Wednesday, June 20, 2012

யாழன் ஆதி

யாழன் ஆதி

தேடுகை
தேடுகை


எப்போதும் அலையும் காற்றின் இயக்கத்தில்
சுழன்றுகொண்டிருக்கிறது அகன்ற சருகொன்று
சிவந்த கூரிய அலகுடையப் பறவை
பிய்த்துச் சென்ற செம்மரக்கட்டையின் ஓரிழையை
அது தனது கூட்டுக்குள் பதுக்கி வைக்க
அதன் பிம்பம் எதிரொலிக்கும் மாலைநேர வானில்
மேகங்கள் முப்பரிமாணக் கூடல் காட்ட
மோகினி ஒருத்தி ஆடைகளற்ற பின்புறத்தைக் காட்டி
நடக்கிறாள்
விலகாத தவிப்புகளடங்கியப் பெட்டியை வைத்துக்கொண்டு
சுமையின் வலிதாளாமல் கால்கள் இடர
கண்களிலிருந்து வழியும் காமத்தைத் துடைத்துக்கொண்டே
நடக்கிறான்
யாருமற்றத் தெருவில்
புணர்ந்துத் தீர்க்கப்பட்டவர்கள் நிறைந்த அந்தத் தெருவின்
புராதனத்தில் வீழ்ந்து கிடந்த வாளொன்றை எடுத்து
அவன் பெட்டியை உடைக்க
அதிலிருந்து கிளம்பிய புகையில்
இருந்தன அவன் முன்னோர்களின் கண்கள்.