Wednesday, June 22, 2011

சமச்சீர் கல்வி என்னும் சதுரங்கத்தில் வெட்டப்பட்டக் காய்களும் வாழநினைக்கும் ராணிகளும்

கல்வியின் நிலை தமிழ்நாட்டில் இன்று பெரிய கேள்விக் குறியாகியுள்ளது. எந்தப் பாடத்திட்டம் என்று முடிவுபெறாத சூழல் ஒன்றில் சிக்கித் தமிழக மாணவர்கள் நூலறுந்த பட்டத்தின் திண்டாட்டத்தினை உணர்ந்தவர்களாகின்றனர். தமிழகப் பொது மக்களோ கடந்த ஏப்ரல் 13-ந் தேதியிலிருந்து மே 13-ந்தேதி வரை தங்களுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டதாகவும் இதற்கு மேல் நமக்கும் இதற்கும் எந்தவிதமான சம்மதமும் இல்லை என்று வாழப்போய்விட்டார்கள். இப்போது தவிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தாங்கள் என்பதையும் மறந்து வெந்ததைத் தின்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

2011 ஜூன் 10-ஆம் திகதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாண்பமை எம்.ஒய். இக்பால், சிவஞானம் ஆகியோர் கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியை இக்கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர். பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரால் தொடுக்கப்பட்ட பொதுநலன் கோரும் மனுவிற்காக அளிக்கப்பட்ட தீர்ப்பு இது. தற்போதைய தமிழக அரசின் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தை அணுகுவதற்காகத் தற்போது டெல்லியில் இருக்கின்றார். கோடை விடுமுறையில் இருக்கும் உச்ச நீதிமன்றத்தில் அவசரகால மனுபோட்டு தற்போது தரப்பட்டிற்கும் தீர்ப்பிற்குத் தடை வாங்கி வந்து தன்னுடைய முதல்வரின் பொற்பாதங்களில் சமர்ப்பித்தால்தான் தன்னுடைய பெயர் அமைச்சரவையில் இருக்கும் என்னும் அவரின் அவஸ்தையினை யார் புரிந்துகொள்ள முடியும்?

சரி அது இருக்கட்டும். தமிழக அரசு சமச்சீர்கல்விக்கான தடையை உருவாக்கிச் சட்டவரைவை தமிழக அரசு கொண்டுவந்தபோது சமச்சீர் கல்விக்கானப் போராட்டங்களை அக்காலங்களில் நடத்திய தமிழகப் பொதுவுடைமைப் பாண்டியர்களும் ராமகிருஷ்ணர்களும் கூட்டாளி தர்மத்தினைக் கடைபிடித்துத் தங்கள் செங்கடமையை ஆற்றி நிறைவடைந்திருக்கின்றனர். செவ்வணக்கம் தோழர்களே! தாய் அமைப்புகள் அமைதிக்காக்க மாணவர் அமைப்புகள் போராட்டம். அம்மாவுக்கு அடங்காத பிள்ளைகள்.

கருணாநிதி அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளாத முத்துகுமரன் அறிக்கையின் அடிப்படையில் குறைந்த பட்ச தேவைக்கான திட்டமாக அவருடைய காலத்தில் சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பாடதிட்டம், மத்திய அரசு பாடத்திட்டம், மாநில பொதுக்கல்வி திட்டம் என வரையறுக்கப்பட்ட வேறுபாடுகளுடன் தமிழகக் கல்வித்துறை இயங்கி வருகின்றது. மெட்ரிக் பள்ளி என்பது உயர் நடுத்தர வர்க்கத்திற்கும் மத்திய அரசு பாடத்திட்டம் என்பது மாநகர உயர் வர்கத்தினருக்குமான கல்வி முறையாகவும் மாநில அரசின் பாடத்திட்டம் என்பது ஏழை பாழைகளுக்கானது எனவும் வர்க்க வேறுபாட்டுடனும் அமைக்கப்பட்ட கல்வி அமைப்பு என்பது இந்துயாவின் வேதகால கல்வி அமைப்பின் நீட்சியாகத்தான் இருக்கின்றது. இந்த வேதகால கல்வி அமைப்பில்தான் குலக்கல்வித்திட்டமும் இருந்தது. சாதி ஆதிக்கத்தின் வேரை ஊன்றிய மிக முக்கியமான இடம் கல்வியாக இருந்தது என்பது மிக முக்கியமாகக் கருதப்படவேண்டியது. சாதி அமைப்பினையும் ஏற்றத்தாழ்வுள்ள சமூக அமைப்பினையும் கட்டிக்காக்கும் அமைப்பாக கல்விக்கூடங்கள் இருந்தன. பார்ப்பனர்கள் வேதம் ஓதுவதற்கும் சத்திரியர்கள் போர்த்தந்திரங்கள் பயில்வதற்கும் குருகுல கல்விமுறை இருந்தது. இதன் அடிப்படையில்தான் வேதம் படிப்பதைத் தன் காதால் கேட்டால் கூட ஈயத்தைக் காய்ச்சி காதில் ஊற்ற வேண்டிய கடுமையான தண்டனைகளை வகுக்கக்கூடிய மனுதர்மங்கள் வாசிக்கப்பட்டன.

ஆக, சமூக அமைப்பில் வேறுபாடுகளை களைய முடியாதவைகளாகத்தான் இந்தக் கல்வி திட்டங்கள் இருந்தன. தற்போது இருக்கும் வேறுபாடுகளுள்ள கல்வி திட்டங்கள் வர்க்க வேறுபாட்டை உருவாக்கக் கூடியன. ஒரு உதாரணத்திற்காகப் பேசுவோம் பொதுத்தேர்வுக் காலங்களில் அரசுப்பள்ளி மாணவர்களும் மெட்ரிக் பள்ளி மாணவர்களும் ஒன்றாக ஒரே அறையில் தேர்வு எழுதக் கூடிய சூழ்நிலை எல்லா இடங்களிலும் ஏற்படும். அப்போது மெட்ரிக் பள்ளி மாணவர்களின் நடவடிக்கைகளை அவர்களின் இயல்புகளை காணும்போது அரசுப்பள்ளி மாணவர்கள் கீழ்நிலை மனோநிலையை அவர்கள் அடைக்கின்றனர். அவர்களைப் போல இல்லையே என்னும் ஏக்கம் ஏழைக்குழந்தைகளின் உள்ளங்களில் ஏற்படுக்கின்றது. சீருடை திட்டத்தைக் கொண்டுவரும்போது பணக்காரன் ஏழை என்னும் வேறுபாடு தெரியாமலிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று படிக்காத காமராஜரால் சொல்ல முடிந்திருக்கின்றது. ஆனால் கல்வி அமைப்பில் இவ்வளவு வேறுபாடுகளை படித்தவர்களால் கொண்டுவர முடிந்திருக்கின்றது.

இந்த வேறுபாடுகளைக் களைவதற்காக அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்துதல் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் அவர்களின் சமூகப் பொருளாதார ஏற்றுத்தாழ்வுகளிலிருந்து அவர்களை விடுவிக்க ஆவன செய்தல் என்றில்லாமல் கடந்த அரசு மேம்போக்காக சமம் என்னும் வார்த்தையைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கியது. கல்வியாளர்கள், நவீன படைப்பாளிகள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் எனப் பலர் கலந்து ஒரு பாடதிட்டத்தை உருவாக்கி அதைக் கடந்த கல்வி ஆண்டிலேயே முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு நடைமுறை படுத்தியது.

அரசுப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் இது நடமுறைக்கு வந்தது. அப்போது மெட்ரிக் பள்ளிக்காரர்கள் அப்பாடதிட்டம் மிகவும் எளிமையாக இருப்பதாகவும் அப்புத்தகத்தினை அவர்களின் மாணவர்கள் மூன்றே மாதங்களில் படித்து முடித்து விட்டதாகவும் கூறினார்கள். ஆனால் அரசுப்பள்ளிகளில் நிலைமை தலைகீழ். ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்களின் சூழ்நிலை என்று அப்புத்தகம் கல்வியாண்டு வரை நடத்தப்பட்டு தேர்வும் வைக்கப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில் சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாகப் புதிய அரசு அறிவித்தது.

மற்ற வகுப்புகளுக்கான புத்தகங்கள் 206 கோடி செலவில் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கும் நிலையில் அவற்றை நிறுத்துவதாகவும் பழைய பாடத்திட்டத்திலேயே புத்தகத்தை அச்சடிப்பதாகவும் அதுவரை ஜூன் 15ம் தேதி வரை பள்ளி விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டது.

நமக்கு சில கேள்விகள் ....

தமிழநாட்டின் தேர்தல் ஒருவேளை ஆகஸ்டில் நடந்து செப்டம்பரில் முடிவுகள் வெளிவந்து புதிய ஆட்சி பதவி ஏற்றிருப்பின் பாடப்புத்தகங்கள் என்னவாகி இருக்கும்?

கருணாநிதியின் கவிதை சங்கமம் மற்றும் பிற இந்த ஆட்சிக்குப் பிடிக்காத பாடங்கள் தமிழ்ப்பாடத்தில்தான் இருக்கும். அறிவியலில் ஏதும் இருக்க வாய்ப்பில்லையே? ஆய்வகத்தில் ஆக்ஸிஜன் தயாரிப்பது - கருணாநிதி முறை என்று இருக்க வாய்ப்பில்லை. அதே போலத்தான் ட்ரிக்னாமெட்ரி இருக்கும் கருணாமெட்ரி என்று அதை மாற்ற முடியாது என்பது உண்மைதானே?

எனவே உயர்நீதிமன்றம் கூறியதைப் போல தற்போதைய அரசு புதிய பாடத்திட்டக் குழுவை நியமித்து பாடங்களை உருவாக்கி அடுத்தக் கல்வியாண்டில் விநியோகிக்கலாம். தற்போது இருக்கும் புத்தகங்களை உடனடியாகக் கொடுத்து இவ்வாண்டே சமச்சீர் கல்வியைத் தொடங்கலாம்.

இல்லை சமச்சீர் கல்வி வேண்டாம் என்னும் தனியார் பள்ளிகளின் தரகுமுதலாளிகள் கூறுவது போலத்தான் தமிழக அரசு நடக்கும் என்றால் அது கண்டிப்பாகத் தனக்கு வாக்களித்த கோடானுகோடி விளிம்புநிலை வாக்காளர்களுக்கு அது செய்யும் முதல் துரோகமாக இது பதிவாகும்.

நன்றி
தடாகம்.காம்

1 comment: