Saturday, May 24, 2014


சடையன்குளம்: திமிர்ந்து எழுந்த தலித் இலக்கியப் பிரதி.

காலத்தின் அதீதத்தில் கரைந்துபோய்விட்டது என்று தலித் இலக்கியம் குறித்து கருத்து தெரிவித்துவிட்டு பலர் இளைப்பாறிக்கொண்டிருக்கும் தருணமாக இது இருக்கிறது. பொது சமூகத்தின் அங்கீகாரத்திற்கும், பொது நீரோட்டக்கலப்பிற்கு ஒருவேளை இது அவர்களுக்கு உதவலாம் என்பது வேறு. தலித் இலக்கியத்தின் தேவை தீர்ந்து விட்டதென சிலர் சொன்னவுடன் அதை விவாதப்பொருள் ஆக்காமல் அப்படியே அமைதியாக இருந்துவிட்ட தமிழ்ப் பொது இலக்கியச்சூழலும் கேள்விக்குட்பட்டதுதான்.

இந்தியச் சமூகத்தின் மூலமாகவும், அதன் நெடுகிலும் இயங்குகிற இயங்கியலாகவும் சாதி இருக்கிறது. இந்நிலையில் சாதி அடுக்குகளைத் தகர்க்கிற வேலைகளை நாகரிகச் சமுதாயம் செய்ய எத்தனிக்கும்போது வெளிப்பட்ட இலக்கியவகைமை இன்று தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. அதன் காரணம் சாதி அழிந்துவிட்டது என்பதற்காய் அல்ல. அது மேலும் எழுந்துவிடக் கூடாது என்னும் சிற்றெண்ணம். ஆனால் எதிர்புரட்சியாக சாதி வளர்க்கும் அரசியல் இங்கு வேரூன்றி வருகிறது. தலித்துகளுக்கு எதிராக அவர்களை அடக்கி ஒடுக்கி ஆளுமைச் செய்யும் சாதிகள் ஒன்றாகத் திரளுகின்றன. குறைந்தபட்ச பாதுகாப்பாகக் கூட இல்லாத வன்கொடுமைத் தடைச்சட்டத்தை மாற்ற வேண்டும் என்னும் கோரிக்கையோடு மாவட்டங்கள் தோறும் சாதிய கட்டமைப்பின் காவலர்கள் பறந்துகொண்டிருக்கின்றனர்.

ஆஸ்திரேலிய பழங்குடி மக்களான அபராஜினிகளிடம் மன்னிப்புக்கேட்கும் மனசாட்சி நிறைந்த வேலையை அந்நாட்டின் பாராளுமன்றம் செய்தது.அது அவர்களுடைய நிலத்தை பண்பாட்டை அபகரித்ததற்காக ஆட்சியாளர்கள் பழங்குடியினரிடம் மண்டியிட்டனர். இந்தியாவின் பழகுடிமக்களாகிய தலித் மக்களிடம் இவர்கள் மன்னிப்புக் கூட கேட்க வேண்டாம் அவர்களின் கோரிக்கையாகிய தங்களை மாண்புள்ள மனிதர்களாக நடத்த வேண்டும் என்பதையாவது இந்தியச் சமூகம் தன் கவனத்தில் எடுத்திருந்திருந்திருக்கலாம்.ஆனால் கெடுவாய்ப்பாக அவர்களுக்கு மேலும் துன்பம் தருவதும் சாதி அமைப்பை மனசாட்சியே இல்லாமல் கெட்டிபடுத்துவதும்தான் நடக்கிறது.

சாதியின் கடைசித்துளி இருக்கும் வரைக்கும் தலித் இலக்கியம் இருக்க வேண்டும் என்பதுதான் நியாயமானதாக இருக்க முடியும். ஆனால் தங்களை தலித்துகளாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத ஆனால் தலித் இலக்கியத்தையே தன் உற்பத்திப் பொருளாகக்கொண்டிருக்கும் தலித் எழுத்தாளர்கள்கூட தலித் இலக்கியத்தை நிராகரிக்கும் இச்சூழலில்தான் சடையன்குளம் நம் கைகளில் கிடைக்கிறது.

உப்புவயல், மீசை, போன்ற தலித் இலக்கியங்களைத் தந்த ஸ்ரீதரகணேசன் நமக்கு சடையன்குளத்தைத் தந்துள்ளார். சடையன்குளம்தான் கதை நடக்கும் களம். அந்தச் சிறிய கிராமத்தில் தலித் மக்களுக்கும் மற்ற  அனைத்து சாதி இந்துக்களுக்கும் நடக்கும் போராட்டமே கதை. விடுதலைக்காகவும் வாழ்வுக்காகவும் போராடும் தலித்துகள், அவர்களை மேலும் அடிமைகளாக வைத்திருக்கக் கருதும் ஆண்டைச் சாதிகள் இவர்களின் வாழ்வியல், அவற்றின் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், மாற்றங்கள் என இப்பிரதி தானாக ஒரு வரலாறாகச் சுரக்கிறது.

சடையன்குளத்து சேரிக்கு வாழ்க்கைப்பட்டு வருகிறாள் தொடிச்சி. அவள் ஓர் அற்புதமானவள். ரத்தத்தைப் போல அவள் உடலில் விடுதலையும் ஒரு திரவமாக ஓடிக்கொண்டே இருக்கிறது. சடையன்குளத்தில் இருக்கும் அவள் வருகைக்கு முன் இருந்த தலித்துகள் ஆண்டைகளை எதிர்க்க முடியாதவர்களாக அவர்களின் அடிமைகளாக மட்டுமே இருக்கின்றனர். தொடிச்சியின் வருகை அவர்களுக்கு பல கதவுகளைத் திறக்கிறது.  

சோட்டையன் தோப்பு காத்தமுத்து மகள்தான் தொடிச்சி. அவளை சடையன்குளத்தின் தம்மக்கார சாம்பாத்தி பேரன் நல்லையாவுக்கு கல்யாணம் செய்து வைக்கும் பந்தலில் வந்து சாதி இந்துக்கள் அனைவரும் நடத்தும் வன்முறையிலிந்து கதை ஆரம்பிக்கிறது. தலித் கல்யாணம் ரேடியோ லைட் எல்லாம் போட்டு நடக்கிறதா எனக் கோபம் கொண்ட அவர்கள் கல்யாணப்பந்தலையே துவம்சம் செய்கின்றனர். தொடிச்சி புதுப்பெண். தலைகுனிந்து நின்றிருக்க வேண்டியவள் என்ற நிலையை மாற்றி அவல் அந்தக் களத்தில் நிற்கிறாள். இதிலிருந்துதான் தொடிச்சியின் சாதி எதிர்ப்புப் போர் ஆரம்பிக்கிறது.

கல்யாணத்தில் நடந்த வன்முறையை மனதில் வைத்து பொருமினாள். ’எங்க ஊரா இருந்தா இந்நேரத்திக்கு ரெண்டு தல் பதிலுகு உருளும்’ என்றுபேசினாள். வீட்டில் எல்லா வேலைகளையும் செய்பவள் அவள்.

அந்த ஊரில் அவள்தான் முதன்முதலில் ரவிக்கை தைத்துப் போட்டுக்கொண்டவள். சுங்குடி சேலக்கட்டி இருப்பவள். இந்தக் கோலத்தைப் பார்த்ததுமே அனைவருடைய முகத்திலுக் கலக்கம். சாம்பாத்தி,மாமனார் ஊர்காத்தான் எல்லோருக்கும் தொடிச்சியின் தோற்றம் பயத்தைத் தருகிறது. இந்த நிலையில் அவள் கிணற்றுக்குத் தண்ணீர் எடுக்கப் போகிறாள். எல்லோரும் தண்ணீர் இறைக்கிற கிணற்றண்டை தொடிச்சியின் தோற்றத்தைப் பார்த்ததும் கேலிபேசுகிறார்கள் உயர்சாதிப் பெண்கள். அவர்கள் போனவுடன் கிணற்றண்டைப் போய் நீற் இறைக்கும் வாளியை எடுத்து கழுவி ஊற்றுவாள் தொடிச்சி. இது பெரிய சண்டையாக மாறும். இப்படி தொடிச்சி தன்னுடைய நிலையிலிருந்து சாதி எதிர்ப்பிற்கான எல்லாவற்றையும் செய்வாள்.

இப்படி நாவல் முழுமையும் வரும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒரு சாதி எதிர்ப்புப் போராகவே அமைந்திருக்கும். அத்தனைச் சம்பவங்களும் எதோ கோர்த்து விட்டதைப் போல இல்லாமல் இயல்பானதாக அதே நேரம் வன்மம் மிக்கதாக இருக்கும். ஊர்கூட்டத்தில் தலித்துகளின் பெயரைச் சொல்லியே இதுவரை யாரும் அழைத்ததில்லை. சேரி மக்களின் பெயர்களை இளக்காரமாகக் கூப்பிடும் வழக்கமே இருந்திருக்கிறது.

தலித்துகளை தங்கள் அடிமைகளாக வைத்திருந்த வாழ்வியலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விடுதலை அடைகின்றனர் தலித்துகள். அது தொடிச்சியின் வாழ்விலிருந்தே தொடங்குகிறது. தொடிச்சியின் தொடர் எதிர்வினைகளால் அவளுடைய மாமனாருக்கும் கணவனுக்கும் ஊர்க்காரர்களால் கொடுக்கப்பட்ட மாடுகளும் வண்டியும் பறித்துக்கொள்ள புது தொழிலைச் செய்ய ஆரம்பிக்கின்றனர். செங்கல் சூளைகளில் வேலை செய்வது, பிறகு தாங்களே செங்கல் சூளையை குத்தகைக்கு எடுத்து கல்லை விற்பது, பிறகு நிலத்தை குத்தகைக்கு எடுப்பது பயிர் செய்வது என அவர்கள் தொடிச்சியின் வீரமான முடிவுகளால் நடக்கிறது

சடையன்குளத்து தலித்துகளின் மதமாற்றம், பொருளாதார வளர்ச்சி, கிறித்தவ பாதிரிமார்களின் வருகை, கல்விஉரிமை. வேலை வாய்ப்புகள் என அவர்கள் கொஞ்சமாக சாதியக் கட்டிலிருந்து வெளியேற வெளியேற வெறிகொள்கிறது சாதி ஆணவம். இதனால் தொடிச்சியின் கணவன் கொல்லப்படுகிறான். சாதி ஆதிக்கக்காரர்கள் திட்டமிட்டு தங்கள் இளைஞர்களை போலீசில் சேர்த்து சடையன்குளத்து தலித்துகளை நேரிடையாக எதிர்க்கமுடியாமல் அவர்களை சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அழிக்கிறார்கள்.

இந்த நாவல் அப்பட்டமான ஒரு தலித் நாவலாகப் பரிணமிக்கிறது. தலித் விடுதலைக் கூறுகளான பெண் முன்னின்று போரிடுவது, தொடிச்சி, தம்மக்கார சாம்பாத்தி, ஊருக்கு வரும் இசபெல்லா போன்ற கன்னியாஸ்திரிகள், ஆதிக்க சாதியில் இருக்கக் கூடிய காதலிகள், என எல்லாப் பெண்களும் ஒரு வகையில் தன் வாழ்வின் அடிமைத்தனத்தை அறுத்தெறியப் புறப்பட்டவர்கள்.

நாவலில் காட்டப்படும் தலித் இணையர்களில் முடிவெடுக்கக்கூடியவர்களாக பெண்கள் இருப்பது தலித் குடும்ப அமைப்பில் காக்கப்படும் குடும்ப ஜனநாயகத்தைக் காட்டுகிறது, நல்லையா-தொடிச்சி.குன்னிமரியான் – செம்பகம்,மூக்கன் – கருப்பாயி, முத்துவீரன் – கருப்பாயி, வைத்தான் செல்லையா – கன்னியம்மா ஆகியோர் இத்தகையவர்களே.

நிலத்தை அடைவது என்னும் குறிக்கோள் தலித்துகளுக்கான இடத்தைப் பெறுவதற்கானப் போராட்டம், நிலம் வாங்குவதற்கான முயற்சிகள் நிலத்தைப் பயன்படுத்திப் பொருளீட்டும் போக்கு ஆகியவற்றைச் சொல்லலாம். அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கு தேர்தலில் போட்டியிடுவது, அதற்காக எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் போரிடுவது, தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க எந்த நிலையிலும் தளராமல் இருக்கும் மனப்பான்மை, சடையன்குளத்திலேயே குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் அருந்ததியர் சமூகத்துடன் தொடிச்சி கொள்ளும் நட்பும் அவர்களுக்கு அவள் செய்யும் உதவியும் உட்சாதிப் பூசல்களைக் கடந்து தலித்துகள் ஒன்றாவதற்கான ஒரு புள்ளியாக மாறுகிறது.வைத்தான் செல்லையாவும் அவனுடைய மனைவி கன்னியம்மாவும் மரியசிலுவையாகவும் அமலோற்பவமாகவும் மதம் மாறியபின் அவர்கள் சமூகவாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் முக்கியபதிவுகளாக இருக்கின்றன. சாதி ஒழிப்பிற்கு மதம்மாற்றம் ஒரு முக்கிய ஆயுதம் என்னும் அரசியல் சூத்திரம் அது எழுதப்படுவதற்கு முன்பே தலித் வாழ்வியலாக இருந்தது என நாவல் முழுக்க தலித் விடுதலைக் கருத்தியலை எந்தவிதமான துருத்தலும் வேண்டுமென்றே செய்தல் என்னும் தன்மையும் இல்லாமல் பரப்பியிருப்பார் ஸ்ரீதரகணேசன்.

அவருடைய கதை சொல்லல் முறை நேரிடையாக கதைசொல்லல் முறையாக இருப்பதனால் வாசிப்பதற்கு எளிமையாகவும் அதே நேரத்தில் காத்திரமான நிகழ்ச்சிகளை அடுக்குவதால் அடுத்து என்ன நடக்கிறது என்று அறியும் ஆவல் நாவல் வாசிப்பில் கிடைக்கிறது. ஒவ்வொரு முறையும் தலித்துகள் அடுத்தக் கட்டத்திற்குச் செல்லும் போது அப்பாடா என்று ஆசுவாசப்படும் மனது அடுத்து வரும் கனமான கதைப் போக்கால் மீண்டும் வலி வந்த காயத்தைப் போல மாறிவிடுகிறது.

தலித் இலக்கியம் என்பது தலித்துகள் வாசிக்கும்போது இன்னும் போராட வேண்டும் என்னும் உத்வேகத்தையும் தலித் அல்லாதவர்கள் வாசிக்கும்போது அவர்களின் மனசாட்சியைக் கிளறும் வகையில் இருக்க வேண்டும் என்னும் சரண்குமார் லிம்பாலேவின் கருத்திற்கேற்ப சடையன்குளம் அமைந்திருக்கிறது.

சடையன்குளம் என்னும் ஓர் ஊர் இந்திய சாதியத்தன்மையின் ஓர் அலகாக அமைந்திருக்கிறது. தலித் இலக்கியத்தில் நாவல் வகைமையை மேலும் செழுமைப்படுத்தி அதனை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தி, இதன்மூலம் எழுதப்படாத இன்னும் எத்தனையோ சடையன்குளங்கள் வெளிவர உந்துதலைத் தந்திருக்கிறது சடையன்குளம்.

சடையன்குளம்( நாவல்)
ஆசிரியர் :  ஸ்ரீதர கணேசன்
வெளியீடு : கருப்புப் பிரதிகள்,சென்னை- 5
விலை : ரூ. 250/-


No comments: