Sunday, October 26, 2008

கருத்துரிமை என்னும் மாயை

எந்த சூழலும் நம் மனத்தின் சிந்தனைகளயும் வாழ்வின் விழுமியங்களயும் மாற்றிவிடாமல் பார்த்துக்கொள்வது சரியானது. இல்லையென்றால் கருத்தும் எழுத்தும் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். இதைவிட மோசம் என்னவெனில் எதைப்பற்றி ஒரு காலத்தில் பேசுகிறோமோ அதற்கு எதிராக பேசவேண்டி வரலாம். இல்லையென்றால் முன்பு எதிர்த்ததை தற்போது ஆதரிக்க வேண்டிய அவசியமும் வரலாம். இதனால் மலிவான அரசியல்தனம் நம்முள் குடியேறலாம். காலங்கள் மாறுவதுப்போல கருத்துக்களும் மாறுவது நியதிதானே என்று பேசுவது நியாயமானதுதான். ஆனால் ஒரு குறிப்பிட்ட கருத்தின் மீது நாம் கொண்ட ஆழமான நம்பிக்கை என்பது மாறாததுதானே!

இந்த அடிப்படையில்தான் கருத்துச் சுதந்திரம் அமைய வேண்டும்.ஆனால் மாற்றிக்கொள்ளாத அடிப்படைக்கொள்கையில் நம்பிக்கைத்தளராதவார்கள் பயங்கரவாத தடைச் சட்டத்திற்குள் சிக்கிக்கொள்வது என்பது தமிழகச்சூழலாக இருக்கிறது. ஈழத்தில் தமிழர்கள் அளவுக்கதிகமாக கொல்லப்படுகிறார்கள் என்பதும் அங்கே சாதாரண மக்களின் வாழக்கை கேள்விக்குறியாகவே இருக்கின்றது என்பதும் உலகுக்கே தெரிகின்ற ஒன்று. பதினேழு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ரத்த உறவுகளுக்கு தெரியக்கூடாது என்பது எவ்வகை நியாயம். ஒரிசாவில் மற்றும் பிற இடங்களில் மக்களின் ஒரு பிரிவினர் தாக்கப்படுகின்றனர் என்பதை அறிந்தும் மானுட நேயம் மிக்கவர்கள் அதற்காக தங்களை வருத்திக்கொள்வதும் பிறர் உணரும்படி கருத்தறிவிப்பதும் மனித நேயம் மட்டுமல்ல உரிமையும் தான்.

உலகின் மிகப்பெரிய சனநாயக நாடான இந்தியா தமிழன் துன்பப்படுகிறான் என்று சொன்னால் பயங்கரவாதமாக இருக்கிறது என்றால் என்ன நியாயம்?
எங்கள் ரத்த உறவுகளாகிய ஈழத்தமிழர்களை கொல்வதற்கு ஆயுதம் தராதீர்கள் என்றால் அதில் எங்கே இருக்கிறது பயங்கரவாதம்? என் அண்ணன் அடிக்கப்படுகிறான் அவனைக்காப்பாற்றுங்கள் என்று நாங்கள் கதறுவது எப்படி பயங்கரவாதமாக இருக்கமுடியும்?
சிந்திக்க வேண்டும்.

No comments: