நிலையில்லா எத்தனிப்பின் கண்கள் திரும்பும்
உன் திசையில் வரித்தெழும் பறவையின்
வாழ்வெங்கும்
சிவந்து கிடக்கிறது பூக்கள்
நிலையில்லா எத்தனிப்பின் கண்கள் திரும்பும்
உன் திசையில் வரித்தெழும் பறவையின்
வாழ்வெங்கும்
சிவந்து கிடக்கிறது பூக்கள்
மது
ஒழிப்பின் பேரரசியல்
கடந்த
இரண்டு மாதங்களாக தமிழக அரசியல் தகித்துக்கொண்டிருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு மாநாடு குறித்த அறிக்கை வெளியிட்டதிலிருந்து
இந்த பரபரப்பு தொடர்கிறது. ஆகஸ்டு 17 ஆம் திகதி தன்னுடைய பிறந்த நாளை முன்வைத்து மது
ஒழிப்பில் தனது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்தார் கட்சியின் தலைவர்
திருமாவளவன். ஒருமாதம் மாநாட்டுக்கான களப்பணி,
செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளில் மாநாடு. இதுதான் முதல் அறிவிப்பு.
ஆனால்
அக்டோபர் 2 காந்தியின் பிறந்தநாள். இந்திய அளவில் மதுவிலக்கை வலியுறுத்தியவர் அவர். அம்பேத்கரிய அரசியல் இயக்கம் காந்தியின் பிறந்த நாளை மது ஒழிப்புக்கு தேர்ந்தெடுத்தது தனது
விரிந்த பார்வையை மக்களுக்கு உணர்த்துவதற்காக. மக்களுக்குத் தீங்கு தரும் எதுவும் இங்கு
வேண்டாம் என்பதுதான் நிலைப்பாடு. ஆக தொண்டர்களுக்கு இன்னொரு மாதம் கூடுதலாகக் கிடைத்ததில்
அளவற்ற மகிழ்ச்சி.
களம்
தேர்தல் களம் போல் ஆனது. ஒவ்வொரு தொகுதிக்கும் மேலிட பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டார்கள்.
அவர்கள் அங்கங்கே போய் முகாமிட்டு கிளை அமைப்புகளைத் திரட்டி மாநாட்டிற்காக மக்களைத்
திரட்டும் மிகத்தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலின் போது வேலை செய்த
மற்ற அரசியல் கட்சிகள் ஓய்விலிருக்க விடுதலைச் சிறுத்தைகள் இன்னொரு தேர்தல் போலவே மது
ஒழிப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். கட்சியின் தலைமை மண்டலவாரியாக மக்களைச் சந்திக்கிறது.
மது மற்றும் போதைப் பொருளின் தீமையை தன்னுடைய கட்சித் தொண்டர்களுக்கு எடுத்துக்காட்டி
விரிவான உரையை தலைவர் அவர்கள் நிகழ்த்துகிறார்கள். தலைவரைக் கண்ட தொண்டர்கள் இன்னும் தீவிரமாகக் களத்தில்
பணியாற்றுகிறார்கள். வயல் வெளிகள்,நூறு நாட்கள் வேலை நடக்குமிடங்கள், மகளிர் அதிகமாகப்
பணியாற்றும் தொழிற்சாலைகள், மாலைகளில் கடைத்தெருக்கள், வீடுகள் என விசிக தொண்டர்கள்
மாநாட்டுப் பணிகளை அமர்க்களப்படுத்துகின்றனர்.
அமைப்பாய்த்
திரள்வோம் என்னும் நூலில் தலைமையின் முக்கியத்துவத்துக் கூறும் போது தலைமை தத்துவமும் கோட்பாடும் நிறைந்ததாக
இருந்தால்தான் இயக்கத்தை மிகச்சரியாக வழிநடத்த முடியும் என எழுச்சித்தலைவர் அவர்கள் எழுதியிருபார்கள். அப்படித்தான் இந்த மாநாட்டின்
தேவையும் உருவாக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி
விசச்சாராயச் சாவுகள் அதிகரித்த வேளையில் அம்மக்களைச் சந்திக்கச் சென்ற தலைவர்கள் வெறுமனே போய் ஆறுதல் சொல்லித் திரும்பினர். எழுச்சித் தலைவர்
அவர்கள் மட்டுந்தான் அந்த மக்களின் கண்ணீரைக் கண்டார். அது வெறும் கண்ணீர்த்துளி அல்ல.
அவை உயிரின் தேவையை அறிந்த கண்ணின் வார்த்தைகள். அவர்களுக்கு எங்ஙனம், ஆறுதல் சொல்லலாகும்
என எண்ணிய அவர் மதுவையும் போதைப் பொருட்களையும் ஒழிக்க எடுத்த முடிவுதான்
அரசியலில் பல கருத்தாடல்களை உருவாக்கியது.
அரசியல்
கணக்குகளைத் தாண்டி, இந்த மாநாட்டின் நோக்கம் நிறைவேறுகிறதா என்பது தான் நாம் மிகவும்
முக்கியமாகக் கருத வேண்டிய ஒன்று. எந்த நோக்கத்துக்காக இது நடத்தபடுகிறதோ அது கொஞ்சம் திசை மாற்றப்பட்டிருக்கிறது என்றாலும்
இம்மாநாடு ஒரு சிந்தனை அதிர்ச்சியை ஏற்படுத்தி
இருக்கிறது. இந்த சிந்தனை அதிர்ச்சி அனைத்துப் பொதுமக்களுக்கும் உண்டாகி இருக்கிறது.
அவர்கள் இது குறித்து பொது வெளிகளில் உரையாடுகின்றனர். மதுவை ஒழிக்க முடியாது ஆனால்
…. என்று கூறும் தன்மை வந்திருக்கிறது.
அது
மட்டுமல்ல தற்காலத்தில் மதுவின் தீமையோடு மிகவும் மோசமானது போதைப் பொருட்கள். இது மிகவும்
தீமையானது என்பது தெரியாமலே அதன் போதையில் இளைய சமூகம் ஆழ்ந்திருப்பது வேதனையிலும்
வேதனை. சமூக அக்கறைக் கொண்டோர் இதை கட்சி ஜாதி மதம் என்னும் எல்லா எல்லைகளையும் தாண்டி
யோசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாளைய தலைமுறை போதை தலைமுறையாக உருவாவதை நாம்
தடுக்க வேண்டும். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரையும் வீழ்த்தும் போதைப்பொருட்களை
நாம் ஒழித்தாக வேண்டும். மதுவினால் ஏற்படும் தீமையை விட போதைப் பொருட்களினால் ஏற்படும்
தீமைகள் மிக மோசமானவைகளாக இருக்கின்றன. மூளையை
மழுங்கச் செய்து என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை அறியாமல் நாம் எங்கே இருக்கிறோம் என்/று தெரியாமல் ஒட்டு மொத்தமாக சிந்தனைகளை அழித்து பெரும் ஆபத்தை
விளைவிக்கும் போதைப் பொருட்கள் நம் மனித வளத்தைக் கெடுக்கின்றன. அதற்கெதிரான விழிப்புணர்வையும்
இம்மாநாடு ஏற்படுத்தி இருக்கிறது.
ஓர்
அமைதியான மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டரசியலில் தலித் பெண்கள் பெரும்பான்மையான
தொண்டர்களாக ஒரு கருத்தியலின் அடிப்படையில் அணியமாகவில்லை. சில முன்நிகழ்வுகள் இருக்கின்றன.
அதுவும் அவை எல்லாம் அறிவுஜீவிகளின் கூடுகைகளாக மட்டுமே நடந்திருக்கின்றன. ஆனால் பெரும்பான்மையான
பெண்கள் இம்மாநாட்டிற்காகத் திரண்டிருக்கிறார்கள். அவர்களின் திரட்சி நாளை தேர்தல்
களத்தில் மாற்றங்களைக் கொண்டுவரலாம். விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் பலம் உயர்ந்திருக்கிறது என்பது அப்போது தெரிய வரும். உள்ளாட்சி அமைப்புகளில்
வருங்காலங்களில் அவர்கள் அதிகாரத்திற்கு வருவார்கள். பெண்களை அரசியல் படுத்துவது இதன்மூலம்
நிறைவேறி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி,
உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் மாநாடு மது
மற்றும் போதை ஒழிப்புக் கருத்தியலில் மட்டுமல்ல அரசியல் அரங்கிலும் வெற்றி பெற்றிருக்கிறது
என்பது தான் உண்மை.
இன்றைய சமூகத்தின் தீராத நோயாக மது மாறியிருக்கிறது.
மது என்னும் திரவம் மட்டுமல்ல இங்கே பேராபத்து அதைவிட ஆயிரம் மடங்கு தீமையைப் பயக்கக்கூடியது
போதைப்பொருட்கள். மது எதிர்க்கப்பட வேண்டும் என்றால் போதைப்பொருட்கள் ஆயிரம் மடங்கு
வெகுதீவிரத்துடன் எதிர்க்கப்பட வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானது.
மதுவின் தீமைகள் கொடுமையானது. நான் ஒரு தாயைச்
சந்தித்தேன். இளம் கணவன் மனைவி அவர்கள். ஒரு
பெண். ஐந்தாம் வகுப்புப் படிக்கிறாள். பெண்குழந்தை அந்த வீட்டிலேயே இருக்க முடியவில்லை
தன் பாட்டி வீட்டிற்குச் செல்கிறேன் என அடம்பிடிக்கிறது. ஏனெனில் அவளின் அப்பா நகரத்தில்
வேலை பார்க்கிறார். சம்பாதிப்பதில் பாதியை குடிக்குச் செலவழித்து விட்டு மீதியைத்தான்
குறைந்த அளவே வீட்டிற்குச் செலவுக்குத் தருகிறார். அதனால் அவருக்கும் அவர் மனைவிக்கும்
வாக்குவாதம். சண்டை சச்சரவு. அந்தப் பெண்குழந்தைக்கு இது பிடிக்கவில்லை. சக மாணவர்கள்
அக்கம்பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் பள்ளிக்கு வந்து சொன்னால் என்ன ஆவது என்னும்
அச்சம் அந்தக் குழந்தையைச் சூழ்ந்துக் கொள்ள் அக்குழந்தை வீட்டிலும் இயல்பாக இல்லாமல்
பள்ளியிலும் இயல்பாக இல்லாமல் மிகவும் நெருக்கடியான ஒரு மனநிலையில் உழல்கிறாள். இப்படி
எத்தனை தனி ஆய்வுகளையும் நம்மால் கூற மூடியும்.
ஆகவே தற்காலத்தின் தீமையாக இருக்கும் மது எதிர்காலத்தின்
அழிவாய் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை மிகவும் நாம் வேதனையோடுதான் பார்க்கவேண்டியிருக்கிறது.
புத்தரின் காலத்தில் மதுக்குடியாமை ஓர் உறுதியாக மேற்கொள்ளப்பட்டது, இல்லறத்தாரானாலும்
துறவிகளானாலும் அந்த உறுதி மொழி பொதுவானது.
சுராமேரய மஜ்ஜா பமாதட்டான
வேறமணி சிக்காபதம் சமாதியாமி
என்பது புத்தரின் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி.
போதைப் பொருட்களை உண்ண மாட்டேன் என்று உறுதி
ஏற்கிறேன் என்று பொருள் அதற்கு.
புரட்சியாளர் அம்பேத்கர் தன் வாழ்க்கையின் மிக
முக்கியமானக் களத்தில் மது எதிர்ப்பைப் பேசியுள்ளார்கள். மகத் குளப்போராட்டம். புரட்சியாளர்
அம்பேத்கர் வரலாற்றில் மிக முக்கியமானது. 1927 டிசம்பரில் நடைபெற்ற அப்போராட்டம் 24, 25 ஆகிய தேதிகளில்
பல்வேறு தடைகளுக்கு இடையே அம்மாநாடு நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் புரட்சியாளர்
அம்பேத்கர் அவர்கள் மாநாட்டில் உரையாற்ற அனுமதிக்க 4000 பேர் கொண்ட மாநாட்டில் உரையாற்றினார்.
டிசம்பர் 27 அன்று மாலையும் மாநாடு தொடங்கியது.
இரவு 10 மணிக்கு மாநாடு முடிந்தது. பிறகு
3000 பெண்கள் கூடிய அந்தக் கூட்டத்தில் புரட்சியாளர்
அம்பேத்கர் உரையாற்றினார். மிகச்சாதாரணமாக அவர் உரையாற்றி இருக்கிறார். ஆனால் அது மிகவும்
முக்கியமானது.
“தீண்டப்படாதவராக உங்களை எப்போதும் கருதாதீர்கள்.
தூய்மையாக உடுத்துங்கள், அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள், சுய உதவி உணர்ச்சியைப் பெருக்கிக்
கொள்வதிலும் நாட்டம் செலுத்துங்கள்” என்று கூறிவிட்டு மீண்டும்
தன்னுடைய குரலைத் தாழ்த்தி ரகசியம் பேசுவதைப் போல பேசியிருக்கிறார்.
‘உங்கள் கணவரோ மகன்களோ குடிகாரர்களாக இருப்பின்
அவர்களுக்கு உணவு தராதீர்கள்”
இது புரட்சியாளர் அம்பேத்கர் தலித் பெண்களுக்கு
தந்த அறிவுரை.
இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர்
மாநாடு மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடாக நடக்க இருக்கிறது. மிகச்சிறந்த திட்டமிடலுடனும்
பெண்களை அணியமாக்கி அதன்மூலம் ஒரு மாற்றத்தை உருவாக்கவும் அந்தக் கட்சியும் அதன் தலைவரும்
மிகத்தீவிரமாக களப்பணியாற்றுகின்றனர்.
மதுவுக்கும் போதைப் பொருள்களுக்கும் எதிராக அது
ஒரு பொதுமனநிலையை உருவாக்கினால் அதுவே மாபெரும் வெற்றி.
பல்வேறு பெண்கள் அமைப்புகள், இம்மாநாட்டில் பங்கு
பெற வேண்டும். இம்மாநாட்டை அரசியலாய்ப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பின் அரசியல்
பண்டைய இந்தியாவில் போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்ட காலம் மிகவும் பழமையானது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மது இல்லை. ஆனால் வரலாற்றில் வேத காலத்தில் மது உருவாகியிருந்தது என்பதற்கு சோம பானம் சுரா பானங்கள் சாட்சியங்களாய் இருக்கின்றன. வேத காலத்தில் மது எதிர்ப்பு இருக்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகு மது எதிர்ப்பு உருவாகியிருக்கிறது. அது புத்தரின் காலம்.
எப்படி வேத மதத்தின் அஸ்வமேதயாகம் ஒழிக்கப்படவேண்டும் என்று புத்தர் விலங்குகளைப் பாதுகாக்க பணியாற்றினாரோ அதைப் போலத்தன் விலங்குகள்போல் மக்களை ஆக்கும் மதுவினையும் ஒழிக்க அவர் போதித்தார். அவர் போதித்த ஐந்து ஒழுக்க நெறிகளில் மிகவும் முக்கியமான ஒன்று
“மதியினை மயக்கிடும் மதுவினை குடிக்க மாட்டேன் என உறுதி ஏற்கிறென்” என்பது. இது பஞ்சசீலத்தில் இருக்கிறது. சீலம் என்றால் ஒழுக்கம் என்று பொருள். எனவே இதை ஒரு போதனையாக இல்லாமல் தினந்தோறும் நாம் பயன்படுத்தும் சொற்றொடர்களாக இருக்க வேண்டும் என்று புத்தர் கருதினார். அதனால்தான் இதை எந்த நிகழ்விலும் சொல்லக்கூடிய உறுதிமொழியாக வைத்தார்.
இதைச் சொல்லுகிற ஒருவர் அவர் மதுக்குடிப்பவராக இருப்பின் அவர் மனச்சாட்சியை அது உலுக்கும். இந்த உறுதிமொழியை நாம் அனைவருக்கும் தெரிகிறமாதிரி உரத்துக் கூறுகிறோம் ஆனால் மது அருந்துகிறோமே என அவர்களுக்கு மனத்தில் தோன்றும். இந்த உளநிலையை உருவாக்கினால் போதும் அவர் மதுவருந்தும் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறுவார். மது அருந்தாதவர்கள் இந்த உறுதிமொழியை தினந்தோறும் கூறுவார்களேயானால் அவர்களின் மனசாட்சியும் மதுவருந்தும் வாய்ப்பு நேருகையில் மாறலாம். மதுவினை அருந்தாமல் அவர்கள் விலகலாம்.
ஆக, ஒரு சமூகத்தைத் தீமையிலிருந்து விடுவிப்பது என்பது தான் புத்தரின் மிகப்பெரிய புரட்சி. அதைத்தான் அவர் துன்பம் என்று கூறினார். துன்பமே மனித வாழ்வின் இருப்பாக இருந்துவிடக்கூடாது என்று அவர் கருதினார். மகிழ்ச்சி நிறைந்த சமூகம் அமைப்பக்கப்பட வேண்டும் என்பது அவரின் போதனை. அப்படியானல் துன்பங்களிலிருந்து விடுபடுவது, அதற்கான வழிகள் இவைதான் என்று அவரால் மிகத்தீவிரமாக இயங்க முடிந்தது. அது இந்தியா மட்டுமல்ல உலகமெல்லாம் பரவியது. இன்றும் பரவுகிறது.
துன்பங்களுக்கானக் காரணங்களைக் கண்டறிவது அவற்றை நீக்குவது என்பது புத்தரின் வழி. இதுதான் உலகமெங்கும் இருக்கிற அறிவியல் பூர்வமான வழி. துன்பங்களை போன ஜென்மங்களோடு தொடர்பு படுத்தலாகாது.
இன்றையச் சமூக துன்பமாக மது இருக்கிறது. போதைப் பொருள்கள் இருக்கின்றன. பள்ளி மாணவர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை மதுவையும் போதைப் பொருள்களையும் பயன்படுத்துகின்றனர். படித்த இளைஞர்கள், படிப்பை நிறுத்தி அல்லது முடித்து வேலைக்குச் செல்லும் பெரும்பான்மையான இளைஞர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் என்பது நமக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரிந்த உண்மை.
இதை மாற்றுவது இப்போது அதிமுக்கியத் தேவை. மதுவை ஒழிக்கமுடியாது என்று ஒரு வாதம் இருக்கிறது. அது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக ஒரு புறம் இருக்கிறது. அதற்கானப் புறக்காரணிகளும் அகக்காரணிகளும் மிகவும் பொருந்தித்தான் போகிறது. ஆனால் அதனால் விளையும் தீமைகள் இன்று பெருகிவிட்டன.
மாணவர்கள் சீரழிகிறார்கள். இளம்வயதிலேயே இளைஞர்கள் இறந்து விடுகிறார்கள். என்னுடைய ஊரிலேயே இப்படி எத்தனையோ இளைஞர்களின் மரணங்களை என்னால் கூற முடியும். அவர்களின் மனைவிகள் எல்லாம் இன்று இளம் கைம்பெண்களாக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே இதற்கான முன்னெடுப்பு அதிதீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது மிகவும் தேவையான ஒன்று. தமிழகத்தின் பேசுபொருளாக மது மற்றும் போதைப்பொருள்கள் ஒழிப்பு இன்று மாறியிருக்கிறது. பொதுநிலையில் அக்கறைக் கொண்டவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். மருத்துவர் கு, சிவராமன் போன்றோரின் அக்கறை மிக்க பேச்சுகளுக்கு இன்று ஒரு நியாயம் கிடைத்திருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள். மதுவுக்கும் போதைப் பொருள்களுக்கும் எதிராக ஒரு விழிப்புணர்வு பெருகட்டுமே. இது இந்தியா முழுமைக்கும் வேண்டும் என்று நாம் கேட்கிறோம், மதுவினால் மனித சக்தி வீணாகிறது என்கிறோம். தமிழ்நாட்டிலிருந்துதான் சமூகநீதி பரவியது. அதைப் போல மது எதிர்ப்பும் பரவட்டுமே.
மத அரசியல் 1
இன்றைய அரசியல் வெளியில் பா.ஜ.கவின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளும் அச்சங்களும் மிகவும் முக்கியமானவை. தமிழ்நாட்டின் எந்தவிதமான பண்பாட்டுத்தளத்திலும் உடனிருக்க முடியாத அல்லது தன்னியல்புக்கு மீறியவற்றைக் கொண்டுதான் பா.ஜ.க தமிழ்நாட்டில் தன்னைக் கட்டமைக்கிறது.
ஒட்டுமொத்த தமிழர்களில் இந்துக்களைத் தனியாகப் பிரிக்கும் எந்தவிதமானத் தந்திரங்களும் இங்கு பலிக்கவில்லை என்பது அவர்களுக்கு மிக ஆச்சர்யத்தைத் தந்துகொண்டிருக்கிறது. இந்து மதத்தின் புறவய அடையாளங்களைக் கொண்டும் சில சாதுர்யமான முழக்கங்களைக் கொண்டும் ஓர் இயக்கத்தை இங்கே உருவாக்கிட முடியாது. அதுதான் பா.ஜ.கவின் இன்றைய நிலை. அதன் மாநிலத்தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் பாதயாத்திரை எதற்காக என்பதான எண்ணங்கள் நமக்குள் இருந்தாலும் அந்த யாத்திரையின் வடிவம் என்பது இந்துக்களின் திருவிழாவைப் போலத்தான் காட்சி அளிக்கிறது. கரகம் ஆடுவது , தேர் இழுப்பது என்பன போன்ற காட்சிகள் ஏராளம். காவித்துண்டும் வேட்டியும் அணிந்த மனிதர்கள் நடமாடுகிறார்கள். அவர்கள் தொண்டர்களா அல்லது பக்தர்களா என்பது பெருத்த சந்தேகம். பக்தியோடு அரசியல் செய்வது தமிழ்நாட்டில் ஆகாது என்னும் அடிப்படையை யாரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.
இதை ஆன்மீக மண் என்கிறார்கள். அப்படியல்ல சகல தத்துவார்த்தங்களையும் இங்கே நாங்கள் தவழ விடுகிறோம். அவற்றில் அனைவருக்குமான நல்லவைகளை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். பௌத்தமும் சமணமும் இங்கே கோலோச்சி இருக்கிறது. ஆசிவகம் இங்கே இருந்திருக்கிறது.சைவ, வைணவ கோட்பாடுகள் இங்கு சொல்லப்பட்டிருக்கின்றன. கூடவே அவற்றிலிருக்கும் உண்மைகளை உணரும் உளவியலும் இந்த மக்களுக்கு இருக்கிறது.
பத்துத்தலை ராவணனை ஒத்த தலை ராமன் வென்றான் என்னும் கதையாடலை இங்கே பகடிதான் செய்தார்களே ஒழிய அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்படி அவர்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் வகையிலும் ராமாயணம் இங்குச் சொல்லப்படவில்லை. கம்பன் அவனுடைய கவிதைக்காக வாசிக்கப்பட்டான். அதில் இருக்கும் கவிதையின் மேன்மை கம்பனை நுணுகி நுணுகி வாசிக்க வைத்ததே அல்லாமல் வேறெந்த கடவுள் கலையும் அல்ல.
அப்படி கடவுளைக் கட்டமைக்க நினைத்த பக்தி இலக்கியங்கள்கூட நேரடியாக கடவுளைக் கட்டமைக்க விழையவில்லை. ஆனால் நீதிகளை அவை கூறின. நீதிகள் எடுத்துக்கொள்ளப்பட்டனவே ஒழிய கடவுள்கள் அல்லர்.
வேறுபடும் சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்
நின் திருவிளையாடல் அல்லால் வேறொன்றும்
காண்கிலேன் பராபரமே
என்று தாயுமானவர் பாடும் போது எல்லா சமயங்களும் ஒன்றுதான் என்னும் எண்ணம்தான் நீதியாய் ஆனது. அதைத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
என ஆண்டாள் பாடிய போது அவளின் பக்தியைவிட அவளின் மேம்பட்ட காதல்தான் இங்கே உள்வாங்கப்பட்டது. இப்படி நிறைய சொல்லலாம். ஒருவேளை கடவுள் கட்டமைக்கப்படுகிற அந்த குறித்த நேரத்தில் இங்கே தோன்றிய திராவிட இயக்கங்கள், தலித் இயக்கங்கள் கடவுள் குறித்த கருத்தைப் பின்னுக்குத் தள்ளி அறிவை முன்னுக்கு வைத்தனர். கடவுளா அறிவா என்னும் கேள்வியில் தமிழர்கள் அறிவின்பக்கம் தான் நின்றார்கள் . அதனால்தான் இங்கே கடவுள்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கொண்டாட்டத்திற்குரியவர்களாக இருக்கிறார்கள். மீதி நேரங்களில் மக்கள் தங்கள் அறிவுடன் தான் வாழ்கிறார்கள். வினையாற்றுகிறார்கள்.
வேதங்களை ஓதும் பார்ப்பனர்கள் கூட தமிழ்நாட்டில் வேறுமாதிரிதான் இருக்கிறார்கள். அவர்களால் புராணீகர்களாக விசேஷ நேரங்களில் இருக்க முடிகிறதே ஒழிய எப்போதும் அவர்களால் அப்படி இங்கே இயங்க முடியவில்லை. கேள்விகளும் விமர்சனங்களும் விளைந்த மண் இது. எல்லாவற்றையும் கேள்வி கேட்க முடிந்த காரணங்களால்தான் பள்ளிக்கூடங்கள் முளைத்துக் கிளைத்தன.
அதற்கான அதிகாரங்களும் ஆட்சியாளர்களும் இங்கே இருந்தார்கள். ஆனால் என்ன முழுமையான தீர்வை நோக்கி நகர முடியாமல் அவர்களால் பாதியில் இப்பணிகளை விட்டனர். விட்டவற்றைப் பிடித்து மேறினர் ஒடுக்கப்பட்ட மக்கள். மதம் அதுவும் இந்துமதம் அவர்களுக்கு முழுவிரோதி என ஓதப்பட்ட புரட்சியாளரின் கோட்பாடுகளை உள்வாங்கியப் பின்பு அவர்கள் இன்னும் வீரியமாக்கப்பட்டார்கள்.
ஜாதிகளின் அநியாயங்கள் இங்கே இப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கின்றன, ஆனால் அவை ஒட்டுமொத்த இந்துக்களின் ஆதரவோடு இல்லை. பெரும்பான்மை இந்துக்களின் எதிர்ப்புணர்வில்தான் ஜாதிய மோதல்கள் இங்கு நடக்கின்றன. நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.
இந்த அடிப்படையில் அரசியலை அணுகாமல் மதரீதியாகவே பா.ஜ.க தன் அரசியலை தமிழகத்தில் கட்டமைக்க நினைக்கிறது. அதன் ஆகப்பெரும் பின்னடைவு தமிழகத்தில் நேர்வதற்குக் காரணம் இதுதான்.
திரு.அண்ணாமலையின் யாத்திரைத் தொடங்கப்பட்டபோது உடனிருந்த அதிமுக இன்று அவர்களுடன் இல்லை. உள்ளே ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் வெளியே திராவிட இயக்கத்தலைவரான அண்ணா அவர்களை அண்ணா என்றும் பாராமல் அண்ணாமலை இழிவுப்படுத்தியதால் இப்பிளவு ஏற்பட்டுள்ளது.
வழக்குகள் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என எடப்பாடி அவர்கள் கூறியபிறகு பா.ஜ.கவுக்கான அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டன என்பது தான் உண்மை.
இந்த ஆண்டின் இறுதி நாள் இது. 2022 ஆம் ஆண்டு பல நிகழ்வுகள் நடந்தன. தனிமனித வாழ்வில் எனக்கு எந்தவிதமான மாற்றமும் இல்லை. உடல்நிலை முன்னேற்றம் கண்டிருக்கிறது. நிறைய நிகழ்வுகளில் பங்கேற்றேன். இவ்வாண்டின் இறுதியில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியிலும் எழுச்சித் தமிழரோடு பேரா.வெற்றிச் சங்கமித்திரா அவர்களின் என் பார்வையில் எழுச்சித் தமிழர் என்னும் நூல் வெளியீட்டு விழாவிலும் பங்கேற்றேன்.
இன்னும் முன்னெற்றங்களை வருகின்ற 2023 எனக்குத் தரும் என்று நம்புகிறேன். மேலும் நூல்கள் பல எழுத, திரைப்படம் சார்ந்து வேலைகள் செய்ய, அரசியலில் ஓரிடத்தை அடைய சமூகப்பணியிலும் தொடர்ந்து இயங்கிட மனம் நினைக்கிறது.
பல படைப்புகள் இதழ்களில் வெளியிடப்பட வேண்டும். அதற்காக ஒரு பக்கம் வேலை செய்ய வேண்டும். புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் சமூக ஊடகங்களையும் உருவாக்க வேண்டும்.
பார்க்கலாம்
முடியும்.