Monday, June 23, 2025

கண்கள்

 நிலையில்லா எத்தனிப்பின் கண்கள் திரும்பும்

உன் திசையில் வரித்தெழும் பறவையின்

வாழ்வெங்கும்

சிவந்து கிடக்கிறது பூக்கள்

Tuesday, October 1, 2024

மது ஒழிப்பின் பேரரசியல்

கடந்த இரண்டு மாதங்களாக தமிழக அரசியல் தகித்துக்கொண்டிருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு மாநாடு குறித்த அறிக்கை வெளியிட்டதிலிருந்து இந்த பரபரப்பு தொடர்கிறது. ஆகஸ்டு 17 ஆம் திகதி தன்னுடைய பிறந்த நாளை முன்வைத்து மது ஒழிப்பில் தனது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்தார் கட்சியின் தலைவர் திருமாவளவன். ஒருமாதம் மாநாட்டுக்கான களப்பணி,  செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளில் மாநாடு. இதுதான் முதல் அறிவிப்பு.

ஆனால் அக்டோபர் 2 காந்தியின் பிறந்தநாள். இந்திய அளவில் மதுவிலக்கை வலியுறுத்தியவர் அவர்.  அம்பேத்கரிய அரசியல் இயக்கம் காந்தியின்  பிறந்த நாளை மது ஒழிப்புக்கு தேர்ந்தெடுத்தது தனது விரிந்த பார்வையை மக்களுக்கு உணர்த்துவதற்காக. மக்களுக்குத் தீங்கு தரும் எதுவும் இங்கு வேண்டாம் என்பதுதான் நிலைப்பாடு. ஆக தொண்டர்களுக்கு இன்னொரு மாதம் கூடுதலாகக் கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி.

களம் தேர்தல் களம் போல் ஆனது. ஒவ்வொரு தொகுதிக்கும் மேலிட பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டார்கள். அவர்கள் அங்கங்கே போய் முகாமிட்டு கிளை அமைப்புகளைத் திரட்டி மாநாட்டிற்காக மக்களைத் திரட்டும் மிகத்தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலின் போது வேலை செய்த மற்ற அரசியல் கட்சிகள் ஓய்விலிருக்க விடுதலைச் சிறுத்தைகள் இன்னொரு தேர்தல் போலவே மது ஒழிப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். கட்சியின் தலைமை மண்டலவாரியாக மக்களைச் சந்திக்கிறது. மது மற்றும் போதைப் பொருளின் தீமையை தன்னுடைய கட்சித் தொண்டர்களுக்கு எடுத்துக்காட்டி விரிவான உரையை தலைவர் அவர்கள் நிகழ்த்துகிறார்கள்.  தலைவரைக் கண்ட தொண்டர்கள் இன்னும் தீவிரமாகக் களத்தில் பணியாற்றுகிறார்கள். வயல் வெளிகள்,நூறு நாட்கள் வேலை நடக்குமிடங்கள், மகளிர் அதிகமாகப் பணியாற்றும் தொழிற்சாலைகள், மாலைகளில் கடைத்தெருக்கள், வீடுகள் என விசிக தொண்டர்கள் மாநாட்டுப் பணிகளை அமர்க்களப்படுத்துகின்றனர்.

அமைப்பாய்த் திரள்வோம் என்னும் நூலில் தலைமையின் முக்கியத்துவத்துக்  கூறும் போது தலைமை தத்துவமும் கோட்பாடும் நிறைந்ததாக இருந்தால்தான் இயக்கத்தை மிகச்சரியாக வழிநடத்த முடியும் என  எழுச்சித்தலைவர் அவர்கள்  எழுதியிருபார்கள். அப்படித்தான் இந்த மாநாட்டின் தேவையும் உருவாக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி விசச்சாராயச் சாவுகள் அதிகரித்த வேளையில் அம்மக்களைச் சந்திக்கச் சென்ற  தலைவர்கள் வெறுமனே போய்  ஆறுதல் சொல்லித் திரும்பினர். எழுச்சித் தலைவர் அவர்கள் மட்டுந்தான் அந்த மக்களின் கண்ணீரைக் கண்டார். அது வெறும் கண்ணீர்த்துளி அல்ல. அவை உயிரின் தேவையை அறிந்த கண்ணின் வார்த்தைகள். அவர்களுக்கு எங்ஙனம், ஆறுதல் சொல்லலாகும் என எண்ணிய  அவர்  மதுவையும் போதைப் பொருட்களையும் ஒழிக்க எடுத்த  முடிவுதான்  அரசியலில் பல  கருத்தாடல்களை உருவாக்கியது.

அரசியல் கணக்குகளைத் தாண்டி, இந்த மாநாட்டின் நோக்கம் நிறைவேறுகிறதா என்பது தான் நாம் மிகவும் முக்கியமாகக் கருத வேண்டிய ஒன்று. எந்த நோக்கத்துக்காக இது நடத்தபடுகிறதோ  அது கொஞ்சம் திசை மாற்றப்பட்டிருக்கிறது என்றாலும்  இம்மாநாடு ஒரு சிந்தனை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சிந்தனை அதிர்ச்சி அனைத்துப் பொதுமக்களுக்கும் உண்டாகி இருக்கிறது. அவர்கள் இது குறித்து பொது வெளிகளில் உரையாடுகின்றனர். மதுவை ஒழிக்க முடியாது ஆனால் …. என்று கூறும் தன்மை வந்திருக்கிறது.

அது மட்டுமல்ல தற்காலத்தில் மதுவின்  தீமையோடு  மிகவும் மோசமானது போதைப் பொருட்கள். இது மிகவும் தீமையானது என்பது தெரியாமலே அதன் போதையில் இளைய சமூகம் ஆழ்ந்திருப்பது வேதனையிலும் வேதனை. சமூக அக்கறைக் கொண்டோர் இதை கட்சி ஜாதி மதம் என்னும் எல்லா எல்லைகளையும் தாண்டி யோசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாளைய தலைமுறை போதை தலைமுறையாக உருவாவதை நாம் தடுக்க வேண்டும். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரையும் வீழ்த்தும் போதைப்பொருட்களை நாம் ஒழித்தாக வேண்டும். மதுவினால் ஏற்படும் தீமையை விட போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் மிக மோசமானவைகளாக இருக்கின்றன.  மூளையை மழுங்கச் செய்து என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை  அறியாமல் நாம் எங்கே இருக்கிறோம் என்/று தெரியாமல்  ஒட்டு மொத்தமாக சிந்தனைகளை அழித்து பெரும் ஆபத்தை விளைவிக்கும் போதைப் பொருட்கள் நம் மனித வளத்தைக் கெடுக்கின்றன. அதற்கெதிரான விழிப்புணர்வையும் இம்மாநாடு ஏற்படுத்தி இருக்கிறது.

ஓர் அமைதியான மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டரசியலில் தலித் பெண்கள் பெரும்பான்மையான தொண்டர்களாக ஒரு கருத்தியலின் அடிப்படையில் அணியமாகவில்லை. சில முன்நிகழ்வுகள் இருக்கின்றன. அதுவும் அவை எல்லாம் அறிவுஜீவிகளின் கூடுகைகளாக மட்டுமே நடந்திருக்கின்றன. ஆனால் பெரும்பான்மையான பெண்கள் இம்மாநாட்டிற்காகத் திரண்டிருக்கிறார்கள். அவர்களின் திரட்சி நாளை தேர்தல் களத்தில் மாற்றங்களைக் கொண்டுவரலாம். விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் பலம் உயர்ந்திருக்கிறது  என்பது அப்போது தெரிய வரும். உள்ளாட்சி அமைப்புகளில் வருங்காலங்களில் அவர்கள் அதிகாரத்திற்கு வருவார்கள். பெண்களை அரசியல் படுத்துவது இதன்மூலம் நிறைவேறி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் மாநாடு மது மற்றும் போதை ஒழிப்புக் கருத்தியலில் மட்டுமல்ல அரசியல் அரங்கிலும் வெற்றி பெற்றிருக்கிறது என்பது தான் உண்மை.

Sunday, September 22, 2024

புரட்சியாளர் அம்பேத்கரும் மது ஒழிப்பும்

இன்றைய சமூகத்தின் தீராத நோயாக மது மாறியிருக்கிறது. மது என்னும் திரவம் மட்டுமல்ல இங்கே பேராபத்து அதைவிட ஆயிரம் மடங்கு தீமையைப் பயக்கக்கூடியது போதைப்பொருட்கள். மது எதிர்க்கப்பட வேண்டும் என்றால் போதைப்பொருட்கள் ஆயிரம் மடங்கு வெகுதீவிரத்துடன் எதிர்க்கப்பட வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானது.

மதுவின் தீமைகள் கொடுமையானது. நான் ஒரு தாயைச் சந்தித்தேன். இளம் கணவன்  மனைவி அவர்கள். ஒரு பெண். ஐந்தாம் வகுப்புப் படிக்கிறாள். பெண்குழந்தை அந்த வீட்டிலேயே இருக்க முடியவில்லை தன் பாட்டி வீட்டிற்குச் செல்கிறேன் என அடம்பிடிக்கிறது. ஏனெனில் அவளின் அப்பா நகரத்தில் வேலை பார்க்கிறார். சம்பாதிப்பதில் பாதியை குடிக்குச் செலவழித்து விட்டு மீதியைத்தான் குறைந்த அளவே வீட்டிற்குச் செலவுக்குத் தருகிறார். அதனால் அவருக்கும் அவர் மனைவிக்கும் வாக்குவாதம். சண்டை சச்சரவு. அந்தப் பெண்குழந்தைக்கு இது பிடிக்கவில்லை. சக மாணவர்கள் அக்கம்பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் பள்ளிக்கு வந்து சொன்னால் என்ன ஆவது என்னும் அச்சம் அந்தக் குழந்தையைச் சூழ்ந்துக் கொள்ள் அக்குழந்தை வீட்டிலும் இயல்பாக இல்லாமல் பள்ளியிலும் இயல்பாக இல்லாமல் மிகவும் நெருக்கடியான ஒரு மனநிலையில் உழல்கிறாள். இப்படி எத்தனை தனி ஆய்வுகளையும் நம்மால் கூற மூடியும்.

ஆகவே தற்காலத்தின் தீமையாக இருக்கும் மது எதிர்காலத்தின் அழிவாய் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை மிகவும் நாம் வேதனையோடுதான் பார்க்கவேண்டியிருக்கிறது. புத்தரின் காலத்தில் மதுக்குடியாமை ஓர் உறுதியாக மேற்கொள்ளப்பட்டது, இல்லறத்தாரானாலும் துறவிகளானாலும் அந்த உறுதி மொழி பொதுவானது.

சுராமேரய மஜ்ஜா பமாதட்டான

வேறமணி சிக்காபதம் சமாதியாமி

என்பது புத்தரின் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி.  போதைப் பொருட்களை உண்ண மாட்டேன் என்று உறுதி ஏற்கிறேன் என்று பொருள் அதற்கு.

புரட்சியாளர் அம்பேத்கர் தன் வாழ்க்கையின் மிக முக்கியமானக் களத்தில் மது எதிர்ப்பைப் பேசியுள்ளார்கள். மகத் குளப்போராட்டம். புரட்சியாளர் அம்பேத்கர் வரலாற்றில் மிக முக்கியமானது. 1927  டிசம்பரில் நடைபெற்ற அப்போராட்டம் 24, 25 ஆகிய தேதிகளில் பல்வேறு தடைகளுக்கு இடையே அம்மாநாடு நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் மாநாட்டில் உரையாற்ற அனுமதிக்க 4000 பேர் கொண்ட மாநாட்டில் உரையாற்றினார்.  டிசம்பர் 27 அன்று மாலையும் மாநாடு தொடங்கியது. இரவு 10  மணிக்கு மாநாடு முடிந்தது. பிறகு 3000 பெண்கள் கூடிய  அந்தக் கூட்டத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் உரையாற்றினார். மிகச்சாதாரணமாக அவர் உரையாற்றி இருக்கிறார். ஆனால் அது மிகவும் முக்கியமானது.

“தீண்டப்படாதவராக உங்களை எப்போதும் கருதாதீர்கள். தூய்மையாக உடுத்துங்கள், அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள், சுய உதவி உணர்ச்சியைப் பெருக்கிக் கொள்வதிலும் நாட்டம் செலுத்துங்கள்என்று கூறிவிட்டு மீண்டும் தன்னுடைய குரலைத் தாழ்த்தி ரகசியம் பேசுவதைப் போல பேசியிருக்கிறார்.

‘உங்கள் கணவரோ மகன்களோ குடிகாரர்களாக இருப்பின் அவர்களுக்கு உணவு தராதீர்கள்

இது புரட்சியாளர் அம்பேத்கர் தலித் பெண்களுக்கு தந்த அறிவுரை.

இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் மாநாடு மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடாக நடக்க இருக்கிறது. மிகச்சிறந்த திட்டமிடலுடனும் பெண்களை அணியமாக்கி அதன்மூலம் ஒரு மாற்றத்தை உருவாக்கவும் அந்தக் கட்சியும் அதன் தலைவரும் மிகத்தீவிரமாக களப்பணியாற்றுகின்றனர்.

மதுவுக்கும் போதைப் பொருள்களுக்கும் எதிராக அது ஒரு பொதுமனநிலையை உருவாக்கினால் அதுவே மாபெரும் வெற்றி.

பல்வேறு பெண்கள் அமைப்புகள், இம்மாநாட்டில் பங்கு பெற வேண்டும். இம்மாநாட்டை அரசியலாய்ப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

Saturday, September 14, 2024

 மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பின் அரசியல்

பண்டைய இந்தியாவில் போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்ட காலம் மிகவும் பழமையானது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மது இல்லை. ஆனால்  வரலாற்றில் வேத காலத்தில் மது உருவாகியிருந்தது என்பதற்கு சோம பானம் சுரா பானங்கள் சாட்சியங்களாய் இருக்கின்றன. வேத காலத்தில் மது எதிர்ப்பு இருக்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகு மது எதிர்ப்பு  உருவாகியிருக்கிறது. அது புத்தரின் காலம்.

எப்படி வேத மதத்தின் அஸ்வமேதயாகம் ஒழிக்கப்படவேண்டும் என்று புத்தர் விலங்குகளைப் பாதுகாக்க பணியாற்றினாரோ அதைப் போலத்தன் விலங்குகள்போல் மக்களை ஆக்கும் மதுவினையும் ஒழிக்க அவர் போதித்தார். அவர் போதித்த ஐந்து ஒழுக்க நெறிகளில் மிகவும் முக்கியமான ஒன்று

“மதியினை மயக்கிடும் மதுவினை குடிக்க மாட்டேன் என உறுதி ஏற்கிறென்” என்பது. இது பஞ்சசீலத்தில் இருக்கிறது. சீலம் என்றால் ஒழுக்கம் என்று பொருள். எனவே இதை ஒரு போதனையாக இல்லாமல் தினந்தோறும் நாம் பயன்படுத்தும் சொற்றொடர்களாக இருக்க வேண்டும் என்று புத்தர் கருதினார். அதனால்தான் இதை எந்த நிகழ்விலும் சொல்லக்கூடிய உறுதிமொழியாக வைத்தார்.

இதைச் சொல்லுகிற ஒருவர்  அவர் மதுக்குடிப்பவராக இருப்பின்  அவர் மனச்சாட்சியை அது உலுக்கும். இந்த உறுதிமொழியை நாம் அனைவருக்கும் தெரிகிறமாதிரி உரத்துக் கூறுகிறோம் ஆனால் மது அருந்துகிறோமே என அவர்களுக்கு மனத்தில் தோன்றும். இந்த உளநிலையை உருவாக்கினால் போதும் அவர் மதுவருந்தும் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறுவார். மது அருந்தாதவர்கள் இந்த உறுதிமொழியை தினந்தோறும் கூறுவார்களேயானால் அவர்களின் மனசாட்சியும் மதுவருந்தும் வாய்ப்பு நேருகையில் மாறலாம். மதுவினை அருந்தாமல் அவர்கள் விலகலாம்.

ஆக, ஒரு சமூகத்தைத் தீமையிலிருந்து விடுவிப்பது என்பது தான் புத்தரின் மிகப்பெரிய புரட்சி. அதைத்தான் அவர் துன்பம் என்று கூறினார். துன்பமே மனித வாழ்வின் இருப்பாக இருந்துவிடக்கூடாது என்று அவர் கருதினார். மகிழ்ச்சி நிறைந்த சமூகம் அமைப்பக்கப்பட வேண்டும் என்பது அவரின் போதனை. அப்படியானல் துன்பங்களிலிருந்து விடுபடுவது, அதற்கான வழிகள் இவைதான் என்று அவரால் மிகத்தீவிரமாக இயங்க முடிந்தது. அது இந்தியா மட்டுமல்ல உலகமெல்லாம் பரவியது. இன்றும் பரவுகிறது.

துன்பங்களுக்கானக் காரணங்களைக் கண்டறிவது அவற்றை நீக்குவது என்பது புத்தரின் வழி. இதுதான் உலகமெங்கும் இருக்கிற அறிவியல் பூர்வமான வழி. துன்பங்களை போன ஜென்மங்களோடு தொடர்பு படுத்தலாகாது.

இன்றையச் சமூக துன்பமாக மது இருக்கிறது. போதைப் பொருள்கள் இருக்கின்றன. பள்ளி மாணவர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை மதுவையும் போதைப் பொருள்களையும் பயன்படுத்துகின்றனர். படித்த இளைஞர்கள், படிப்பை நிறுத்தி அல்லது முடித்து வேலைக்குச் செல்லும் பெரும்பான்மையான இளைஞர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் என்பது நமக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரிந்த உண்மை.

இதை மாற்றுவது இப்போது அதிமுக்கியத் தேவை. மதுவை ஒழிக்கமுடியாது என்று ஒரு வாதம் இருக்கிறது. அது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக  ஒரு புறம் இருக்கிறது. அதற்கானப் புறக்காரணிகளும் அகக்காரணிகளும் மிகவும் பொருந்தித்தான் போகிறது. ஆனால் அதனால் விளையும் தீமைகள் இன்று பெருகிவிட்டன.

மாணவர்கள் சீரழிகிறார்கள். இளம்வயதிலேயே இளைஞர்கள் இறந்து விடுகிறார்கள். என்னுடைய ஊரிலேயே இப்படி எத்தனையோ இளைஞர்களின் மரணங்களை என்னால் கூற முடியும். அவர்களின் மனைவிகள் எல்லாம் இன்று இளம் கைம்பெண்களாக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே இதற்கான முன்னெடுப்பு அதிதீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது மிகவும் தேவையான ஒன்று. தமிழகத்தின் பேசுபொருளாக மது மற்றும் போதைப்பொருள்கள் ஒழிப்பு இன்று மாறியிருக்கிறது. பொதுநிலையில் அக்கறைக் கொண்டவர்கள்  இதில் பங்கேற்கிறார்கள். மருத்துவர் கு, சிவராமன் போன்றோரின் அக்கறை மிக்க பேச்சுகளுக்கு இன்று ஒரு நியாயம் கிடைத்திருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள். மதுவுக்கும் போதைப் பொருள்களுக்கும் எதிராக ஒரு விழிப்புணர்வு  பெருகட்டுமே. இது இந்தியா முழுமைக்கும் வேண்டும் என்று நாம் கேட்கிறோம், மதுவினால் மனித சக்தி வீணாகிறது என்கிறோம். தமிழ்நாட்டிலிருந்துதான் சமூகநீதி பரவியது. அதைப் போல  மது எதிர்ப்பும் பரவட்டுமே.

Sunday, October 1, 2023

மத அரசியல் 1

இன்றைய அரசியல் வெளியில் பா.ஜ.கவின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளும் அச்சங்களும் மிகவும் முக்கியமானவை.  தமிழ்நாட்டின் எந்தவிதமான பண்பாட்டுத்தளத்திலும் உடனிருக்க முடியாத அல்லது தன்னியல்புக்கு மீறியவற்றைக் கொண்டுதான் பா.ஜ.க தமிழ்நாட்டில் தன்னைக் கட்டமைக்கிறது.

ஒட்டுமொத்த தமிழர்களில் இந்துக்களைத் தனியாகப் பிரிக்கும் எந்தவிதமானத் தந்திரங்களும் இங்கு பலிக்கவில்லை என்பது அவர்களுக்கு மிக ஆச்சர்யத்தைத் தந்துகொண்டிருக்கிறது. இந்து மதத்தின் புறவய அடையாளங்களைக் கொண்டும் சில சாதுர்யமான முழக்கங்களைக் கொண்டும் ஓர் இயக்கத்தை இங்கே உருவாக்கிட முடியாது. அதுதான் பா.ஜ.கவின் இன்றைய நிலை. அதன் மாநிலத்தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் பாதயாத்திரை எதற்காக என்பதான எண்ணங்கள் நமக்குள் இருந்தாலும் அந்த யாத்திரையின் வடிவம் என்பது  இந்துக்களின் திருவிழாவைப் போலத்தான் காட்சி அளிக்கிறது. கரகம் ஆடுவது , தேர் இழுப்பது என்பன போன்ற காட்சிகள் ஏராளம். காவித்துண்டும் வேட்டியும் அணிந்த மனிதர்கள் நடமாடுகிறார்கள். அவர்கள் தொண்டர்களா அல்லது பக்தர்களா என்பது பெருத்த சந்தேகம். பக்தியோடு அரசியல் செய்வது தமிழ்நாட்டில் ஆகாது என்னும் அடிப்படையை யாரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

இதை ஆன்மீக மண் என்கிறார்கள். அப்படியல்ல சகல தத்துவார்த்தங்களையும் இங்கே நாங்கள் தவழ விடுகிறோம். அவற்றில் அனைவருக்குமான  நல்லவைகளை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். பௌத்தமும் சமணமும் இங்கே கோலோச்சி இருக்கிறது. ஆசிவகம் இங்கே இருந்திருக்கிறது.சைவ, வைணவ கோட்பாடுகள் இங்கு சொல்லப்பட்டிருக்கின்றன. கூடவே அவற்றிலிருக்கும் உண்மைகளை உணரும் உளவியலும் இந்த மக்களுக்கு இருக்கிறது.

பத்துத்தலை ராவணனை ஒத்த தலை ராமன் வென்றான் என்னும் கதையாடலை இங்கே பகடிதான் செய்தார்களே ஒழிய அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்படி அவர்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் வகையிலும் ராமாயணம் இங்குச் சொல்லப்படவில்லை. கம்பன் அவனுடைய கவிதைக்காக வாசிக்கப்பட்டான். அதில் இருக்கும் கவிதையின் மேன்மை கம்பனை நுணுகி நுணுகி வாசிக்க வைத்ததே அல்லாமல் வேறெந்த கடவுள் கலையும் அல்ல.

அப்படி கடவுளைக் கட்டமைக்க நினைத்த பக்தி இலக்கியங்கள்கூட நேரடியாக கடவுளைக் கட்டமைக்க விழையவில்லை. ஆனால் நீதிகளை அவை கூறின. நீதிகள் எடுத்துக்கொள்ளப்பட்டனவே ஒழிய கடவுள்கள் அல்லர். 

            வேறுபடும் சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்

            நின் திருவிளையாடல் அல்லால்  வேறொன்றும்

            காண்கிலேன் பராபரமே

என்று தாயுமானவர் பாடும் போது எல்லா சமயங்களும் ஒன்றுதான் என்னும் எண்ணம்தான் நீதியாய் ஆனது. அதைத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

        கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

என ஆண்டாள் பாடிய போது அவளின் பக்தியைவிட அவளின் மேம்பட்ட காதல்தான் இங்கே உள்வாங்கப்பட்டது. இப்படி நிறைய சொல்லலாம். ஒருவேளை கடவுள் கட்டமைக்கப்படுகிற அந்த குறித்த நேரத்தில் இங்கே தோன்றிய திராவிட இயக்கங்கள், தலித் இயக்கங்கள் கடவுள் குறித்த கருத்தைப் பின்னுக்குத் தள்ளி அறிவை முன்னுக்கு வைத்தனர்.  கடவுளா அறிவா என்னும் கேள்வியில் தமிழர்கள் அறிவின்பக்கம் தான் நின்றார்கள் . அதனால்தான்  இங்கே கடவுள்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கொண்டாட்டத்திற்குரியவர்களாக இருக்கிறார்கள். மீதி நேரங்களில் மக்கள் தங்கள் அறிவுடன் தான் வாழ்கிறார்கள். வினையாற்றுகிறார்கள்.

வேதங்களை ஓதும் பார்ப்பனர்கள் கூட தமிழ்நாட்டில் வேறுமாதிரிதான் இருக்கிறார்கள். அவர்களால் புராணீகர்களாக விசேஷ நேரங்களில் இருக்க முடிகிறதே  ஒழிய எப்போதும் அவர்களால் அப்படி இங்கே இயங்க முடியவில்லை. கேள்விகளும்  விமர்சனங்களும் விளைந்த மண் இது. எல்லாவற்றையும் கேள்வி கேட்க முடிந்த காரணங்களால்தான் பள்ளிக்கூடங்கள் முளைத்துக் கிளைத்தன.

அதற்கான அதிகாரங்களும் ஆட்சியாளர்களும் இங்கே இருந்தார்கள். ஆனால் என்ன முழுமையான தீர்வை நோக்கி நகர முடியாமல் அவர்களால் பாதியில் இப்பணிகளை விட்டனர். விட்டவற்றைப் பிடித்து மேறினர் ஒடுக்கப்பட்ட மக்கள். மதம் அதுவும் இந்துமதம் அவர்களுக்கு முழுவிரோதி என ஓதப்பட்ட புரட்சியாளரின் கோட்பாடுகளை உள்வாங்கியப் பின்பு அவர்கள் இன்னும் வீரியமாக்கப்பட்டார்கள்.

ஜாதிகளின் அநியாயங்கள் இங்கே இப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கின்றன, ஆனால் அவை ஒட்டுமொத்த இந்துக்களின் ஆதரவோடு இல்லை. பெரும்பான்மை இந்துக்களின் எதிர்ப்புணர்வில்தான் ஜாதிய மோதல்கள் இங்கு நடக்கின்றன. நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.

இந்த அடிப்படையில் அரசியலை அணுகாமல் மதரீதியாகவே பா.ஜ.க தன் அரசியலை தமிழகத்தில் கட்டமைக்க நினைக்கிறது. அதன் ஆகப்பெரும் பின்னடைவு தமிழகத்தில் நேர்வதற்குக் காரணம் இதுதான்.

திரு.அண்ணாமலையின் யாத்திரைத் தொடங்கப்பட்டபோது  உடனிருந்த அதிமுக இன்று அவர்களுடன் இல்லை. உள்ளே ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் வெளியே திராவிட இயக்கத்தலைவரான அண்ணா அவர்களை அண்ணா என்றும் பாராமல் அண்ணாமலை இழிவுப்படுத்தியதால் இப்பிளவு ஏற்பட்டுள்ளது.

வழக்குகள் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என எடப்பாடி அவர்கள் கூறியபிறகு  பா.ஜ.கவுக்கான அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டன என்பது தான் உண்மை.

Friday, December 30, 2022

2022 - 2023

 இந்த ஆண்டின் இறுதி நாள் இது. 2022 ஆம் ஆண்டு பல நிகழ்வுகள் நடந்தன. தனிமனித வாழ்வில் எனக்கு எந்தவிதமான மாற்றமும் இல்லை. உடல்நிலை முன்னேற்றம் கண்டிருக்கிறது. நிறைய நிகழ்வுகளில் பங்கேற்றேன். இவ்வாண்டின் இறுதியில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியிலும் எழுச்சித் தமிழரோடு  பேரா.வெற்றிச் சங்கமித்திரா அவர்களின் என் பார்வையில் எழுச்சித் தமிழர் என்னும் நூல் வெளியீட்டு விழாவிலும் பங்கேற்றேன்.

இன்னும் முன்னெற்றங்களை வருகின்ற 2023 எனக்குத் தரும் என்று நம்புகிறேன். மேலும் நூல்கள் பல எழுத, திரைப்படம் சார்ந்து வேலைகள் செய்ய, அரசியலில் ஓரிடத்தை அடைய சமூகப்பணியிலும் தொடர்ந்து இயங்கிட மனம் நினைக்கிறது.

பல படைப்புகள் இதழ்களில் வெளியிடப்பட வேண்டும். அதற்காக ஒரு பக்கம் வேலை செய்ய வேண்டும். புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் சமூக ஊடகங்களையும் உருவாக்க வேண்டும்.

பார்க்கலாம்

முடியும்.

Saturday, March 5, 2022

என்னென்றும் வளரும் ஒரு மூலிகையாய்

பச்சித்த மாலைப் பொழுதுகளில்

கையசைத்த இரு பறவைகள்

கூடடைந்த ரகசிய கதவுகளைச் சாத்தி மகிழ்கிறது

அடுத்து நிகழும் அந்தி. 

Monday, February 21, 2022

 உதடு குவித்து உன் ஆள்காட்டி விரலுக்கு

முத்தமிட்டுக்கொள்கிறாய்

அவ்விரலில்தான் பாலாற்று மணல்திரட்டில்

என்னை வரைந்து வைத்திருந்தாய்

தீர்ந்துவிடாத மணற்கடிகாரத்தின் பிரதி நான்

Tuesday, February 8, 2022

கடல் காற்று கங்குல் : மின்ஹாவின் கவிதைத் தொகுப்பு

 கவிஞர் மின்ஹாவின் முதல் கவிதைத் தொகுப்பு மிக இயல்பாக என் கைகளுக்கு வந்தது. நாங்கூழ் என்னும் அத்தொகுப்பில் நல்ல கவிதைகள் வாசிக்க வாய்த்தன. அவரது இரண்டாவது தொகுப்பு கடல் காற்று கங்குல். முதல் தொகுப்பைவிட சிறந்த கவிதைத் தன்மையும் பாடுபொருள்களின்மீதான தீர்மானமும் வெளிப்படையாகவும் உறுதியாகவும் தெரிகிறது.

பயணத்தூடாக வாழ்வைப் பார்த்தல் என்னும் அனுபவத்தின் கவிதை மொழிகள் இக்கவிதைகள். இதில் வரும் பாதைகள்,  இயற்கை சார்ந்த பார்வைகள், அவற்றை வாழ்வோடிணைக்கும் கவித்துவம் எல்லாம் இத்தொகுப்பில் மிக அமைதியாக நமக்கு வந்துவிடுகிறது.

கவிதை மாமிசத்தின் எச்சமாகவோ உயிரின் உறைவிடமாகவோ மாறிவிடுகிறபோது உணர்வின் பிரதியாக கவிதை வருகிறது. அதனால் வேகமாக அடைக்கப்படும் வார்த்தைகளில் கவிதைக்கானச் சதைத்துண்டம் நம் மேசையின் மேல் பிரதியாய் காற்றில் படபடக்கிறது. அது கடலாகவும் கங்குலாகவும்  உருவமாற்றம் அடையும் போது வாசகரின் தளத்தில் நிகழும் படைப்பானுவம்  முக்கியமாகிவிடுகிறது

தன்மையிலிருந்து படர்க்கையாகிவிடும் நேசத்தால் அணை என்னும் நதிகொல்லும் பெயர்ச்சொல் வினைச்சொல்லாகி ஏதிலிகளை அணைக்கச் சொல்லும் கவிதை மானுடம் தழுவியது. தேடல்களில் பாதைகளை விரல்களால் வரைய முடியாது எனவும் அப்படி வரையும்போது அவ்விரலில் ஒட்டியிருக்கும் மணற்துகள்கள்தான் ஞானம் என்னும் அவருடைய கவிதைப் படிமம் பாராட்டுக்குரியது

இருட்பருத்தி வெடித்துக் கரைந்து

காக்கைகளின் தொண்டைகளில் 

முடிவுறுகின்றன 

என்னும் உவமை நயம் இருளைப் பருத்திக்கு வைத்து முரண்நயத்தைத் தருகிறது.

இருத்தலின் பேறு

நிலையாமை உணர்தலும்

சாத்தான்கள் களைதலும்

அன்பின் தீந்தைக் கொண்டு

எங்கும் ஒரேசீராய்

வர்ணமாக்கிக்கொண்டு

அடங்க்யிருத்தலும் என

நான் பிதற்றுவதைப் பித்து

எனக் கடத்தலும்

என வாழ்வின் நிலையாமையைக் கூறும் கவிதை மனத்திற்கு இதமானது.

தொகுப்பில் இருக்கிற குறுங்கவிதைகள் அனைத்தும் பல்வேறு உணர்வலைகளைக் கொண்டு வந்து சேர்க்கின்றன.

தொகுப்பு நிறைவான ஒன்றாகவே இருக்கிறது.

Thursday, November 6, 2014

சடையன்குளம்: திமிர்ந்து எழுந்த தலித் இலக்கியப் பிரதி.

காலத்தின் அதீதத்தில் கரைந்துபோய்விட்டது என்று தலித் இலக்கியம் குறித்து கருத்து தெரிவித்துவிட்டு பலர் இளைப்பாறிக்கொண்டிருக்கும் தருணமாக இது இருக்கிறது. பொது சமூகத்தின் அங்கீகாரத்திற்கும், பொது நீரோட்டக்கலப்பிற்கு ஒருவேளை இது அவர்களுக்கு உதவலாம் என்பது வேறு. தலித் இலக்கியத்தின் தேவை தீர்ந்து விட்டதென சிலர் சொன்னவுடன் அதை விவாதப்பொருள் ஆக்காமல் அப்படியே அமைதியாக இருந்துவிட்ட தமிழ்ப் பொது இலக்கியச்சூழலும் கேள்விக்குட்பட்டதுதான்.

இந்தியச் சமூகத்தின் மூலமாகவும், அதன் நெடுகிலும் இயங்குகிற இயங்கியலாகவும் சாதி இருக்கிறது. இந்நிலையில் சாதி அடுக்குகளைத் தகர்க்கிற வேலைகளை நாகரிகச் சமுதாயம் செய்ய எத்தனிக்கும்போது வெளிப்பட்ட இலக்கியவகைமை இன்று தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. அதன் காரணம் சாதி அழிந்துவிட்டது என்பதற்காய் அல்ல. அது மேலும் எழுந்துவிடக் கூடாது என்னும் சிற்றெண்ணம். ஆனால் எதிர்புரட்சியாக சாதி வளர்க்கும் அரசியல் இங்கு வேரூன்றி வருகிறது. தலித்துகளுக்கு எதிராக அவர்களை அடக்கி ஒடுக்கி ஆளுமைச் செய்யும் சாதிகள் ஒன்றாகத் திரளுகின்றன. குறைந்தபட்ச பாதுகாப்பாகக் கூட இல்லாத வன்கொடுமைத் தடைச்சட்டத்தை மாற்ற வேண்டும் என்னும் கோரிக்கையோடு மாவட்டங்கள் தோறும் சாதிய கட்டமைப்பின் காவலர்கள் பறந்துகொண்டிருக்கின்றனர்.

ஆஸ்திரேலிய பழங்குடி மக்களான அபராஜினிகளிடம் மன்னிப்புக்கேட்கும் மனசாட்சி நிறைந்த வேலையை அந்நாட்டின் பாராளுமன்றம் செய்தது.அது அவர்களுடைய நிலத்தை பண்பாட்டை அபகரித்ததற்காக ஆட்சியாளர்கள் பழங்குடியினரிடம் மண்டியிட்டனர். இந்தியாவின் பழகுடிமக்களாகிய தலித் மக்களிடம் இவர்கள் மன்னிப்புக் கூட கேட்க வேண்டாம் அவர்களின் கோரிக்கையாகிய தங்களை மாண்புள்ள மனிதர்களாக நடத்த வேண்டும் என்பதையாவது இந்தியச் சமூகம் தன் கவனத்தில் எடுத்திருந்திருந்திருக்கலாம்.ஆனால் கெடுவாய்ப்பாக அவர்களுக்கு மேலும் துன்பம் தருவதும் சாதி அமைப்பை மனசாட்சியே இல்லாமல் கெட்டிபடுத்துவதும்தான் நடக்கிறது.

சாதியின் கடைசித்துளி இருக்கும் வரைக்கும் தலித் இலக்கியம் இருக்க வேண்டும் என்பதுதான் நியாயமானதாக இருக்க முடியும். ஆனால் தங்களை தலித்துகளாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத ஆனால் தலித் இலக்கியத்தையே தன் உற்பத்திப் பொருளாகக்கொண்டிருக்கும் தலித் எழுத்தாளர்கள்கூட தலித் இலக்கியத்தை நிராகரிக்கும் இச்சூழலில்தான் சடையன்குளம் நம் கைகளில் கிடைக்கிறது.

உப்புவயல், மீசை, போன்ற தலித் இலக்கியங்களைத் தந்த ஸ்ரீதரகணேசன் நமக்கு சடையன்குளத்தைத் தந்துள்ளார். சடையன்குளம்தான் கதை நடக்கும் களம். அந்தச் சிறிய கிராமத்தில் தலித் மக்களுக்கும் மற்ற  அனைத்து சாதி இந்துக்களுக்கும் நடக்கும் போராட்டமே கதை. விடுதலைக்காகவும் வாழ்வுக்காகவும் போராடும் தலித்துகள், அவர்களை மேலும் அடிமைகளாக வைத்திருக்கக் கருதும் ஆண்டைச் சாதிகள் இவர்களின் வாழ்வியல், அவற்றின் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், மாற்றங்கள் என இப்பிரதி தானாக ஒரு வரலாறாகச் சுரக்கிறது.

சடையன்குளத்து சேரிக்கு வாழ்க்கைப்பட்டு வருகிறாள் தொடிச்சி. அவள் ஓர் அற்புதமானவள். ரத்தத்தைப் போல அவள் உடலில் விடுதலையும் ஒரு திரவமாக ஓடிக்கொண்டே இருக்கிறது. சடையன்குளத்தில் இருக்கும் அவள் வருகைக்கு முன் இருந்த தலித்துகள் ஆண்டைகளை எதிர்க்க முடியாதவர்களாக அவர்களின் அடிமைகளாக மட்டுமே இருக்கின்றனர். தொடிச்சியின் வருகை அவர்களுக்கு பல கதவுகளைத் திறக்கிறது.  

சோட்டையன் தோப்பு காத்தமுத்து மகள்தான் தொடிச்சி. அவளை சடையன்குளத்தின் தம்மக்கார சாம்பாத்தி பேரன் நல்லையாவுக்கு கல்யாணம் செய்து வைக்கும் பந்தலில் வந்து சாதி இந்துக்கள் அனைவரும் நடத்தும் வன்முறையிலிந்து கதை ஆரம்பிக்கிறது. தலித் கல்யாணம் ரேடியோ லைட் எல்லாம் போட்டு நடக்கிறதா எனக் கோபம் கொண்ட அவர்கள் கல்யாணப்பந்தலையே துவம்சம் செய்கின்றனர். தொடிச்சி புதுப்பெண். தலைகுனிந்து நின்றிருக்க வேண்டியவள் என்ற நிலையை மாற்றி அவல் அந்தக் களத்தில் நிற்கிறாள். இதிலிருந்துதான் தொடிச்சியின் சாதி எதிர்ப்புப் போர் ஆரம்பிக்கிறது.

கல்யாணத்தில் நடந்த வன்முறையை மனதில் வைத்து பொருமினாள். ’எங்க ஊரா இருந்தா இந்நேரத்திக்கு ரெண்டு தல் பதிலுகு உருளும்’ என்றுபேசினாள். வீட்டில் எல்லா வேலைகளையும் செய்பவள் அவள்.

அந்த ஊரில் அவள்தான் முதன்முதலில் ரவிக்கை தைத்துப் போட்டுக்கொண்டவள். சுங்குடி சேலக்கட்டி இருப்பவள். இந்தக் கோலத்தைப் பார்த்ததுமே அனைவருடைய முகத்திலுக் கலக்கம். சாம்பாத்தி,மாமனார் ஊர்காத்தான் எல்லோருக்கும் தொடிச்சியின் தோற்றம் பயத்தைத் தருகிறது. இந்த நிலையில் அவள் கிணற்றுக்குத் தண்ணீர் எடுக்கப் போகிறாள். எல்லோரும் தண்ணீர் இறைக்கிற கிணற்றண்டை தொடிச்சியின் தோற்றத்தைப் பார்த்ததும் கேலிபேசுகிறார்கள் உயர்சாதிப் பெண்கள். அவர்கள் போனவுடன் கிணற்றண்டைப் போய் நீற் இறைக்கும் வாளியை எடுத்து கழுவி ஊற்றுவாள் தொடிச்சி. இது பெரிய சண்டையாக மாறும். இப்படி தொடிச்சி தன்னுடைய நிலையிலிருந்து சாதி எதிர்ப்பிற்கான எல்லாவற்றையும் செய்வாள்.

இப்படி நாவல் முழுமையும் வரும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒரு சாதி எதிர்ப்புப் போராகவே அமைந்திருக்கும். அத்தனைச் சம்பவங்களும் எதோ கோர்த்து விட்டதைப் போல இல்லாமல் இயல்பானதாக அதே நேரம் வன்மம் மிக்கதாக இருக்கும். ஊர்கூட்டத்தில் தலித்துகளின் பெயரைச் சொல்லியே இதுவரை யாரும் அழைத்ததில்லை. சேரி மக்களின் பெயர்களை இளக்காரமாகக் கூப்பிடும் வழக்கமே இருந்திருக்கிறது.

தலித்துகளை தங்கள் அடிமைகளாக வைத்திருந்த வாழ்வியலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விடுதலை அடைகின்றனர் தலித்துகள். அது தொடிச்சியின் வாழ்விலிருந்தே தொடங்குகிறது. தொடிச்சியின் தொடர் எதிர்வினைகளால் அவளுடைய மாமனாருக்கும் கணவனுக்கும் ஊர்க்காரர்களால் கொடுக்கப்பட்ட மாடுகளும் வண்டியும் பறித்துக்கொள்ள புது தொழிலைச் செய்ய ஆரம்பிக்கின்றனர். செங்கல் சூளைகளில் வேலை செய்வது, பிறகு தாங்களே செங்கல் சூளையை குத்தகைக்கு எடுத்து கல்லை விற்பது, பிறகு நிலத்தை குத்தகைக்கு எடுப்பது பயிர் செய்வது என அவர்கள் தொடிச்சியின் வீரமான முடிவுகளால் நடக்கிறது

சடையன்குளத்து தலித்துகளின் மதமாற்றம், பொருளாதார வளர்ச்சி, கிறித்தவ பாதிரிமார்களின் வருகை, கல்விஉரிமை. வேலை வாய்ப்புகள் என அவர்கள் கொஞ்சமாக சாதியக் கட்டிலிருந்து வெளியேற வெளியேற வெறிகொள்கிறது சாதி ஆணவம். இதனால் தொடிச்சியின் கணவன் கொல்லப்படுகிறான். சாதி ஆதிக்கக்காரர்கள் திட்டமிட்டு தங்கள் இளைஞர்களை போலீசில் சேர்த்து சடையன்குளத்து தலித்துகளை நேரிடையாக எதிர்க்கமுடியாமல் அவர்களை சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அழிக்கிறார்கள்.

இந்த நாவல் அப்பட்டமான ஒரு தலித் நாவலாகப் பரிணமிக்கிறது. தலித் விடுதலைக் கூறுகளான பெண் முன்னின்று போரிடுவது, தொடிச்சி, தம்மக்கார சாம்பாத்தி, ஊருக்கு வரும் இசபெல்லா போன்ற கன்னியாஸ்திரிகள், ஆதிக்க சாதியில் இருக்கக் கூடிய காதலிகள், என எல்லாப் பெண்களும் ஒரு வகையில் தன் வாழ்வின் அடிமைத்தனத்தை அறுத்தெறியப் புறப்பட்டவர்கள்.

நாவலில் காட்டப்படும் தலித் இணையர்களில் முடிவெடுக்கக்கூடியவர்களாக பெண்கள் இருப்பது தலித் குடும்ப அமைப்பில் காக்கப்படும் குடும்ப ஜனநாயகத்தைக் காட்டுகிறது, நல்லையா-தொடிச்சி.குன்னிமரியான் – செம்பகம்,மூக்கன் – கருப்பாயி, முத்துவீரன் – கருப்பாயி, வைத்தான் செல்லையா – கன்னியம்மா ஆகியோர் இத்தகையவர்களே.

நிலத்தை அடைவது என்னும் குறிக்கோள் தலித்துகளுக்கான இடத்தைப் பெறுவதற்கானப் போராட்டம், நிலம் வாங்குவதற்கான முயற்சிகள் நிலத்தைப் பயன்படுத்திப் பொருளீட்டும் போக்கு ஆகியவற்றைச் சொல்லலாம். அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கு தேர்தலில் போட்டியிடுவது, அதற்காக எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் போரிடுவது, தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க எந்த நிலையிலும் தளராமல் இருக்கும் மனப்பான்மை, சடையன்குளத்திலேயே குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் அருந்ததியர் சமூகத்துடன் தொடிச்சி கொள்ளும் நட்பும் அவர்களுக்கு அவள் செய்யும் உதவியும் உட்சாதிப் பூசல்களைக் கடந்து தலித்துகள் ஒன்றாவதற்கான ஒரு புள்ளியாக மாறுகிறது.வைத்தான் செல்லையாவும் அவனுடைய மனைவி கன்னியம்மாவும் மரியசிலுவையாகவும் அமலோற்பவமாகவும் மதம் மாறியபின் அவர்கள் சமூகவாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் முக்கியபதிவுகளாக இருக்கின்றன. சாதி ஒழிப்பிற்கு மதம்மாற்றம் ஒரு முக்கிய ஆயுதம் என்னும் அரசியல் சூத்திரம் அது எழுதப்படுவதற்கு முன்பே தலித் வாழ்வியலாக இருந்தது என நாவல் முழுக்க தலித் விடுதலைக் கருத்தியலை எந்தவிதமான துருத்தலும் வேண்டுமென்றே செய்தல் என்னும் தன்மையும் இல்லாமல் பரப்பியிருப்பார் ஸ்ரீதரகணேசன்.

அவருடைய கதை சொல்லல் முறை நேரிடையாக கதைசொல்லல் முறையாக இருப்பதனால் வாசிப்பதற்கு எளிமையாகவும் அதே நேரத்தில் காத்திரமான நிகழ்ச்சிகளை அடுக்குவதால் அடுத்து என்ன நடக்கிறது என்று அறியும் ஆவல் நாவல் வாசிப்பில் கிடைக்கிறது. ஒவ்வொரு முறையும் தலித்துகள் அடுத்தக் கட்டத்திற்குச் செல்லும் போது அப்பாடா என்று ஆசுவாசப்படும் மனது அடுத்து வரும் கனமான கதைப் போக்கால் மீண்டும் வலி வந்த காயத்தைப் போல மாறிவிடுகிறது.

தலித் இலக்கியம் என்பது தலித்துகள் வாசிக்கும்போது இன்னும் போராட வேண்டும் என்னும் உத்வேகத்தையும் தலித் அல்லாதவர்கள் வாசிக்கும்போது அவர்களின் மனசாட்சியைக் கிளறும் வகையில் இருக்க வேண்டும் என்னும் சரண்குமார் லிம்பாலேவின் கருத்திற்கேற்ப சடையன்குளம் அமைந்திருக்கிறது.

சடையன்குளம் என்னும் ஓர் ஊர் இந்திய சாதியத்தன்மையின் ஓர் அலகாக அமைந்திருக்கிறது. தலித் இலக்கியத்தில் நாவல் வகைமையை மேலும் செழுமைப்படுத்தி அதனை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தி, இதன்மூலம் எழுதப்படாத இன்னும் எத்தனையோ சடையன்குளங்கள் வெளிவர உந்துதலைத் தந்திருக்கிறது சடையன்குளம்.

சடையன்குளம்( நாவல்)
ஆசிரியர் :  ஸ்ரீதர கணேசன்
வெளியீடு : கருப்புப் பிரதிகள்,சென்னை- 5
விலை : ரூ. 250/-

Tuesday, November 4, 2014

ஞாயிறு போற்றுதும்

நன்றி: மனிதன்
அதனாலென்ன அதன் தீவிரம் அப்படி
உலர்ந்து சருகான ஒரு இலையின் வாழ்வைப் போல
உதிர்ந்துகிடக்கும் அதன் கதிர்களை நீங்கள் எடுத்துச்செல்ல
ஏதுவாய்ப் பெய்திருக்கிறது இந்த அமில மழை
குளிர்ந்துக் கருகியிருக்கும் ஒற்றைக் கதிரொன்றை
சிறுமி ஒருத்தி தன் வீட்டிற்கு எடுத்துச்செல்ல
ஒளியை உறிஞ்சி அது இருள் கக்கிய மாயத்தை
அவளால் சொல்ல முடியவில்லை
சாலையெங்கும் வீழ்ந்துக் கிடக்கும்
அந்த ஒளியற்றக் கதிர்களை மிதித்துக்கொண்டே
செல்கின்றன எல்லா வாகனங்களும்
செயற்கையாய் ஒளி செய்யத் தெரிந்த அவர்கள்
கருகிக் கிடக்கும் அதன் ஒளிக்கற்றைகள் குறித்த
அக்கறை ஏதுமற்றவர்களாகத்தான் இருந்தார்கள்
ஆயினும்
அவர்களால் நிச்சயமாய் செய்யமுடியாது
இப்போது ஒளிவீசும் ஒரு ஞாயிற்றைப் போல்.

பகலுயிர்

சிமிழுக்குள் நல்கமுடியாததாக இருக்கிறது
இன்றையப் பகல்
அதன் பிராயசித்தங்களை நீங்கள் அறிய முடியாமல் போனால்
தாவரங்களின் சிறுகொழுந்துகள்மீது ஊறும்
செந்நிற சிற்றெறும்புகள் பாதை மாறலாம்
பழுத்துத் தொங்கும் கனியின் சுவையறிய
துடிக்கும் பகல்பொழுதின் நாக்கு
அதை உங்களுக்காய் விட்டுக் கொடுக்க
நீங்கள் கல்லெறிகிறீர்கள்
பூங்காற்றின் வாசம் நிறைந்த இரவின் பிரதியாய்
நீங்கள் இந்தப் பகலை உணர்வீர்களானால்
அது உங்களை
தடைகளற்ற வெளியெங்கும் வியாபித்திருக்கும்
சமவெளிக்கு அழைத்துச் செல்லும்.
                                          
Sunday, November 2, 2014

ரத்தவனம்

பசுமையாய் இருந்த என் நந்தவனத்திற்குள்
நான் நடக்கையில் ஈரிட்டிருந்தன என் பாதங்கள்
துயரத்தின் முட்கள் எதுவும் என் தோட்டத்தில் இல்லை
அன்பின் பேரமைதிப் பூத்தத் தடாகத்தில்
வெண்மைநிற அழகிய அன்னங்கள் நீந்திவிளையாடின
அன்பே நீ தந்த முத்தத்தினை
ஓர் உதிராத பூவாக்கி அதன் கனிவிதையை நட்ட இடத்தில்
உன் வண்ணத்துப்பூக்கள் மலரும் மரம் வளர்ந்திருந்தது
பறக்கமுடியா தன் குஞ்சுகளுக்கு உணவூட்டிய பிறகு
பாடல்களைச் சொல்லிக்கொடுத்தது அந்த நீலப்பறவை
தன் புல்லாங்குழலில் சுவாசத்தை அனுப்பி
இசைத்துணுக்குகளை மெல்ல எறிந்தான் என்னிரவுப் பாடகன்
அமைதியின் ஓவியங்கள்
எங்கும் வியாபித்த வான்வெளியில் அசைந்தன
அன்று ஆம் அன்றுதான்
குண்டுகளின் சிதிலங்களை
என் சுவர்களுக்கு அவர்கள் உடுத்தியபோது
கட்டிலுக்கு அடியில் பதுங்கியக் குழந்தை ஒட்டிக்கொண்டிருந்தது வயிற்றிலிருந்து வெளியேறிய பச்சை ரத்தத்தில் தரையோடு
பிய்த்தெடுத்துப் போனோம் நந்தவனத்திற்கு
கால்களைக் கிழிக்கின்றன குண்டுகளின் சிதறல்கள்.

யாழன் ஆதி

புதிய வாழ்வியல் அக்டோபர் 2014

Monday, October 20, 2014

நானும் நீயும்

இருப்பதொன்றுமில்லை
மீந்திருக்கும் இந்தச் சாம்பலைத் தவிர
காலத்தின் கெட்டித்தட்டிய என் அந்தரங்கத்தின்மீது
உமிழப்பட்ட எச்சிலைத் துடைக்க
என் ஆயுதங்கள் அத்தனையையும் நான் பயன்படுத்துகிறேன்
நான் படித்த புத்தகங்களை உன் மேசைமீது வைக்கிறேன்
என் எழுத்துக்களை என் பாட்டியின் நிலக்கடலைப் பானையைப் போல்
உன் முன்னால் கவிழ்த்துக் கொட்டுகிறேன்
நாகரிகமடைந்த என் சொற்களை நான்
காற்றில் உலவ விடுகிறேன்
உன் செவிப்பறைகளை வந்தடைய
ஏழு கடல் ஏழு மலைகளைத் தாண்டி நான் எடுத்துவந்த
என் தாமரையைப் பூவை நான்
உனக்களிக்கிறேன்
சொற்களின் சூட்சமம்நிறைந்த என் கவிதைகளை
உனக்குத் தருகிறேன்
என் கதைகள் உன் கனத்த இருதயத்திற்குள் ஊசியைப் போல்
மெல்ல இறங்கும் என நம்பியே சொன்னேன்
மாறிப் போன என் வாழ்வின் பலமுறைமைகளை நான்
உனக்கு விளங்க நடந்தேன்
எல்லாவற்றையும் விட வேறெவரைவிடவும்
மிகவும் அதீத நட்போடு இருக்கவே நான்
உன்னை நோக்கி வருகிறேன்
எப்படி நான் வந்தாலும்
நீ நெருப்பாகவே வந்து என்குடிசைகளைக் கொளுத்திவிட்டே
செல்கிறாய்
இனி நான் என் செய்வது என் சகமனிதனே
சாம்பலிலிருந்து ஊற்றெடுத்துத் தண்ணீராய்ப் பிரவகிக்கிறேன்
வா இனி நீ நெருப்பாய்.

அக்.2014 புதிய கோடாங்கி

Saturday, May 24, 2014

யாருமற்ற சொல் : யாருமற்றவர்களுக்கான யாழன் ஆதியின் சொற்கள்

                                                              - சு.மு.அகமது

சாதியத்தீ விட்டுச்சென்ற மிச்சங்கள் சாம்பலாய் நினைவுகளை விட்டகலாது குவிந்து கிடக்கிற தர்மபுரி மாவட்டம் நத்தம்,கொண்டம்பட்டி,அண்ணாநகர் குழந்தைகள் தொலைத்தது வீடுகளையும் புத்தகங்களையும் பொம்மைகளையும் மட்டுமல்ல.தங்களது குழந்தமையை இழந்து ‘மிரட்சி’யின் பிடியில் சிக்கி தவிப்பது தான் நிதர்சன உண்மை.ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வியக்கம் இவ்வாறாக தான் ஆதிக்கவர்க்கத்தினரால் கட்டமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.அரச பயங்கரவாதமும் இதற்கு துணை நிற்பது தான் கேவலத்தின் உச்சம்.

‘என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்.என்று மடியும் இந்த அடிமையின் மோகம்’.இது நாடு ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டு கிடக்கையில் எழும்பின ஆதங்கக்குரல் பாரதியிடமிருந்து. அடிமைதளையிலிருந்து மீண்டு வருகிற முயற்சிகள் பன்னெடுங்காலத்திற்கு முன்பேயே வார்த்தெடுக்கப்பட்டு சுதந்திர தாகத்தினை போக்கிடும் ஊற்றென பீறிட்டு எழுந்த வண்ணம் பல்கி பெருகி வருவது கண்கூடு.மகிழ்ச்சியின் பூரிப்பு ஒருபுறமும் நம்மை பரிதவிக்கவிட்டு இன்றும் தொடரும் சாதிய வன்கொடுமைகள் பாப்பாபட்டி,கீரிப்பட்டியாகவும் அண்மையில் தர்மபுரி நிகழ்வுகளாகவும் நம்மை பீடித்திருக்கிறது.இவற்றின் ஊடாகத்தான் நம்மால் பயணப்பட முடிகிறது.பயணப்படவும் வேண்டியுள்ளது.உத்தபுரங்கள் தகர்ந்தாலும் உள்ளத்துபுரங்கள் இன்னும் மாசடைந்து தான் கிடக்கிறது. வர்க்கப்பிரிவினையை வார்த்தெடுத்த ’மனு’ கூட நினைத்திருக்க வாய்ப்பில்லை.தன்னால் விதைக்கப்பட்ட ‘விஷவிதை’யை விருட்சமாக்கும் பணியை ஆதிக்கவர்க்கம் இவ்வளவு செம்மையாகவும் செழுமையாகவும் கைகூடிட செய்யுமென்று.

ஆரம்ப காலந்தொட்டே ஆதிக்கவர்க்கத்துக்கும் பார்ப்பனீயத்துக்கும் அறைகூவல் விடுக்கும் விதமாக ஒடுக்கப்பட்டவர்களின் உள்ளங்களில் விடுதலையின் வேட்கையை கிளர்ந்தெழ செய்ய பலரும் செயல்பட்டுள்ளனர்.சாஹூஜி மஹாராஜ்,பாபா பூலே,நாராயண குரு, அயோத்திதாசர்,அப்பாதுரை,புரட்சியாளர் அம்பேத்கர்,பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியார்,ரெட்டைமலை தாத்தா சீனிவாசன்,தந்தை சிவராஜ்,அன்னை மீனாம்பாள்,பள்ளிகொண்டான் தளபதி கிருஷ்ணசாமி,கான்ஷிராம் தொட்டு சமகாலத்தில் பூவை மூர்த்தியார், மாயாவதி அம்மையார், தொல். திருமாவளவன் என தொடரும் பயணத்தின் ஒரு புள்ளியாய் தான் நம் தோழர் யாழன் ஆதியை கண்ணுற முடிகிறது.காத்திரமான தனது படைப்புக்கள் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாய் ஓங்கி முழக்கமிடும் கலகக்குரல் இவரது. தமிழீழம்,பெண்ணிய விடுதலை,தலித்தியம் என்கிற அரச பயங்கரவாதத்தினாலும் ஆதிக்கவர்க்கத்தினாலும் ஒடுக்கப்பட்டவர்களின் அவலமான வாழ்வியல் போன்றவற்றை நெடுங்காலமாய் பதிவு செய்து வருகிறார்.சிதறுண்டு கிடக்கிற தலித்திய சிந்தனைகளை பிரிந்து கிடக்கிற சொந்தங்களை ஒருங்கிணைக்கும் சமூகப்பணியையும் சிறப்பாய் செய்வதின் சூட்சுமம் அறிந்தவர் தோழர்.இவரது ஆறாவது கவிதைத்தொகுப்பு இந்நூல்.

‘யாருமற்ற சொல்’ என்பதன் உள்ளார்ந்த பொருள் “அசரீரி”.ஆனால் கலகத்தின் குரலை அசரீரி எனக்கொள்வது விடுதலை வேட்கையை கொச்சைப் படுத்தலுக்கு சமமாகிவிடக்கூடிய பேராபத்து உள்ளதால் கலகத்தின் குரலை ‘யாருமற்றவர்களின் சொல்’லாய் கொள்ள வேண்டுமென்பது என் கருத்து.

இத்தொகுப்பின் முதல் கவிதையான ‘மிருக வாசனை’யில் தமிழீழத்தில் நிகழ்தேறிய கொடுமைகளை,இனவொழிப்பினை பதிவு செய்கிறார்.‘சிவந்த நாவினை தோளில் போட்டுக்கொண்டு குருத்துக்களையும் நசுக்கியவண்ணம் ஆடைகளற்ற உடல்கள் மீது விந்து பீச்சும் கொடிய மிருக’மாய்,இனவாத அரச அடையாளமாய் வடித்து காண்பித்திருப்பது ராஜபக்‌ஷே தவிர்த்து வேறு யாராகவும் இருக்க முடியாது.நம்முள் கோபம் கொப்புளிக்கிறது.கொதியுறும் குருதியின் வெம்மையிலேயே இனவாதத்தை பொசுக்கும் வீரியம் பிறந்துவிடுகிறது.

‘கொலை மரம்’ எனும் கவிதையில் மனங்கிழிக்கும் முட்புதர் என்பதாய் தீண்டாமை வன்கொடுமைகளைப்பற்றி சொல்கிறார். முட்புதரை களைய முடியுமா என்ற கேள்விக்கு பதில் அதன் ஆழமான வேர் பாய்ச்சியுள்ள தன்மையை தர்மபுரியில் கோர தாண்டவமாடிய கோரமுகத்தைக்கொண்டு வெளிச்சமிடுகிறார்.

‘முன்னிலம்’ எனும் கவிதையினூடாக வாழ்விடம் குறித்தான இவரது அழகியல் பதிவு இன்று நமக்கு வாய்க்காத சுவரில் மட்டுமே தொங்கி காட்சியாகிப்போன ஓவியம் .

‘இழந்த கோடை’யில் நீரற்று வாழும் வாழ்க்கையயும் மின்சாரமில்லா இருளையும் வெளிச்சமிட்டுள்ளார்.கூடவே இளமையில் நாம் சுகித்த கோடை விளையாட்டுக்களை எவ்வாறு இன்றைய இளைய தலைமுறை தொலைத்துள்ளது என்பதை வீடியோ விளையாட்டினுள் அடக்குகிறார்.

‘இடிந்த கரை’ முக்கியமான பதிவு.மக்கள் நிரப்ப விடாமல் தடுக்கும் எரிபொருளை அவர்களின் வயிற்றில் நிரப்ப எத்தனிக்கும் ஆட்சியாளர்கள் குறித்த கவிதை.அதில் ’மக்களற்ற வீதியில் யாருக்கு விளக்கெரிக்க போகிறீர்கள் அணுவுலையில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தில்’என்கிற இவரது கேள்வி நியாயமானது.

‘பாலி நதி’ பாழாய் போன பாலாறு குறித்தான பதிவு. ’தாயின் மார்பறுத்து தற்காலிக பசி நீக்கும் எங்கள் கைகளை கழுவ இன்னும் இருப்பதையெல்லாம் சுரக்கிறாய் நீ’ என்று நாம் எவ்வாறெல்லாம் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தினாலும் இயற்கை அன்னை நம்மை அரவணைத்து செல்வதை பதிவு செய்கிறார்.

‘நிராகரித்தல்’-தூய சொல் குறித்தானது.தூய சொல் பெற வேண்டி உயிரைத் தர வேண்டுமென்று கேட்ட நண்பனுக்கு அறிவுரையானது இக்கவிதை.

தொகுப்பின் தலைப்புக்கான கவிதை ‘யாருமற்ற சொல்’. முன்னமேயே சொன்னது போல் இதை அசரீரி என்றால் கலகக்குரலின் வீரியம் சிதைந்திடுமோ என்கிற ஐயப்பாடு உள்ளதால் அதை தவிர்த்து யாருமேயில்லாத அநாதையான உணர்வை நாம்மால் உருவாக்கப்பட்டு, அதன் மீது தோய்த்து வைத்திருக்கும் ஒரு சொல்லை தேடுகிற போது அந்த சொல் ’அன்பு’ என்பதாய் தான் முன்னால் வந்து நிற்கிறது.மனிதன் தொலைத்த மனிதம் ,அன்பு செலுத்துதல் இதைத்தான் யாருமற்ற சொல்லாய் கொண்டேன்.இதை கடந்து கவிதையின் ஊடாக பயணிக்கிற போது புது விதமான சில சிந்தனைகளும் இயல்பாய் நம்மை தொற்றிக்கொள்கின்றன.‘புறாக்களின் கைகளைக் கொத்தி தின்றுவிட்டு உதிர்ந்துவிட்டன ஆலிவ்மர இலைகள்’என துவங்கும் கவிதையின் முதல் வரியே சமாதானம் செய்து வைக்க வேண்டிய ஐக்கிய நாடுகள் சபையே அரச பயங்கரவாதத்துக்கும் இன்வொழிப்புக்கும் துணைபோவதாய் ஒரு சித்திரம் குறியீடாய் பதியப்பட்டுள்ளது.தொடர்ந்து,’புராதனக் கோயில்களின் மேல் அமர்ந்த கருப்புப்பறவைகள் எச்சமிடுகின்றன சிதைந்த வெளிச்சுவர் மீதிருக்கும் சிற்பங்கள் மீது’என்கிறார்.கோயில்களில் வெளிச்சுவர் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்களின் குறியீடாய் தான் கருப்புப்பறவையை பார்க்கத்தோன்றுகிறது.
தொகுப்பின் கடைசி பக்கத்து கவிதையாய்’உரத்து பேசுவோம் சாய்ரா’என்ற கவிதை,முதலில் தேற்றுதல் தொனியில் துவங்கி பின்பு ஆதங்கக்கேள்விகளோடு விரிவடைந்து நம்மை அதிர்ச்சியடைய செய்கிறது.
அந்த கவிதை இப்படியாக துவங்கி...

“சாய்ரா நீ ஒன்றும் அதிர்ச்சி அடையாதே
அவர்கள் அப்படித்தான்
கருத்த உன் தேகத்தை அவர்கள்
தேக்கி வைக்கப்பட்ட நீர் நிறைத்த அணை எனக்
கொள்கின்றனர்
கூர்த்த உன் விழிகள்
அவர்களின் உலோகமுள் கட்டிய தூண்டில்களில்
சிக்கித் தவிக்கும் மீன்கள்
நீ சேமித்து வைத்திருக்கும் உன் அன்பு நிறைந்த
குடுவைகளை அவர்கள் போட்டு உடைக்க
எப்போதும் தயாராக இருக்கின்றனர்
நீ பாதுகாக்கும் உன் அடிவயிற்றுப் பள்ளம்
அவர்களின் பதுங்குகுழியாகவேண்டும் என்றே
நினக்கிறார்கள்
மேலும்
நீ உழைக்கப்பயன்படுத்தும் கால்களை
அவர்கள் துய்க்க நினைக்கும்
கொடூரம் எப்போதும் நடந்துகொண்டேதான்
இருக்கும்

ஏன் சாய்ரா நாம் யாரும் உரத்துபேசவில்லை
யார் காரணம் பெண்ணை பெண்ணாகப்பார்க்காமல்
போனதற்கு
கால்தூக்கி ஆட முடியாத உமையவளை
ஒரு மீட்டர் தூரத்தில் ஒண்ணுக்கடிக்கும் சிவநாதன்
தோற்கடித்ததை
பெண்கோலத்தில் இருந்த கருந்திருமாலை
புணர ஓடி நிலத்தில் சிந்திய சிவசிந்தணுக்களை
ஆடைபறித்து அம்மணம் பார்த்த லீலாவினோதனை
ஆதிக்கசாதிக்காரன்களால்
வன்புணர்ந்து விசிறியடிக்கப்பட்ட தலித் பெண்களை
இவற்றையெல்லாம் பேசாமல் முடியாது
காலாதீதத்தின் ஆதியிலிருந்து வரும்
வன்புணர்வுகளை
இயலாதபோது குறிகளில் செருகப்படும்
குச்சிகளை உலோகத் தண்டுகளை”...
என்பதாய் முடிகிறது.இதில் கயர்லாஞ்சி கொடுமையையும் டில்லி அபினயாவிற்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகளைப்பற்றி ‘சாய்ரா’என்ற பெண்ணிய குறியீட்டிடம் உரையாடல் நிகழ்த்துகிறார்.
இவ்வாறாக ’யாருமற்ற சொல்’ யாருமற்றவர்களின் சொல்லாக உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.அன்பை பிரதானப்படுத்தும் காதல் கவிதைகள் சிலவும் உள்ளன.கொதித்து மேலெழும்பும் பால் மீது தண்ணீர் தெளித்து அடங்க வைப்பது போல் உதிரம் கொதியுறும் போது அதை அடக்க இக்கவிதைகள் துணைபுரிகின்றன.ஓட்டத்தில் தடையாய் அவை மாறாதிருக்கக் கடவ.

சடையன்குளம்: திமிர்ந்து எழுந்த தலித் இலக்கியப் பிரதி.

காலத்தின் அதீதத்தில் கரைந்துபோய்விட்டது என்று தலித் இலக்கியம் குறித்து கருத்து தெரிவித்துவிட்டு பலர் இளைப்பாறிக்கொண்டிருக்கும் தருணமாக இது இருக்கிறது. பொது சமூகத்தின் அங்கீகாரத்திற்கும், பொது நீரோட்டக்கலப்பிற்கு ஒருவேளை இது அவர்களுக்கு உதவலாம் என்பது வேறு. தலித் இலக்கியத்தின் தேவை தீர்ந்து விட்டதென சிலர் சொன்னவுடன் அதை விவாதப்பொருள் ஆக்காமல் அப்படியே அமைதியாக இருந்துவிட்ட தமிழ்ப் பொது இலக்கியச்சூழலும் கேள்விக்குட்பட்டதுதான்.

இந்தியச் சமூகத்தின் மூலமாகவும், அதன் நெடுகிலும் இயங்குகிற இயங்கியலாகவும் சாதி இருக்கிறது. இந்நிலையில் சாதி அடுக்குகளைத் தகர்க்கிற வேலைகளை நாகரிகச் சமுதாயம் செய்ய எத்தனிக்கும்போது வெளிப்பட்ட இலக்கியவகைமை இன்று தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. அதன் காரணம் சாதி அழிந்துவிட்டது என்பதற்காய் அல்ல. அது மேலும் எழுந்துவிடக் கூடாது என்னும் சிற்றெண்ணம். ஆனால் எதிர்புரட்சியாக சாதி வளர்க்கும் அரசியல் இங்கு வேரூன்றி வருகிறது. தலித்துகளுக்கு எதிராக அவர்களை அடக்கி ஒடுக்கி ஆளுமைச் செய்யும் சாதிகள் ஒன்றாகத் திரளுகின்றன. குறைந்தபட்ச பாதுகாப்பாகக் கூட இல்லாத வன்கொடுமைத் தடைச்சட்டத்தை மாற்ற வேண்டும் என்னும் கோரிக்கையோடு மாவட்டங்கள் தோறும் சாதிய கட்டமைப்பின் காவலர்கள் பறந்துகொண்டிருக்கின்றனர்.

ஆஸ்திரேலிய பழங்குடி மக்களான அபராஜினிகளிடம் மன்னிப்புக்கேட்கும் மனசாட்சி நிறைந்த வேலையை அந்நாட்டின் பாராளுமன்றம் செய்தது.அது அவர்களுடைய நிலத்தை பண்பாட்டை அபகரித்ததற்காக ஆட்சியாளர்கள் பழங்குடியினரிடம் மண்டியிட்டனர். இந்தியாவின் பழகுடிமக்களாகிய தலித் மக்களிடம் இவர்கள் மன்னிப்புக் கூட கேட்க வேண்டாம் அவர்களின் கோரிக்கையாகிய தங்களை மாண்புள்ள மனிதர்களாக நடத்த வேண்டும் என்பதையாவது இந்தியச் சமூகம் தன் கவனத்தில் எடுத்திருந்திருந்திருக்கலாம்.ஆனால் கெடுவாய்ப்பாக அவர்களுக்கு மேலும் துன்பம் தருவதும் சாதி அமைப்பை மனசாட்சியே இல்லாமல் கெட்டிபடுத்துவதும்தான் நடக்கிறது.

சாதியின் கடைசித்துளி இருக்கும் வரைக்கும் தலித் இலக்கியம் இருக்க வேண்டும் என்பதுதான் நியாயமானதாக இருக்க முடியும். ஆனால் தங்களை தலித்துகளாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத ஆனால் தலித் இலக்கியத்தையே தன் உற்பத்திப் பொருளாகக்கொண்டிருக்கும் தலித் எழுத்தாளர்கள்கூட தலித் இலக்கியத்தை நிராகரிக்கும் இச்சூழலில்தான் சடையன்குளம் நம் கைகளில் கிடைக்கிறது.

உப்புவயல், மீசை, போன்ற தலித் இலக்கியங்களைத் தந்த ஸ்ரீதரகணேசன் நமக்கு சடையன்குளத்தைத் தந்துள்ளார். சடையன்குளம்தான் கதை நடக்கும் களம். அந்தச் சிறிய கிராமத்தில் தலித் மக்களுக்கும் மற்ற  அனைத்து சாதி இந்துக்களுக்கும் நடக்கும் போராட்டமே கதை. விடுதலைக்காகவும் வாழ்வுக்காகவும் போராடும் தலித்துகள், அவர்களை மேலும் அடிமைகளாக வைத்திருக்கக் கருதும் ஆண்டைச் சாதிகள் இவர்களின் வாழ்வியல், அவற்றின் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், மாற்றங்கள் என இப்பிரதி தானாக ஒரு வரலாறாகச் சுரக்கிறது.

சடையன்குளத்து சேரிக்கு வாழ்க்கைப்பட்டு வருகிறாள் தொடிச்சி. அவள் ஓர் அற்புதமானவள். ரத்தத்தைப் போல அவள் உடலில் விடுதலையும் ஒரு திரவமாக ஓடிக்கொண்டே இருக்கிறது. சடையன்குளத்தில் இருக்கும் அவள் வருகைக்கு முன் இருந்த தலித்துகள் ஆண்டைகளை எதிர்க்க முடியாதவர்களாக அவர்களின் அடிமைகளாக மட்டுமே இருக்கின்றனர். தொடிச்சியின் வருகை அவர்களுக்கு பல கதவுகளைத் திறக்கிறது.  

சோட்டையன் தோப்பு காத்தமுத்து மகள்தான் தொடிச்சி. அவளை சடையன்குளத்தின் தம்மக்கார சாம்பாத்தி பேரன் நல்லையாவுக்கு கல்யாணம் செய்து வைக்கும் பந்தலில் வந்து சாதி இந்துக்கள் அனைவரும் நடத்தும் வன்முறையிலிந்து கதை ஆரம்பிக்கிறது. தலித் கல்யாணம் ரேடியோ லைட் எல்லாம் போட்டு நடக்கிறதா எனக் கோபம் கொண்ட அவர்கள் கல்யாணப்பந்தலையே துவம்சம் செய்கின்றனர். தொடிச்சி புதுப்பெண். தலைகுனிந்து நின்றிருக்க வேண்டியவள் என்ற நிலையை மாற்றி அவல் அந்தக் களத்தில் நிற்கிறாள். இதிலிருந்துதான் தொடிச்சியின் சாதி எதிர்ப்புப் போர் ஆரம்பிக்கிறது.

கல்யாணத்தில் நடந்த வன்முறையை மனதில் வைத்து பொருமினாள். ’எங்க ஊரா இருந்தா இந்நேரத்திக்கு ரெண்டு தல் பதிலுகு உருளும்’ என்றுபேசினாள். வீட்டில் எல்லா வேலைகளையும் செய்பவள் அவள்.

அந்த ஊரில் அவள்தான் முதன்முதலில் ரவிக்கை தைத்துப் போட்டுக்கொண்டவள். சுங்குடி சேலக்கட்டி இருப்பவள். இந்தக் கோலத்தைப் பார்த்ததுமே அனைவருடைய முகத்திலுக் கலக்கம். சாம்பாத்தி,மாமனார் ஊர்காத்தான் எல்லோருக்கும் தொடிச்சியின் தோற்றம் பயத்தைத் தருகிறது. இந்த நிலையில் அவள் கிணற்றுக்குத் தண்ணீர் எடுக்கப் போகிறாள். எல்லோரும் தண்ணீர் இறைக்கிற கிணற்றண்டை தொடிச்சியின் தோற்றத்தைப் பார்த்ததும் கேலிபேசுகிறார்கள் உயர்சாதிப் பெண்கள். அவர்கள் போனவுடன் கிணற்றண்டைப் போய் நீற் இறைக்கும் வாளியை எடுத்து கழுவி ஊற்றுவாள் தொடிச்சி. இது பெரிய சண்டையாக மாறும். இப்படி தொடிச்சி தன்னுடைய நிலையிலிருந்து சாதி எதிர்ப்பிற்கான எல்லாவற்றையும் செய்வாள்.

இப்படி நாவல் முழுமையும் வரும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒரு சாதி எதிர்ப்புப் போராகவே அமைந்திருக்கும். அத்தனைச் சம்பவங்களும் எதோ கோர்த்து விட்டதைப் போல இல்லாமல் இயல்பானதாக அதே நேரம் வன்மம் மிக்கதாக இருக்கும். ஊர்கூட்டத்தில் தலித்துகளின் பெயரைச் சொல்லியே இதுவரை யாரும் அழைத்ததில்லை. சேரி மக்களின் பெயர்களை இளக்காரமாகக் கூப்பிடும் வழக்கமே இருந்திருக்கிறது.

தலித்துகளை தங்கள் அடிமைகளாக வைத்திருந்த வாழ்வியலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விடுதலை அடைகின்றனர் தலித்துகள். அது தொடிச்சியின் வாழ்விலிருந்தே தொடங்குகிறது. தொடிச்சியின் தொடர் எதிர்வினைகளால் அவளுடைய மாமனாருக்கும் கணவனுக்கும் ஊர்க்காரர்களால் கொடுக்கப்பட்ட மாடுகளும் வண்டியும் பறித்துக்கொள்ள புது தொழிலைச் செய்ய ஆரம்பிக்கின்றனர். செங்கல் சூளைகளில் வேலை செய்வது, பிறகு தாங்களே செங்கல் சூளையை குத்தகைக்கு எடுத்து கல்லை விற்பது, பிறகு நிலத்தை குத்தகைக்கு எடுப்பது பயிர் செய்வது என அவர்கள் தொடிச்சியின் வீரமான முடிவுகளால் நடக்கிறது

சடையன்குளத்து தலித்துகளின் மதமாற்றம், பொருளாதார வளர்ச்சி, கிறித்தவ பாதிரிமார்களின் வருகை, கல்விஉரிமை. வேலை வாய்ப்புகள் என அவர்கள் கொஞ்சமாக சாதியக் கட்டிலிருந்து வெளியேற வெளியேற வெறிகொள்கிறது சாதி ஆணவம். இதனால் தொடிச்சியின் கணவன் கொல்லப்படுகிறான். சாதி ஆதிக்கக்காரர்கள் திட்டமிட்டு தங்கள் இளைஞர்களை போலீசில் சேர்த்து சடையன்குளத்து தலித்துகளை நேரிடையாக எதிர்க்கமுடியாமல் அவர்களை சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அழிக்கிறார்கள்.

இந்த நாவல் அப்பட்டமான ஒரு தலித் நாவலாகப் பரிணமிக்கிறது. தலித் விடுதலைக் கூறுகளான பெண் முன்னின்று போரிடுவது, தொடிச்சி, தம்மக்கார சாம்பாத்தி, ஊருக்கு வரும் இசபெல்லா போன்ற கன்னியாஸ்திரிகள், ஆதிக்க சாதியில் இருக்கக் கூடிய காதலிகள், என எல்லாப் பெண்களும் ஒரு வகையில் தன் வாழ்வின் அடிமைத்தனத்தை அறுத்தெறியப் புறப்பட்டவர்கள்.

நாவலில் காட்டப்படும் தலித் இணையர்களில் முடிவெடுக்கக்கூடியவர்களாக பெண்கள் இருப்பது தலித் குடும்ப அமைப்பில் காக்கப்படும் குடும்ப ஜனநாயகத்தைக் காட்டுகிறது, நல்லையா-தொடிச்சி.குன்னிமரியான் – செம்பகம்,மூக்கன் – கருப்பாயி, முத்துவீரன் – கருப்பாயி, வைத்தான் செல்லையா – கன்னியம்மா ஆகியோர் இத்தகையவர்களே.

நிலத்தை அடைவது என்னும் குறிக்கோள் தலித்துகளுக்கான இடத்தைப் பெறுவதற்கானப் போராட்டம், நிலம் வாங்குவதற்கான முயற்சிகள் நிலத்தைப் பயன்படுத்திப் பொருளீட்டும் போக்கு ஆகியவற்றைச் சொல்லலாம். அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கு தேர்தலில் போட்டியிடுவது, அதற்காக எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் போரிடுவது, தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க எந்த நிலையிலும் தளராமல் இருக்கும் மனப்பான்மை, சடையன்குளத்திலேயே குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் அருந்ததியர் சமூகத்துடன் தொடிச்சி கொள்ளும் நட்பும் அவர்களுக்கு அவள் செய்யும் உதவியும் உட்சாதிப் பூசல்களைக் கடந்து தலித்துகள் ஒன்றாவதற்கான ஒரு புள்ளியாக மாறுகிறது.வைத்தான் செல்லையாவும் அவனுடைய மனைவி கன்னியம்மாவும் மரியசிலுவையாகவும் அமலோற்பவமாகவும் மதம் மாறியபின் அவர்கள் சமூகவாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் முக்கியபதிவுகளாக இருக்கின்றன. சாதி ஒழிப்பிற்கு மதம்மாற்றம் ஒரு முக்கிய ஆயுதம் என்னும் அரசியல் சூத்திரம் அது எழுதப்படுவதற்கு முன்பே தலித் வாழ்வியலாக இருந்தது என நாவல் முழுக்க தலித் விடுதலைக் கருத்தியலை எந்தவிதமான துருத்தலும் வேண்டுமென்றே செய்தல் என்னும் தன்மையும் இல்லாமல் பரப்பியிருப்பார் ஸ்ரீதரகணேசன்.

அவருடைய கதை சொல்லல் முறை நேரிடையாக கதைசொல்லல் முறையாக இருப்பதனால் வாசிப்பதற்கு எளிமையாகவும் அதே நேரத்தில் காத்திரமான நிகழ்ச்சிகளை அடுக்குவதால் அடுத்து என்ன நடக்கிறது என்று அறியும் ஆவல் நாவல் வாசிப்பில் கிடைக்கிறது. ஒவ்வொரு முறையும் தலித்துகள் அடுத்தக் கட்டத்திற்குச் செல்லும் போது அப்பாடா என்று ஆசுவாசப்படும் மனது அடுத்து வரும் கனமான கதைப் போக்கால் மீண்டும் வலி வந்த காயத்தைப் போல மாறிவிடுகிறது.

தலித் இலக்கியம் என்பது தலித்துகள் வாசிக்கும்போது இன்னும் போராட வேண்டும் என்னும் உத்வேகத்தையும் தலித் அல்லாதவர்கள் வாசிக்கும்போது அவர்களின் மனசாட்சியைக் கிளறும் வகையில் இருக்க வேண்டும் என்னும் சரண்குமார் லிம்பாலேவின் கருத்திற்கேற்ப சடையன்குளம் அமைந்திருக்கிறது.

சடையன்குளம் என்னும் ஓர் ஊர் இந்திய சாதியத்தன்மையின் ஓர் அலகாக அமைந்திருக்கிறது. தலித் இலக்கியத்தில் நாவல் வகைமையை மேலும் செழுமைப்படுத்தி அதனை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தி, இதன்மூலம் எழுதப்படாத இன்னும் எத்தனையோ சடையன்குளங்கள் வெளிவர உந்துதலைத் தந்திருக்கிறது சடையன்குளம்.

சடையன்குளம்( நாவல்)
ஆசிரியர் :  ஸ்ரீதர கணேசன்
வெளியீடு : கருப்புப் பிரதிகள்,சென்னை- 5
விலை : ரூ. 250/-

Monday, February 11, 2013

யாழன் ஆதி கவிதைகள்

1        
காற்றின் அசைவுகளைக் கடந்து செல்கிறது
ஊமத்தைப் பூவின் அழகு
உதிர்ந்த புளியம்பழங்களை நசுக்கி விளையாடும்
நடைவண்டிக் குழந்தையின் தன்மையில்
பிசுபிசுப்பித்த பாதங்களோடு நடக்கிறது ஆட்டுக்குட்டி
கொண்டையை அவிழ்த்து மீண்டும் முடித்து
களையெடுக்கும் கண்ணியம்மாவைப் போல்
தலைதிருப்பி சிலுத்துக் கொள்ளும் மரங்கொத்தி
உதிர்ந்த செந்நிற சருகொன்றை
தன் அலகால் கொத்தித் திரியும் செங்காகம்
மீந்த கறித்துணுக்குகளைக் கடித்து விழுங்கும்
கறுப்புநிற நாயொன்று
அடர்ந்த இருளாய் நிழலைக் கக்கிய
மேற்குதிசை வீடொன்றின்
ஓவியம் படர்ந்த தெருவில் மண் துகள்களை
கிளர்த்தி தன் இறகுகளை அலசிக் கொள்ளும்
இரண்டு தட்டான் குருவிகள்
தன் குட்டியின்மேல் உட்கார்ந்து ஓட்டிச் செல்லும்
சிறுவனை முறைத்துக் கொண்டு சகதியில் நிற்கும்
எருமை
வரைய வரைய முடியாத ஓவியம்
என் நிலம்.

2    
தாமதித்தலால் நீளும் நேரத்தை
இசைகொண்டு கடத்துகிறேன்
முணுமுணுத்தலில் விடுபட்ட
பாடலின் வார்த்தைகளைச் சேகரித்து
உரையாடல் ஒன்றை தயாரிக்கிறேன்
உன் வார்த்தைகளுக்கான இடைவெளிகளில்
மனக்காட்சியில் நான் பறித்த பூக்களை
அடுக்குகிறேன்
பாடாமல் விடுபட்ட இசைத்துணுக்குகள்
பற்களின் இடுக்குகளில் காத்திருக்கின்றன
என் இருக்கையில்
உனக்கான பாதி இடத்தை
நோக்கி ஒருவர் வர
எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு
நகர்கிறேன்.

3.        

சுமைகளற்ற ஒரு தூரப்பயணத்தைப் போன்று
இனிமையானதன்று
என் நகரில் இருப்பது
எப்போதும் கனறும் நெருப்பு இருந்துகொண்டேயிருக்கும்
அடிவயிற்றில்
வறண்ட ஆற்றின் கரையில் பறக்கும்
கொல்லப்பட்டக் கோழியின் இறக்கைகள்
ஆற்றைத்தூர்த்துக் கட்டப்பட்ட
முதலாளிகளுக்கானப் பாதை
தோல் கழிவுகள் வந்து சேரசேர
கடைசி கொருக்கையும் சாகடிக்கும்
வேறுவழியில்லாமல் என் ஆறு
நீரின்வலி சொல்லி மாளாது
கால்கழுவ ஒரு தண்ணீரையும்
சோறாக்க ஒரு தண்ணீரையும்
குளிக்க ஒரு தண்ணீரையும்
வேதியியல் ஆய்வகத்தன்மையில்
வைத்திருக்கிறது வீடு
மெல்ல நிறம் மாறும் எங்கள் தோட்டத்து மலர்கள்
மணமற்ற அவற்றில்
கசிகிறது தோல் வாசம்.

4.           
என்ன செய்ய சொல்கிறாள் அவள்
கூர்த்த ஆயுதத்தின் முனையில்
கடத்தப்பட்ட ஒற்றைச் சொல்லில்
அவள் தேடும் அர்த்தவெளிகளை
எங்கிருந்து இறக்க முடியும்
கனிதேடும் தாவரத்தின்
இனப்பெருக்க முறையின் கோளாற்றில்
அரூபங்களை அறுவடைச் செய்கின்றன
எங்கள் அரிவாட்கள்
அது இருக்கட்டும் என்று
குறைந்தபட்ச கூலிக்காகப் போராடபோன
அவளை
சிறையில் அடைக்க துக்கித்து அழும்
குழந்தைகளின் பசியினைப் போக்குதல் இன்று தேவை
எனினும்
எந்த செயலுமின்றி
சும்மா இருக்க லாகாது
மூடிய அக்கதவின்முன் கத்திவிட்டு வருகிறோம்
உயிரிருக்கும்வரை போராடுவோம் என.