Monday, February 11, 2013


யாழன் ஆதி கவிதைகள்

1        
காற்றின் அசைவுகளைக் கடந்து செல்கிறது
ஊமத்தைப் பூவின் அழகு
உதிர்ந்த புளியம்பழங்களை நசுக்கி விளையாடும்
நடைவண்டிக் குழந்தையின் தன்மையில்
பிசுபிசுப்பித்த பாதங்களோடு நடக்கிறது ஆட்டுக்குட்டி
கொண்டையை அவிழ்த்து மீண்டும் முடித்து
களையெடுக்கும் கண்ணியம்மாவைப் போல்
தலைதிருப்பி சிலுத்துக் கொள்ளும் மரங்கொத்தி
உதிர்ந்த செந்நிற சருகொன்றை
தன் அலகால் கொத்தித் திரியும் செங்காகம்
மீந்த கறித்துணுக்குகளைக் கடித்து விழுங்கும்
கறுப்புநிற நாயொன்று
அடர்ந்த இருளாய் நிழலைக் கக்கிய
மேற்குதிசை வீடொன்றின்
ஓவியம் படர்ந்த தெருவில் மண் துகள்களை
கிளர்த்தி தன் இறகுகளை அலசிக் கொள்ளும்
இரண்டு தட்டான் குருவிகள்
தன் குட்டியின்மேல் உட்கார்ந்து ஓட்டிச் செல்லும்
சிறுவனை முறைத்துக் கொண்டு சகதியில் நிற்கும்
எருமை
வரைய வரைய முடியாத ஓவியம்
என் நிலம்.


2    
தாமதித்தலால் நீளும் நேரத்தை
இசைகொண்டு கடத்துகிறேன்
முணுமுணுத்தலில் விடுபட்ட
பாடலின் வார்த்தைகளைச் சேகரித்து
உரையாடல் ஒன்றை தயாரிக்கிறேன்
உன் வார்த்தைகளுக்கான இடைவெளிகளில்
மனக்காட்சியில் நான் பறித்த பூக்களை
அடுக்குகிறேன்
பாடாமல் விடுபட்ட இசைத்துணுக்குகள்
பற்களின் இடுக்குகளில் காத்திருக்கின்றன
என் இருக்கையில்
உனக்கான பாதி இடத்தை
நோக்கி ஒருவர் வர
எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு
நகர்கிறேன்.3.        

சுமைகளற்ற ஒரு தூரப்பயணத்தைப் போன்று
இனிமையானதன்று
என் நகரில் இருப்பது
எப்போதும் கனறும் நெருப்பு இருந்துகொண்டேயிருக்கும்
அடிவயிற்றில்
வறண்ட ஆற்றின் கரையில் பறக்கும்
கொல்லப்பட்டக் கோழியின் இறக்கைகள்
ஆற்றைத்தூர்த்துக் கட்டப்பட்ட
முதலாளிகளுக்கானப் பாதை
தோல் கழிவுகள் வந்து சேரசேர
கடைசி கொருக்கையும் சாகடிக்கும்
வேறுவழியில்லாமல் என் ஆறு
நீரின்வலி சொல்லி மாளாது
கால்கழுவ ஒரு தண்ணீரையும்
சோறாக்க ஒரு தண்ணீரையும்
குளிக்க ஒரு தண்ணீரையும்
வேதியியல் ஆய்வகத்தன்மையில்
வைத்திருக்கிறது வீடு
மெல்ல நிறம் மாறும் எங்கள் தோட்டத்து மலர்கள்
மணமற்ற அவற்றில்
கசிகிறது தோல் வாசம்.


4.           
என்ன செய்ய சொல்கிறாள் அவள்
கூர்த்த ஆயுதத்தின் முனையில்
கடத்தப்பட்ட ஒற்றைச் சொல்லில்
அவள் தேடும் அர்த்தவெளிகளை
எங்கிருந்து இறக்க முடியும்
கனிதேடும் தாவரத்தின்
இனப்பெருக்க முறையின் கோளாற்றில்
அரூபங்களை அறுவடைச் செய்கின்றன
எங்கள் அரிவாட்கள்
அது இருக்கட்டும் என்று
குறைந்தபட்ச கூலிக்காகப் போராடபோன
அவளை
சிறையில் அடைக்க துக்கித்து அழும்
குழந்தைகளின் பசியினைப் போக்குதல் இன்று தேவை
எனினும்
எந்த செயலுமின்றி
சும்மா இருக்க லாகாது
மூடிய அக்கதவின்முன் கத்திவிட்டு வருகிறோம்
உயிரிருக்கும்வரை போராடுவோம் என.

No comments: