பெண்ணிய விடுதலையினையும் சாத்தியப்படுத்தின என்பது சரியானதுதான். சுகிர்தராணியின் கவிதைகள் அவருக்கு உலகப்புகழைப்பெற்று தந்திருக்கின்றன. அவருடைய மூன்று தொகுப்புகள் கைப்பற்றி என் கனவு கேள், இரவு மிருகம், அவளை மொழிப்பெயர்த்தல் என்பன. இதில் இரவுமிருகம் அய்ந்தாவது பதிப்பைக் கண்டிருக்கின்றது. யாழன் ஆதியின் இசையுதிர்காலம். செவிப்பறை, நெடுந்தீ, கஸ்பா ஆகிய தொகுப்புகளும் வெளிவந்திருந்தன.



இதற்கிடையில் அறிவொளி இயக்கத்தின் தாக்கத்தால் அதில் பணியாற்றியவர்கள் பண்பாட்டுரீதியாக கலைத்துறைகளில் பணியாற்றும் போது கிடைத்த அனுபவத்தை வைத்துக்கொண்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைத்து இலக்கியப் பணிகள் ஆற்றினர். திருவண்ணாமலை கலை இரவின் தாக்கத்தில் இங்கும் பல கலை இரவுகள் நடத்தப்பட்டன. இதன் மூலமும் தீவிர இலக்கிய ஆளுமைகள் உருவாகவில்லை. மாறாக குரலிசைக் கலைஞர்கள், தப்பாட்டக் கலைஞர்கள், பெண்கலைஞர்கள் உருவாகினர். இது ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றம் என்றே கூறலாம். மார்க்சியம் அவர்களின் மூலப்பொருளாகி இருந்தது. இதற்கு முதல் காரணமாக கவிஞர் முகில் அவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவரின் குரல் வளமும் மேடையை அவதானிக்கும் தன்மையும் பலரைக் கலைஞர்களாக மாற்றியது. கூச்சத்தை விட்டுவிட்டு பாடவும் ஆடவும் நடிக்கவும் முன்வந்தனர் மக்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வேலூர் மாவட்ட கவிஞராக அறியப்பட்டு தொகுப்புகளைத் தந்தவர் முல்லைவாசன். இவர் குடியாத்தத்தைச் சார்ந்தவர்.

முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள நாகூர் ரூமியும் வேலூர் மாவட்டத்தில்தான் இருக்கின்றார். அவருடைய நூல்கள். மொழிபெயர்ப்புகள் தமிழிலக்கிய உலகத்திற்கு அதிக அறிமுகமானவை. குட்டியாப்பா என்ற அவரின் குறுநாவல் வேலூர் மாவட்ட களங்களைக் காட்சிப்படுத்தியுள்ளது. அவரின் பிறகதைகளும் அப்படியே.

ஆற்காடு வாலாஜா பகுதிகளில் இயங்கிக்கொண்டிருக்கும் கவிப்பித்தன் கவிதை நூலொன்றையும் சிறுகதை நூலொன்றையும் வெளியிட்டுள்ளார். சோலையார் பேட்டையில் வசிக்கும் சோலை இசைக்குயில் ஹைக்கூத் துறையில் பல நூல்களை எழுதிக் கொண்டிருக்கின்றார். இவர்கள் தவிர வேலூரில் ம.நாரயணன், இலக்குமிபதி போன்றோர்களின் நூல்கள் பெரிய அளவில் வெளி வந்திருக்கின்றன. பாரதிதாசனின் பரம்பரை என்று சொல்லக்கூடிய வகைமையில் இவர்களை நாம் அடையாளப்படுத்தலாம். உவமைக்கவிஞர் சுரதா போன்றோருடன் இவர்களுக்கு நல்ல தொடர்பும் உறவும் இருந்திருகின்றது. இப்படி ஓர் இலக்கிய வரைவியலை வேலூர் மாவட்டத்தில் நம்மால் உருவாக்க இயலும்.

எனினும் இப்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகத்திருவிழா வேலூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல அங்கிருக்கும் ஆக்கவாளிகளுக்கும் ஒரு உத்வேகத்தையும் உணர்ச்சியையும் கொடுத்துள்ளது என்பது உண்மை. மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட செயல்பாடுகளால் மிகக் குறைந்த காலத்தில் கடைகள் அமைக்கப்பட்டன. பெரும்பாலும் அனைத்துப் பள்ளிக்குழந்தைகளும் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டனர். அவர்களுக்குப் பேருந்து வசதி செய்துகொடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இலக்கிய நிகழ்ச்சிகளை அழகியபெரியவன் ஒருங்கிணைத்திருந்தார். தமிழகத்தின் முக்கிய ஆக்கவாளிகள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். மாவட்ட ஆக்கவாளிகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. புத்தகத்திருவிழாவிற்கு அழகியபெரியவனின் பங்களிப்பு முதன்மையானதாக இருந்தது. ஆழி செந்தில்நாதன் இன்னொரு திசையில் இந்தப் புத்தகத் திருவிழா வெற்றியடைவதற்குக் காரணமாக இருந்தார். கடை வைத்திருப்பவர்களுக்கு வேண்டியவற்றைத் தருவது. அவர்களின் தேவைகளைச் சரியாகத் தீர்த்துவைப்பது. இலக்கிய அரங்குகளில் பங்கேற்பது என அந்த அமைப்பு முழுவதும் அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

இதற்கெல்லாம் எல்லாவகையிலும் உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சியர் செ. ராஜேந்திரன் அவர்களும் பாராட்டுக்குரியவர். அவருடைய அதிகாரிகளும் சிறந்த பணிகளை ஆற்றினார்கள்.

இந்த ஆண்டு தொடங்கப்பட்ட வேலூர் புத்தகத்திருவிழா நூலாறு என்னும் பெயரிலேயே இனிவரும் ஆண்டுகளிலும் தொடரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

Monday, August 23, 2010

வனமழை

வனத்தின் கனியாகி சிவந்த அவள் உதடுகளில்
சொற்கள் பிரசவமாகி விழுகையில்
மழைத்துளிகளாகின்றன
வனம் பசுமையடைகின்றது
உயிர் ஊறும் வேரில் வாசம் கிளர்ந்து
இறுகுகின்றது வனம்
அடர்த்தியுடன் புதராகி அவள் மேலும் சிரிக்கின்றாள்
வானம் சிவக்கின்றது
கருத்த மேகங்கள் மேலும் மழையைத்தர
கானாறு புறப்படுகின்றது
சருகுகள் நிறந்த கானின் மேனி இப்போது
இசைக்கருவியாகி மீட்டுகின்றது
அவளின் சொற்களை பாடல்களாய்
இப்போது காட்டில் குயில்கள் தோன்றுகின்றன
செவிகள் முளைத்த மரங்கள்
இன்னும் தழைக்கின்றன
மேகங்கள் மரங்களில் குடியேறுகின்றன
இப்போது வேரில் மாரி வர
வனம் மழையானது

Thursday, July 22, 2010

நீர் உரிமை

சந்திரபாபு நாயுடுவின் போராட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தும் தமிழர்கள் வெறுமனே வாளாதிருக்கின்றார்கள். சந்திரபாபு நாயுடு சமீபத்தில் மகாராட்டிர போலீசால் குண்டுகட்டாகத் தூக்கி வரப்பட்டு தனிவிமானத்தில் ஐதராபாத் விமானநிலையத்தில் தன் சகாக்களோடு வந்து கொட்டப்பட்டார். அவர் என்ன இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கா சென்றார். அவருடைய அண்டை மாநிலமான மகாராட்டிராவுக்குத்தான் சென்றார். ஒரு சுற்றுலாப் பயணியாக ஜாலியாக ஒரு டூர் அடித்தால் பரவாயில்லை. ஆனால் மகாராட்டிர மாநிலத்தில் நாண்டெட் மாவட்டத்தில் பாப்லி என்னும் இடத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணைக்கட்டை தடுக்க வேண்டி அதைப் பார்க்க போயிருக்கின்றார். மகாராட்டிர அரசு இதற்கு தடை விதித்திருக்கின்றது. அதை மீறிதான் அந்தப்போராட்டத்தை மாவீரர் சந்திரபாபு நடத்தியிருக்கின்றார். ஒரே ஒரு காரணம் தான் ஆந்திராவுக்கு வரும் தண்ணீரை அந்த அணை தடுக்கின்றது என்பதுதான் அது. நியாயம் தானே இந்தப் போராட்டம். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் பிற மாநிலத்தில் அத்துமீறி நுழையலாமா?

ஆற்றங்கரையில் வாழக்கூடியவர்களின் உரிமை அது. அவர்களுக்கான நீர் உரிமை. அதை அப்படியே தமிழ்நாட்டுக்குப் பொருத்துங்கள் பார்க்கலாம். கர்நாடகாவிலிருந்து வரும் காவிரி தமிழர்களுக்கு வாய்க்காமலே போய்விட்டது. மிகை நீராக வரும் ஒகேனக்கல் நீரை தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்குத்தரலாம் என்றால் கர்நாடகக் காரர்கள் தமிழ்நாட்டில் நுழைக்கின்றார்கள். பாலாறும் அங்கிருந்துதான் தொடங்குகின்றது. தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு முன்பு ஆந்திராவின் வழியாகத்தான் வருகின்றது. ஆந்திராவில் அது 30 கிமீ தூரத்திற்குத்தான் பாய்கின்றது.

ஆனால் இந்தக் கூத்தை பாருங்கள். 30கிமீ நீளத்திற்கு 32 தடுப்பணைகள் கட்டப்பட்டு ஒரு சொட்டு தண்ணீர்கூட தமிழகத்திற்கு வருவதில்லை. இப்போது கணேஷ்புரம் என்னும் இடத்தில் ஒரு அணை கட்டப்பட்டு வருகின்றது. இதெல்லாம் யாரால் தெரியுமா? மாவீரர் சந்திரபாபு ஆட்சியால்தான். அதுவும் அவரின் சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில்தான். சரியா என்று கேட்டால் ‘என் தொகுதி மக்கள் நலந்தான் எனக்கு முக்கியம்’ என்று கூறினார் சந்திரபாபு. ஆனால் இப்போது அவர் போராடுகின்ற அணை மகாராட்டிர மாநில முதல் அமைச்சரின் தொகுதியில்தான் இடம்பெற்றிருக்கின்றது.

கீழ்ப்பாலாறு பகுதியில் இருக்கும் வேலூர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் வறண்டுகொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம் சந்திரபாபு கட்டிய தடுப்பணைகள்.

இதயெல்லாம் கேட்க தமிழகத்தலைவர்கள் போவார்களா? தமிழீழப் பிரச்சினையே இவர்களிடம் படாதபாடு பட்டது. தம்ழிநாட்டு ஓட்டாளிகளின் பிரச்சினையிக் கூட அவர்களால் தங்கள் சுயநலத்திற்காகத்தான் பார்ப்பார்கள்.
தமிழன் என்றால் என்ன அடிமை என்றுதானே அர்த்தம்.

Sunday, June 27, 2010

செம்மொழி மாநாடு - தொலைக்காட்சியில் பார்த்தவை


மாநாட்டிற்கு செல்ல வேண்டும் என்னும் உந்துதல் ஒருபக்கம் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது. ஊரில் பார்த்த நண்பர்கள் எல்லாம் என்ன இன்னும் போகவில்லையா என்றே கேட்டுக்கொண்டிருந்தனர். ஒரு நண்பன் இரவு ஒரு மணிக்கு தொலைபேசியில் கூப்பிட்டு மாநாட்டிற்குப் போவதாகவும் பேருந்து நிலையத்தில் இருப்பதாகவும் வருகிறாயா என்று கேட்டான். கோபம் வந்தது. ஆனாலும் அவனைப் போய் வா என்றனுப்பிவிட்டு காலையிலிருந்து தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.

தொடக்க விழாவினையும் நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். தொடக்க விழா நம்பிக்கைகளை விதைத்தது. தமிழ் இணைய மாநாடு மிகவும் முக்கியமானதாகப் பட்டது.தமிழ் எழுத்துருக்கள், புதிய தமிழ் விசைப்பலகை, தமிழில் இயக்கப்படும் கணிணி. என்றும் இன்னும் தொழில்நுட்பங்களைப் பற்றியும் பெரிதாகப் பேசப்போகிறார்கள் என்றதும் மகிழ்ச்சித் தொத்திக் கொண்டது.

இன்னுமொரு முக்கிய காரணம் நீச மொழி என்று அவாள்களால் சொல்லப்பட்ட தமிழை செம்மொழியாக்கி அதை உலகுக்கு உணர்த்துவதும் தேவபாசை என்று சொல்லப்பட்ட சமஸ்கிருதத்திற்கு எந்தவகையிலும் தமிழ் குறைந்தது அல்ல என்று நிரூபிப்பதற்கும் இம்மாநாடு மிகவும் தேவைப்பட்டது. அது நிறைவேறியும் இருக்கின்றது. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரீகம் என்பது தமிழர்களுக்கானது என்னும் ஆய்வும் அதுதரும் விளக்கமும் இந்திய நாடு முழுதும் தமிழினம் வாழ்ந்த நிலப்பரப்பு என்பதும் தமிழர்கள் அடிமையாக்கப்பட்டு தண்ணீருக்கு அல்லாடும் சூழல் அப்பட்டமாக பொதுநிலைத்தமிழருக்குப் புரியும் நேரமாக இந்த மாநாடு இருக்கும் என்பதும் எண்ணம். கன்னட ரணதிவே என்னும் அமைப்பு மாநாடு நடக்கும் போதே ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டம் தமிழர்கள் இந்தியரில் அடக்கம் இல்லை என்பதனை வெளிப்படையாக உணர்த்தியது.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழினத்தின் பூர்வ வரலாறு என்பது இலங்கையை ஒட்டுமொத்தமாக தமிழ் மன்னன் ராவணன் ஆண்டான் என்னும் ராமாயணத்தினை, அதனை நம்பவில்லை என்றாலும் முன்வைத்து திருமாவளவன் பேசிய பேச்சு ஆட்சியாளர்களுக்கும் பொதுநிலையில் இருக்கும் தமிழர்களுக்கும் புரியவைக்கும் தன்மையுடையதாக இருந்தது. எல்லாரும் பேராசிரியர் கா.சிவத்தம்பியை இலங்கை தமிழ் அறிஞர் என்று விளித்துக் கூறியபோது தமிழக முதல்வர் மட்டும் ஈழத்தமிழறிஞர் என்று அழைத்தார். இது மனோவியல் ரீதியாக ஆய வேண்டிய ஓர் சொல்லாடல். அது இருக்கட்டும்

இன்னொரு அரங்கில் உரையாற்றிய அக்கா அரங்க மல்லிகா அவர்களின் உரை மிகவும் கருதத்தக்கது. கொடுக்கப்பட்ட நேரத்தையெல்லாம் மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு தலித்தியத்தையும் பெண்ணியத்தையும் சரியான நேரத்தில் உள்நுழைத்த பெருமை அவர்களைச் சாரும் அதற்காக அக்கா அவர்களைப் பாராட்ட வேண்டும்.

மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட அரங்கங்களை செய்தியாகக்கூட காட்டவில்லை. அதெல்லாம் பொதுமக்களுக்கு தேவையில்லை என்று தமிழ் சினிமா இயக்குநரைப் போல விட்டு விட்டார்களா தெரிய வில்லை. அவற்றைக் காட்டியிருந்தால் மாநாட்டின் பயனும் பொருளும் எப்படி இருந்தது என்று சொல்லியிருக்க முடியும்

ஆனால் காட்டப்பட்டதோ வேறாக இருந்தது. முதல் நாள் நடந்த கவியரங்கம் படு கேவலம். செம்மொழி மாநாட்டின் கவியரங்கம் லோக்கல் கவியரங்கத்தினை விட மிக மோசமாக இருந்தது என்றே சொல்லிவிடலாம். கவியரங்கம் என்னும் அமைப்பே செத்துபோன ஒன்றாகத்தான் இப்போது இருக்கின்றது. அதை மேலும் சாகடிக்க நம்முடைய கவிஞர்கள் எடுத்த முயற்சி வீண்போகவில்லை. கருணாநிதி என்னும் கவிஞர்(?) பாடிய பிராந்தி பாட்டில் பிரதிபா பாட்டில் என்னும் ஒப்புமைகள் கருத்துரீதியாகவும் அவருக்கு ஏதும் தெரியவில்லை என்பதை நமக்குப் புரிந்து கொள்ள உதவியது. நுணலும் தன் வாயால் கெடும். அத்தகைய நுணலுக்கு எதற்கு இப்படி ஒரு வாய்ப்பு. விவேகாவின் கவிதை கவிதையா அது. இவர்கள் எல்லாம் எதையும் வாசிக்கவும் மாட்டார்கள் வெட்கப்படவும் மாட்டார்கள் போல.சினிமாவில் பாட்டெழுதுபவர்கள் எல்லாம் கவிஞர்களாக நினைப்பது தவறு(யுகபாரதி போன்றோர்களைத் தவிர்க்கலாம்)
முத்துக்குமார் நம்பிக்கையோடு பார்க்கப்பட்டார். ஆனால் அவரும் வேகவேகமாக எதையோ சொல்லிவிட்டார்.தமிழச்சியின் கவிதைதான் என்னளவில் வரலாற்றின் பின்புலத்தோடு இருந்தது என்பேன்.அதனால் வாலியின் தலைமையிலான கவியரங்கத்தை நான் பார்க்கவில்லை.

மாலையில் நடந்த கருத்தரங்கம் ஒரு கூத்து. லியாகத் அலிகான் என்னும் முன்னாள் அதிமுககாரர் கருத்தரங்கில் பேசுகின்றேன் என்று முதல்வரை புகழ ஆரம்பிக்க ஒலிவாங்கியை வாங்கி கருணாநிதியே அதை நிறுத்தும்படி ஆகிவிட்டது.அதற்குப்பிறகு வந்தவர்களும் அப்படித்தான் பேசினார்கள். திருமாவளவன் மொழிக்குறித்த ஆய்வினை அம்பேத்கர் கூற்றை வைத்து பேசினார்.அதுதான் கருத்தரங்கின் முக்கியமான பேச்சாக இருந்தது. து.ராஜா அவர்களின் பேச்சும் கருத்தும் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளாக இருந்தது. சீதாராம் யெச்சூரியின் பேச்சு இந்திய தேசியத்தை வலியுறுத்துவதாகவே இருந்தது.மொழி என்பது சிந்தனையைப் பிரதிபலிக்கும் கருவி. என்கிறார். தமிழ் அப்படிப்பட்டதா என்பது கேள்விக்குரியது.

மறுநாள் பட்டிமன்றம் பாரதிராஜா பங்கேற்பாளர். அய்யோ எந்தக்கருத்தையும் கலைஞரை மட்டும் வைத்துக்கொண்டு சொல்லிவிடலாம் என்று வந்திருந்தார் பாரதிராஜா. கையில் திரைக்கதையே இல்லாமல் படப்பிடிப்பிற்கு போவது என்பது சாதாரணமாக இருக்கலாம்.ஆனால் பேசுவது அப்படியல்லவே. எஸ்.வி. சேகர் இன்னும் மோசம். இதெல்லாம் கவனிக்கப்பட்டிருக்கும் என்றால் நன்றாக இருந்திருக்கும்.

யாழன் ஆதி

Tuesday, June 22, 2010

நெட்டைப் புல்லென காலை
பசுமையாய் மலர்ந்திருக்கிறதுகுருவிகள்
இன்னும் கூடுகளிலிருந்து வரவில்லை
சொற்கள் காலை பூமியின் மிருதுத்தன்மையை
அடைந்திருந்தன
செந்நாவுகளில் குறைந்தது ஒரு வட்டம்
இனிப்பாவது இருந்திருக்கின்றது
பகல் வரும் நேரம்
தயாராகின்றன தாவரங்கள்
அவ்வப்போது அவசரப்பட்டு அழுகின்றது
குழந்தை