Sunday, June 27, 2010

செம்மொழி மாநாடு - தொலைக்காட்சியில் பார்த்தவை


மாநாட்டிற்கு செல்ல வேண்டும் என்னும் உந்துதல் ஒருபக்கம் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது. ஊரில் பார்த்த நண்பர்கள் எல்லாம் என்ன இன்னும் போகவில்லையா என்றே கேட்டுக்கொண்டிருந்தனர். ஒரு நண்பன் இரவு ஒரு மணிக்கு தொலைபேசியில் கூப்பிட்டு மாநாட்டிற்குப் போவதாகவும் பேருந்து நிலையத்தில் இருப்பதாகவும் வருகிறாயா என்று கேட்டான். கோபம் வந்தது. ஆனாலும் அவனைப் போய் வா என்றனுப்பிவிட்டு காலையிலிருந்து தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.

தொடக்க விழாவினையும் நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். தொடக்க விழா நம்பிக்கைகளை விதைத்தது. தமிழ் இணைய மாநாடு மிகவும் முக்கியமானதாகப் பட்டது.தமிழ் எழுத்துருக்கள், புதிய தமிழ் விசைப்பலகை, தமிழில் இயக்கப்படும் கணிணி. என்றும் இன்னும் தொழில்நுட்பங்களைப் பற்றியும் பெரிதாகப் பேசப்போகிறார்கள் என்றதும் மகிழ்ச்சித் தொத்திக் கொண்டது.

இன்னுமொரு முக்கிய காரணம் நீச மொழி என்று அவாள்களால் சொல்லப்பட்ட தமிழை செம்மொழியாக்கி அதை உலகுக்கு உணர்த்துவதும் தேவபாசை என்று சொல்லப்பட்ட சமஸ்கிருதத்திற்கு எந்தவகையிலும் தமிழ் குறைந்தது அல்ல என்று நிரூபிப்பதற்கும் இம்மாநாடு மிகவும் தேவைப்பட்டது. அது நிறைவேறியும் இருக்கின்றது. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரீகம் என்பது தமிழர்களுக்கானது என்னும் ஆய்வும் அதுதரும் விளக்கமும் இந்திய நாடு முழுதும் தமிழினம் வாழ்ந்த நிலப்பரப்பு என்பதும் தமிழர்கள் அடிமையாக்கப்பட்டு தண்ணீருக்கு அல்லாடும் சூழல் அப்பட்டமாக பொதுநிலைத்தமிழருக்குப் புரியும் நேரமாக இந்த மாநாடு இருக்கும் என்பதும் எண்ணம். கன்னட ரணதிவே என்னும் அமைப்பு மாநாடு நடக்கும் போதே ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டம் தமிழர்கள் இந்தியரில் அடக்கம் இல்லை என்பதனை வெளிப்படையாக உணர்த்தியது.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழினத்தின் பூர்வ வரலாறு என்பது இலங்கையை ஒட்டுமொத்தமாக தமிழ் மன்னன் ராவணன் ஆண்டான் என்னும் ராமாயணத்தினை, அதனை நம்பவில்லை என்றாலும் முன்வைத்து திருமாவளவன் பேசிய பேச்சு ஆட்சியாளர்களுக்கும் பொதுநிலையில் இருக்கும் தமிழர்களுக்கும் புரியவைக்கும் தன்மையுடையதாக இருந்தது. எல்லாரும் பேராசிரியர் கா.சிவத்தம்பியை இலங்கை தமிழ் அறிஞர் என்று விளித்துக் கூறியபோது தமிழக முதல்வர் மட்டும் ஈழத்தமிழறிஞர் என்று அழைத்தார். இது மனோவியல் ரீதியாக ஆய வேண்டிய ஓர் சொல்லாடல். அது இருக்கட்டும்

இன்னொரு அரங்கில் உரையாற்றிய அக்கா அரங்க மல்லிகா அவர்களின் உரை மிகவும் கருதத்தக்கது. கொடுக்கப்பட்ட நேரத்தையெல்லாம் மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு தலித்தியத்தையும் பெண்ணியத்தையும் சரியான நேரத்தில் உள்நுழைத்த பெருமை அவர்களைச் சாரும் அதற்காக அக்கா அவர்களைப் பாராட்ட வேண்டும்.

மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட அரங்கங்களை செய்தியாகக்கூட காட்டவில்லை. அதெல்லாம் பொதுமக்களுக்கு தேவையில்லை என்று தமிழ் சினிமா இயக்குநரைப் போல விட்டு விட்டார்களா தெரிய வில்லை. அவற்றைக் காட்டியிருந்தால் மாநாட்டின் பயனும் பொருளும் எப்படி இருந்தது என்று சொல்லியிருக்க முடியும்

ஆனால் காட்டப்பட்டதோ வேறாக இருந்தது. முதல் நாள் நடந்த கவியரங்கம் படு கேவலம். செம்மொழி மாநாட்டின் கவியரங்கம் லோக்கல் கவியரங்கத்தினை விட மிக மோசமாக இருந்தது என்றே சொல்லிவிடலாம். கவியரங்கம் என்னும் அமைப்பே செத்துபோன ஒன்றாகத்தான் இப்போது இருக்கின்றது. அதை மேலும் சாகடிக்க நம்முடைய கவிஞர்கள் எடுத்த முயற்சி வீண்போகவில்லை. கருணாநிதி என்னும் கவிஞர்(?) பாடிய பிராந்தி பாட்டில் பிரதிபா பாட்டில் என்னும் ஒப்புமைகள் கருத்துரீதியாகவும் அவருக்கு ஏதும் தெரியவில்லை என்பதை நமக்குப் புரிந்து கொள்ள உதவியது. நுணலும் தன் வாயால் கெடும். அத்தகைய நுணலுக்கு எதற்கு இப்படி ஒரு வாய்ப்பு. விவேகாவின் கவிதை கவிதையா அது. இவர்கள் எல்லாம் எதையும் வாசிக்கவும் மாட்டார்கள் வெட்கப்படவும் மாட்டார்கள் போல.சினிமாவில் பாட்டெழுதுபவர்கள் எல்லாம் கவிஞர்களாக நினைப்பது தவறு(யுகபாரதி போன்றோர்களைத் தவிர்க்கலாம்)
முத்துக்குமார் நம்பிக்கையோடு பார்க்கப்பட்டார். ஆனால் அவரும் வேகவேகமாக எதையோ சொல்லிவிட்டார்.தமிழச்சியின் கவிதைதான் என்னளவில் வரலாற்றின் பின்புலத்தோடு இருந்தது என்பேன்.அதனால் வாலியின் தலைமையிலான கவியரங்கத்தை நான் பார்க்கவில்லை.

மாலையில் நடந்த கருத்தரங்கம் ஒரு கூத்து. லியாகத் அலிகான் என்னும் முன்னாள் அதிமுககாரர் கருத்தரங்கில் பேசுகின்றேன் என்று முதல்வரை புகழ ஆரம்பிக்க ஒலிவாங்கியை வாங்கி கருணாநிதியே அதை நிறுத்தும்படி ஆகிவிட்டது.அதற்குப்பிறகு வந்தவர்களும் அப்படித்தான் பேசினார்கள். திருமாவளவன் மொழிக்குறித்த ஆய்வினை அம்பேத்கர் கூற்றை வைத்து பேசினார்.அதுதான் கருத்தரங்கின் முக்கியமான பேச்சாக இருந்தது. து.ராஜா அவர்களின் பேச்சும் கருத்தும் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளாக இருந்தது. சீதாராம் யெச்சூரியின் பேச்சு இந்திய தேசியத்தை வலியுறுத்துவதாகவே இருந்தது.மொழி என்பது சிந்தனையைப் பிரதிபலிக்கும் கருவி. என்கிறார். தமிழ் அப்படிப்பட்டதா என்பது கேள்விக்குரியது.

மறுநாள் பட்டிமன்றம் பாரதிராஜா பங்கேற்பாளர். அய்யோ எந்தக்கருத்தையும் கலைஞரை மட்டும் வைத்துக்கொண்டு சொல்லிவிடலாம் என்று வந்திருந்தார் பாரதிராஜா. கையில் திரைக்கதையே இல்லாமல் படப்பிடிப்பிற்கு போவது என்பது சாதாரணமாக இருக்கலாம்.ஆனால் பேசுவது அப்படியல்லவே. எஸ்.வி. சேகர் இன்னும் மோசம். இதெல்லாம் கவனிக்கப்பட்டிருக்கும் என்றால் நன்றாக இருந்திருக்கும்.

யாழன் ஆதி

Tuesday, June 22, 2010

நெட்டைப் புல்லென காலை
பசுமையாய் மலர்ந்திருக்கிறதுகுருவிகள்
இன்னும் கூடுகளிலிருந்து வரவில்லை
சொற்கள் காலை பூமியின் மிருதுத்தன்மையை
அடைந்திருந்தன
செந்நாவுகளில் குறைந்தது ஒரு வட்டம்
இனிப்பாவது இருந்திருக்கின்றது
பகல் வரும் நேரம்
தயாராகின்றன தாவரங்கள்
அவ்வப்போது அவசரப்பட்டு அழுகின்றது
குழந்தை

உண்மை

காற்று மாசு படிந்துவிட்டது
நீர் அமிலமாகிவிட்டது
மண் பாழாகிவிட்டது
இந்தியா வல்லரசாகிவிட்டது
மனிதர்கள் செத்துவிட்டார்கள்

ந.க. விஜயராஜன்

Saturday, June 5, 2010

சொல்ல முடியாதது

துயிலும் ஓர் இரவின் கூட்டில் என்னைப் பொருத்த
அதன் அடுக்குகளில் பயணமானேன்
தெளிவின் ஒளியின்மை என்னை நடத்துகின்றது
மரங்களின் பறவைகள் காய்களாகி இருந்தன
காற்றும் வீசுதலின்றி உறக்கம் பூசுகின்றது
பூக்கள் பற்றி எதையும் அறிய வாய்ப்பில்லை
பாதைகள் இரவு விளக்கினைத் தொலைத்த நேரமது
கற்கள் கண்விழித்துக் கொண்டிருந்தன
எதையும் நோக்கும் நேரமின்மையின் அவசத்தில்
நிலா நில்லாமல் இருந்தது
பகலுறங்கும் புதருக்கடியில் பாம்புகள் உறவாடின
நடத்தல் சாத்தியம்ற்றுப் பின் கனவின் பயணம்
சொல்லவியலாத வார்த்தைகளாலானது அது.