Tuesday, November 30, 2010

யாழன் ஆதி: அ. முத்துகிருஷ்ணனின் பயணம் - ஒளியுடன் வழி

யாழன் ஆதி: அ. முத்துகிருஷ்ணனின் பயணம் - ஒளியுடன் வழி

அ. முத்துகிருஷ்ணனின் பயணம் - ஒளியுடன் வழி


சமீபத்தில் அ.முத்துகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு நூல் ஒன்று வந்தது. அருந்ததி ராயின் கட்டுரைகளை மொழிபெயர்த்து எழுதியது.அதன் தலைப்பு தோழர்களுடன் ஒரு பயணம். தூரங்களில் அல்லல்படும் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் அறிவாளர்கள் மத்தியில் முத்துகிருஷ்ணன் தீவிரமான ஆளுமை. தற்போது ஆசியாவிலிருந்து காசாவிற்குச் செல்லும் ஆசிய கண்டத்தின் அறிவாளர்கள் குழுவில் தமிழ் எழுத்தாளர் அ.மு. பங்கேற்கின்றார். டிச.2ந்தேதி டில்லியிலிருந்து அவர் பயணம் தொடர்கின்றது. தரை வழியாக அவர் பாகித்தான். ஈரான், துருக்கி, சிரியா, லெபனன், ஜோர்டன், எகிப்து என பல நாடுகளைக் கடந்து அவர்கள் காசாவை அடைகின்றனர்.

துன்பப்படும் காசா மக்களுக்காகவும் பாலத்தீனத்தின் நிலையை உலகுக்கு உணர்த்தவும் இந்தப் பயணம். இது முக்கியமானது. வழியெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் அம்மக்களுக்காக நிதித்திரட்டும் நிகழ்ச்சிகள் நிவாரணப் பொருட்களைச் சேகரித்தல் எனவும் அவர்கள் நிகழ்ச்சியை வடிவமைத்திருக்கின்றார்கள். மிகவும் போற்றுதலுகுரியது இது. இத்தகைய அறிவாளர்கள் ஒருமுறை இலங்கையை நோக்கியும் செல்லலாம். இந்தியா முழுமையும் உள்ள சேரிகளுக்கும் செல்லலாம் சாதிக் கொடுமையின் தன்மையை உலகுக்கு உணார்த்தும் இத்தகைய பயணத்தை இந்தியாவில் இருக்கின்ற அறிவாளர்கள் இந்தியாவிற்குள்ளாவது நடத்தினார்கள் என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதற்கான முன்னோடிப் பயணமாக இதை நாம் முன்வைக்கலாம். தோழர் முத்துக் கிருஷ்ணன் அதற்கான அனுபவச் சேகரிப்பில் இந்தப் பயணத்தை அவர் தொடர வேண்டும். அவருடைய இந்தக் கனவு, மாந்தநேயப் பணி தமிழ் எழுத்தாளர்களுக்கு கிடைத்த வெகுமானம்.தோழர்களுடன் ஒரு பயணத்தை மேர்கொண்ட முத்துகிருஷ்ணனை வாழ்த்துகிறோம்.

காசா மக்களுக்கு உதவ நினைப்பவர்கள் அ.மு. வைத்தொடர்புகொள்ள வேண்டும். அவருடைய வேண்டுகோளையும் இத்துடன் இணைத்துள்ளோம்பாலஸ்தீன மக்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக அனுபவித்து வரும் துயரவாழ்வு இன்று உலக மக்கள் நன்கு அறிந்த ஒரு விஷயமே. நம் அவசரமான வாழ்வில் அவர்களின் கதையை செவி மடுத்து கேட்க அவகாசம் இல்லாத அளவுக்கு உலகம் அதிவேகமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. தினந்தோறும் அங்கு பெரும் குண்டு வெடிப்புகளின் ஓசையுடன் தான் அவர்களின் காலை பொழுது விடிகிறது.

கடந்த அறுபது ஆண்டுகளில் தங்களின் சொந்த நிலத்திலேயே அகதிகளாக அலைகழிக்கப்படுவது மட்டுமின்றி மெல்ல மெல்ல தங்களின் நிலத்தையும் பறிகொடுத்து சிறு கீற்றான நிலப்பகுதிகளுக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். சிறு காலனிகளாக குடியேறி மெல்ல மெல்ல பாலஸ்தீன மக்களின் நிலத்தை அபகரித்து இஸ்ரேல் உலக வரைபடத்தில் தன் இருப்பை ஏற்படுத்தி பின்னர் நிலைப்படுத்திக் கொண்டது. 1950கள் முதல் 2010 வரையிலான உலக வரைபடங்களை சேகரித்து அதனை ஒப்பிட்டு பார்த்தால் இந்த உண்மை யாவருக்கும் விளங்கும்.

15 லட்சம் மக்கள் வாழும் காசா பகுதி இருப்பதிலேயே மிகவும் துயர மேகங்கள் சூழ்ந்த பகுதி. இந்த காசா மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பாலஸ்தீனத்தின் நிலையை உலகிற்கு எடுத்துரைக்கவும் ஒரு பயணத்தை மேற்கொள்வது என ஆசியாவில் உள்ள முற்போக்காளர்கள் சிலர் தீர்மானித்த அது இப்பொழுது செயல் வடிவம் பெற்றுள்ளது..

எகிப்தின் அல்-அரீஷ் துறைமுகத்திலிருந்து கப்பலில் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு காசாவை சென்றடைந்து பயணக் குழு 2011 புத்தாண்டை அந்த மக்களுடன் கொண்டாட இருக்கிறது.

பாலஸ்தீன நிவாரண நிதிக்காக மக்களிடம் நன்கொடைகளை திரட்டி வருகிறோம். இந்த நிதி துயருற்ற மக்களுக்கானது, மருந்துகள், கட்டுமான பொருட்கள் என அவர்களின் அன்றாடங்களை சீர்படுத்தும் பல பொருட்களை வாங்குவதற்கு இந்த நிதி செலவிடப்படும்.

நிதி அளிக்க விருப்பம் உள்ளவர்கள்A.MUTHUKRISHNAN +919443477353 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது பணத்தை A.MUTHUKRISHNAN State Bank of India SB A/C no 30322814376 வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தலாம். அல்லது A.MUTHUKRISHNAN பெயரில் காசோலை எடுத்து அனுப்பலாம்.துயருற்ற மக்கள் மீது நிஜமான அக்கறையும் மனித அவலங்கள் குறித்து மனசாட்சியும் விழிப்புணர்வும் உள்ள அனைவரும் தங்களால் ஆன நிதியை அளிக்க வேண்டுகிறேன்அ.முத்துகிருஷ்ணன்