Monday, October 22, 2012



இடிந்த கரை
 
யாழன் ஆதி


1
அலைகள் எழும்பும் மண்ணில்
அசைகிறது துர்கனவின் வாசனை
அதிகாரங்களின் சமையலறையில் சிக்கிச் சிதறுண்ட
ஒரு வெள்ளரிப்பிஞ்சைப் போல் சிதைந்துகிடக்கிறது
அன்றையப் பகல்
கடற்கரையின் மணற்பரப்பில் மனிதர்கள்மீது
விடிந்த நாளின் கணம் தாளாது தத்தளிக்கிறது கடல்
போர்க்குழந்தைகள் தங்கள் கைகளை எழுதுகுச்சிகளாக்கி
எழுதிக்கொண்டிருக்கின்றனர் கடற்கரையில்
கடலில் துரத்தப்பட்ட மக்கள் அலைகளாகி
திரும்பி வருவார்களா என
வலைகளோடு காத்திருக்கின்றனர் காவலர்கள்
ஆணைகள் நிரம்பிய பைகளில் அவர்கள்
குண்டுகளையும் கண்ணீர்ப் புகைகளையும் வைத்திருக்கிறார்கள்
மக்கள் நிரப்ப விடாமல் தடுக்கும் எரிபொருளை
அவர்கள் வயிறுகளில் நிரப்ப எத்தனிக்கிறார்
முண்டாசும் தாடியும் வைத்திருக்கும் ஆட்சியாளர்
யாரோ வெளியிலிருந்து தூண்டுவதாக வந்ததாம்
தகவல் என்று கூறி விட்டு
மக்கள் சாவதைக் குறித்த கவலைகளுக்கானக் குறிப்புகள்
ஏதுமின்றி
கிளம்புகின்றனர் அவர்கள்
அடுத்த நாள் என்ன போராட்டம் என
திட்டமிடுகின்றனர் மக்கள்.











2.
கைகளிலிருந்து ஓங்கி
தூற்றிய மணலில்
தன் வசவுகளையும்
வயிற்றெரிச்சலையும்
வாரி இறைக்கிறாள் அந்த மாணவி
கூடவே விழுகின்றன
அன்றைக்கு அவள் படித்த வீட்டுப்பாடங்கள்.


3.
இரும்புக்கவசங்களோடும்
தடிகளோடும் நிற்கின்றன
காவல் படைகள்
கையில் மண்ணோடும்
காய்ந்த தாவரங்களோடும்
எதிர்கொள்ள வருகின்றனர் மக்கள்.


4.
கடல் வென்றவர்கள்
அலை நின்றவர்கள் மக்கள்
உலை வெல்வர்
நிலை கொள்வர்.


5.
விபரீதங்களைக் கனவுக் காணும்
அரச வம்சங்கள்
மக்களைக் கண்டு அச்சமுறுகின்றன
மக்களின் வெறுங்கைகளே அவர்களுக்கு ஆயுதங்களாய்த்
தெரிகின்றன
அவர்களின் விழிகள் கோபம் கொண்ட
தீக்கோளங்களாய் புனையப்பட்ட நேரத்தில்
ரகசிய உத்திரவோடு வருகிறார்கள் காவலர்கள்
தாங்கள் வாழ்வதற்கு அனுமதி கேட்கும்
மக்களில் குழந்தைகள்
பாடல்களைப் பாடுகின்றன
பீடி சுற்றும் பெண்ணொருத்தி
முறத்தை கீழே வைத்துவிட்டு முழக்கமெழுப்பிவிட்டு
செல்கிறாள்
தீராத பக்கங்களைப் படித்துக்கொண்டே இருக்கின்றனர் மக்கள்
அவ்வப்போது அவர்கள் சாப்பிடுகிறார்கள்
வீடுகளைவிட்டு கடலைவிட்டு
அவர்கள் போராட்டத்திற்கு வந்துவிடுகின்றனர்
குழந்தைகள் கோயிலுக்குப் போவதைப் போல
காலையிலும் மாலையிலும் பந்தலுக்கு வருகிறார்கள்
அவர்கள் கேட்கிறார்கள்
நாங்கள் கேட்கிறோம்
நீங்கள் ஏன் அதை மூடிவிடக்கூடாது?
மக்களற்ற வீதியில்
யாருக்கு விளக்கெரிக்கப் போகிறீர்கள்
அணுவுலையில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தில்.
  •  







யாழன் ஆதி
கஸ்பா
ஆம்பூர்.வே.மா.
9443104443

No comments: