Friday, October 7, 2011

பரமக்குடி துப்பாக்கி

அந்த கிராமத்தில் நாங்கள் நுழைந்த போது பெண்கள் கோபமாக எங்களைச் சூழ்ந்துகொண்டார்கள். மதுரையிலிருந்து பரமக்குடிக்குப் போகும் சாலையில் பரமக்குடியின் வெகு அருகில் இருக்கும் சேரிப்பகுதி அது. எச். பரளை என்று அதற்குப் பெயர்.’

இப்படியே போயினு இருந்தா நாங்கெல்லாம் முசுலீமா மாறவேண்டியது தான்’ 2011 செப்டம்பர் மாதம் தலித்துகள்மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத்திற்குப் பிறகு அங்கு பல உண்மை அறியும் குழுக்கள் செல்கின்றன. யார் போனாலும் பரளைக்குக் கண்டிப்பாகச் செல்கிறார்கள். சாலையோரத்திலேயே அமைந்த பகுதி அது என்பதால் சீக்கிரமாக யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்துவிடலாம் என்னும் நிலை பரளைக்கு உண்டு. துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் பரளை மட்டுமல்ல பரமக்குடியில் இருக்கும் தலித் குடியிருப்புகள், பரமக்குடியைச் சுற்றியுள்ள தலித் கிராமங்கள் எதிலும் ஆண்கள் இருப்பதில்லை. பனிரெண்டு வயது சிறுவன் கூட எங்காவது ஒளிந்துகொண்டுதான் இரவைக் கழிக்கவேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும்போது ஏதாவது பூச்சிப் பொட்டு கடிச்சி எதனா ஆச்சினா என்ன செய்வது என்பது அப்பகுதியில் இருக்கும் பெண்களின் கேள்வி. தாழ்த்தப்பட்டவர்கள் தலைநிமிர்ந்தே வாழக்கூடாதா என்று அப்பெண்கள் கேட்கும் கேள்விகளில் நியாயம் மட்டுமல்ல ஆத்திரம் கோபம் ஏமாற்றம் எல்லாம் அடங்கியிருக்கிறது.

பரமக்குடியில் வன்முறை நிகழ்த்திவிட்டு எச். பரளையிலும் காவல் துறையின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை என்கின்றனர் அம்மக்கள். ஆண்களைக் கொண்டு வந்து விடுங்கள் அல்லது அய்ம்பதாயிரம் பணம் கொடுங்கள் என்று காவல்துறை மிரட்டுகின்றனர். அதன் உச்சகட்டமாக கடந்த செப்டம்பர் 18 ம்தேதி துப்பாக்கிச் சூட்டிற்கு ஒரு வாரத்திற்குப் பின் எச். பரளைக்கு காவல் துறை வண்டிகள் வந்திருக்கின்றன. எல்லோரும் ஓடி ஒளிந்துகொள்ள இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறங்கி இருக்கிறார்கள். அப்பகுதியில் நூற்றைம்பது வீடுகள் இருக்கின்றன. ஒரு தெரு நீளமாகவும் அகலமாகவும் கிழக்கு மேற்காக இருக்கிறது. அப்பகுதியின் முக்கியத் தெருவாக அது இருக்க வேண்டும்.

அத்தெருவில் இறங்கிய அவர்களில் பாதி பேர் காவல்துறையின் சீருடையில் இருக்கிறார்கள், மீதி பேர் சாதரண உடையில் இருக்கிறார்கள். எல்லாரும் காவலர்களா அல்லது ஆட்களை காவல்துறையே திரட்டி வந்ததா என்று அம்மக்களால் தீர்மானமாக கூற இயலவில்லை.வீடுகளில் பதுங்கிக்கொண்டு அவர்கள் என்ன நடக்கிறது என பார்த்துக்கொண்டிருந்திருக்கின்றனர். சீருடையில் இல்லாதவர்களில் பெரும்பாலோர் தலைகளில் திடீரென தலித் இயக்கங்களின் கொடிகளைக் கட்டிக்கொண்டனர். சீருடையில் இருக்கும் காவல் துறையினர் கைகளில் தற்காப்பு அரண்களாக இருக்கும் கருவிகளை எடுத்துக்கொண்டனர். திடீரென்று “போலீஸ் ஒழிக’ என்னும் சப்தம் கேட்க மீண்டும் கலவரம் தொடங்கிவிட்டதாக தலித்மக்கள் அஞ்சி நடுங்க கல்லெறிதல் நடைபெற்று இருக்கிறது. அவ்வளவு கற்களை எங்கிருந்து எடுத்து வந்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அவ்வளவு கற்கள் அந்தப்பகுதியில் எங்கும் உடனே கிடைக்க வாய்ப்பில்லை.

ஒருபக்கம் இருப்பவர்கள் போலிஸ் ஒழிக என கல்லடிப்பதும் உடனே எதிர்ப்பக்கமுள்ள சீருடை அணிந்த காவலர்கள் பின்வாங்கி ஓடுவதும் என அங்கே நிகழ்ந்திருக்கிறது. இதை இரண்டு மூன்று கேமிராக்களை வைத்து படமெடுத்து இருக்கின்றனர். இறுதியில் இது காவல் துறையின் வேலை என்பதை உணர்ந்த பெண்களில் சிலர் வந்து என்ன நடக்கிறது எனக் கேட்க, “கலவரம் நடந்தால் எப்படி தடுக்க வேண்டும் என பயிற்சி எடுப்பதாகச் சொல்லியிருக்கின்றனர் காவலர்கள்.

கலவரம் நடந்தால் அதைத் தடுப்பதற்கானப் பயிற்சியை தலித் மக்கள் வாழும் இடத்தில் தான் எடுக்க வேண்டுமா? அதுவும் துப்பாக்கிச் சூடு நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் இப்படிப்பட்ட நடவடிக்கையை எதற்காக காவல்துறையால் எடுக்கப்படுகிறது? தலித் மக்கள் எழுச்சி அடைந்துவிடக்கூடாது என்பதற்காக காவல்துறை நடத்தும் அச்சுறுத்தல் நாடகம் இது என்பது மிகவும் எளிதாகப் புரியும் உண்மை. மேலும் இத்தகைய செயல்கள் ஏன் காவல்துறையால் கையெடுக்கப்படுகிறது என்பது நாம் நாட்களை பரமக்குடி துப்பாக்கிச்சூடு வரை திருப்பினால் தெரியும்.

துப்பாக்கிச் சூடு பற்றிய உண்மை நிலைகளை அறிய எழுத்தாளர்கள்,இதழியலாளர்கள்,பேராசிரியர்கள்,சமூகவியலாளர்கள் அடங்கிய ஒரு குழுவோடு ஸ்டாலின் ராஜாங்கத்தின் ஏற்பாட்டால் நாம் பரமக்குடி மற்றும் பிறபகுதிளுக்குச் சென்றிருந்தோம்.

20ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக இருக்கும் திரு.அருண்ராய் அவர்களை எங்களுடைய குழு சென்று சந்தித்தது. மிகவும் இளையவராக இருந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் எங்கள் குழுவினர் பல கேள்விகளை முன் வைத்தோம். அப்படி முன்வைக்கும் எல்லா கேள்விகளுக்கும் அவரால் பதில்களைத் தர முடிந்தது. தலித்துகள் மீது இப்படிப்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றால் சம்மந்தப்பட்ட மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் நிகழ்வு நடந்த இடத்தில் ஒரு மணி நேரத்தில் இருக்க வேண்டும் என்பது எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமைத் தடை சட்டம் 1989 இன் ஒரு பிரிவு,அதனடிப்படையில் நீங்கள் சென்றீர்களா என்று கேட்டோம். அதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சாலைகள் எல்லாம் மறிக்கப்பட்டதால் அவ்விடத்திற்குப் போகமுடியவில்லை என்றார், மேலும் செந்தில்வேலன் போன்ற காவல் துறை அதிகாரிகளே தாக்கப்பட்டபோது நான் எப்படி அங்கே போக முடியும்? என்றார்.

ஆனால் துப்பாக்கிச்சூடு குறித்துக் கேட்ட போது அவர் துப்பாக்கிச் சூட்டிற்கு தான் ஆணையிடவில்லை என்றும் அது அங்கிருக்கிருக்கும் அதிகாரிகளே எடுத்த முடிவு என்று கூறினார். துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்த மக்கள் சொன்ன சில செய்திகளை நாம் மாவட்ட ஆட்சித்தலைவரோடு பகிர்ந்துகொண்டோம். அதில் மக்கள் மேல் கற்களை எறிவதற்கு காவலர்களே பிளாஸ்டிக் சாக்குப் பையில் கற்களைக் கொண்டுவந்தனர் என்ற குற்றச்சாட்டைக் கூறினோம். அதற்கு அவர் மறுத்தார். மக்கள் தான் கொண்டு வந்தனர். என்று கூறினார். ஆனால் நீங்கள் எச். பரளையின் நிகழ்ச்சியை மீண்டும் நினைவு கூர்ந்தால் யார் கல்லை எடுத்து வந்திருப்பார்கள் என்பது எளிதாகப் புரிந்துவிடும்.

சரி அது இருக்கட்டும். அடுத்ததாக துப்பாக்கிச் சூடு எவ்வளவு நேரம் நடந்திருக்கும்? காலை சுமார் 10.30க்கு ஆரம்பித்த காவல்துறையினரின் தாக்குதல் மாலை நான்கு மணிவரை நீடித்திருக்கிறது. தலித் தலைவர் ஜான்பாண்டியன் அவர்கள் கைது செய்யப்பட்டார் எனக் கேள்விப்பட்ட உடனே மக்கள் அதற்கு தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மக்கள் அதிகமாகக் கூடினார்கள் என்றால் அதைக் கலைப்பதற்கு காவல் துறையினருக்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் மக்களைத் தாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் மக்கள் கூட்டம் சொல்லும்படியாகக் கூட இல்லை என்று பார்த்தவர்கள் சொல்லியிருக்கின்றனர்.

ஜான் பாண்டியனை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நுழைவதற்குத் தடையாக அவரை தூத்துக்குடியில் கைது செய்து வல்லநாடு காவல்துறை துப்பாக்கிச்சுடும் பயிற்சியகத்தில் கொண்டுபோய் வைக்கப்படுகிறார். அவர் மீது புகார் இல்லை. நீதிபதியிடம் அவர் சமர்ப்பிக்கப் படவில்லை. ஆனால் நிர்வாகம் அவரை காட்டுக்குள் இருக்கும் ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்கிறது, அவ்விடம் என்கவுண்ட்டர்கள் செய்வதற்கான இடம் என்று அறியப்பட்ட ஒன்று. இதை அறிந்த மக்கள் ஆத்திரமுறுகின்றனர். தென் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அவருடைய ஆதரவாளர்கள் இந்தக் கைதைக் கண்டித்துப் போராடுகின்றனர். இப்படி பரமக்குடியிலும் போராட்டம் நடைபெறுகிறது. இந்த நாளில் தான் பரமக்குடியிலிருக்கும் தியாகி இம்மானுவேல் சேகரன் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு மக்கள் வந்துகொண்டிருந்தனர். அப்படி வந்த அனைவரும் ஜான்பாண்டியனின் ஆதரவாளர்களும் கிடையாது. அப்படியென்றால் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பார்கள் என்று சொல்லவும் முடியாது. பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்கு பத்துநிமிடங்களுக்கு முன் ஆளுங்கட்சியினர் அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர். அவர்கள் முடித்து சென்றபிறகுதான் துப்பாக்கிச்சூடே நடந்திருக்கிறது.

இப்படி குறைந்த அளவே அதாவது அய்ம்பது ஆர்ப்பாட்டக்காரர்களையும் இறுதி அஞ்சலி செலுத்த வந்த கூட்டத்தையும் பகுத்துப் பார்க்கும் அரசியல் பார்வையும் சமூக அவதானிப்பும் இல்லாதவர்கள்தான் எல்லோருமே ஆர்ப்பாடம் செய்பவர்கள் என நினைத்து தலித்துகளைத் தாக்கியிருக்கின்றனர், சுட்டுத் தள்ளியிருக்கின்றனர்.

துப்பாக்கிச்சூடு, காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையின்படி பிற்பகல் 12.00 மணிக்கு ஆரம்பித்து இருக்கிறது. முப்பது முறை சுட்டிருக்கின்றனர். 303, 410 மஸ்கட் மற்றும் கைத்துப்பாக்கி ஆகிய துப்பாக்கி வகைகள் மூலம் சுட்டனர். இதிலிருந்தே இது கூட்டத்தைக்கலைப்பதற்காக நடத்தப்பட்டது அல்ல என்பது தெரியும். அடிபட்டவர்கள் உடனடியாக எந்தவிதமான மருத்துவ உதவிக்கும் உட்படுத்தப்படவில்லை.

பதினொரு மணிக்குத் தாக்கப்பட்டவர்களும் 3.00 மணிக்குத் தாக்கப்பட்டவர்களும் ஒன்றாக ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் தீர்ப்புக்கனியும் வெள்ளைச்சாமியும் உயிரோடிருந்திருக்கின்றனர். உடனடியாக மருத்துவ உதவிகள் தரப்பட்டிருப்பின் உயிர் பிழைத்திருந்திருப்பார்கள்.

ஜெயப்பால் சுடப்பட்டு வீழ்ந்த பிறகு அவரைக் காப்பாற்ற ஒரு முதியவர் அய்யோ எங்க பரம்பரையையே அழிக்கிறீங்களே’ என்று அங்கலாய்த்து அவரைத் தூக்கச் செல்ல அவரையும் சுட்டு இருக்கிறார்கள். பிணமாக இருந்தவரை அடையாளம் காணக்கூடாது என்பதற்காக அருகில் இருக்கும் டிஜிட்டல் பேனரைக் கிழித்து போர்த்தியிருக்கின்றனர். கையில் கிடைத்தவர்களையெல்லாம் கண்மூடி தாக்கியிருக்கிறார்கள். அய்ந்து அடி நீளமுள்ள தடிகளைக் கொண்டு தாக்கியிருக்கின்றனர். இப்படி தாக்கப்பட்டு இறந்தவர்கள் இரண்டு பேர். நான்கு பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகி இருக்கின்றனர்.

துப்பாக்கிச்சூடு குறித்த புகாரைப் பரமக்குடி காவல்நிலையத்தில் தந்தவர் அக்காவல் நிலையத்திலேயே ஆய்வாளராகப் பணியாற்றும் சிவக்குமார் என்பவர். அவர் புகாரில் தான் பலமாகத் தாக்கப்பட்டதால் சுட்டதாகக் கூறுகிறார். பலமாகத் தாக்கப்பட்டவர் எப்படி தன்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட முடியும்? ஆனால் அந்தத் தகவல் அறிக்கையின்படி தாசில்தார் உத்தரவு தந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே தாசில்தாரைவிட உயரதிகாரியான ஆர்.டி.ஓ இருக்கும்போது தாசில்தார் எப்படி துப்பாக்கிச்சூட்டிற்கான ஆணையைத் தந்தார்?

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன.

நாங்கள் சந்திக்க சென்ற போது பலத்த காயம் அடைந்ததாகச் சொல்லப்படும் பரமக்குடி காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் அவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்தார். விசாரணைக் கமிஷன் போடப்பட்டிருப்பதால் தான் எதுவும் பேசமுடியாது என்று கூறி எங்களிடம் பேசாமல் பக்கத்திலிருக்கும் அவருடைய வாகனத்தருகில் சென்று கைப்பேசியில் பேச ஆரம்பித்தவரை பத்துநிமிடங்கள் நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தோம். ஆனால் அவர் வருவது மாதிரி தெரியாததால் நாங்கள் காவல் நிலையத்திலிருந்து வெளியேறிவிட்டோம்.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 என்று முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கிறார்கள். சுடப்பட்டது 30 முறைகள் என்ற கணக்குக்காக அப்படிச் சொல்லப்படுகிறது. துப்பாக்கி குண்டடிப்பட்டவர்களைத் தவிர காவலர்களின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ஏராளம். மதுரை ராசாசி மருத்துவமனையிலும், அப்பலோ மருத்துவமனையிலும் உள்நோயாளிகளாக இருப்பவர்களைப் பார்த்தால் தெரியும் எப்படிப்பட்ட தாக்குதலை ஆயுதமில்லாத உடல் வலிமையில்லாத தலித் மக்கள் மீது காவல்துறையினர் நிகழ்த்தியிருக்கின்றனர் என்பது.

ஒருவருக்கு வலது காலின் பாதத்திலிருந்து அவருடைய உயிர்நிலை வரை ஓர் அங்குலத்திற்கு ஓரிடம் என்ற வகையில் காயம் ஏற்படு தையல் போடப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு கையும் காலும் காலும் உடைக்கப்பட்டிருக்கிறது. ஓர் இளைஞரின் முழங்கால் எலும்பு உடைக்கப்பட்டிருக்கிறது. ஒருவருக்கு உடலெல்லாம் அடி. அடிபடாத இடம் அவருடைய உடம்பில் இல்லை. ஓங்கி அவருடைய உயிர் நிலையில் மிதித்திருக்கிறார்கள். அதனால் அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்படித் தனித்தனியாக இருந்தாலும் எல்லாருக்கும் முதுகிலும் புறங்ககைகளிலும் மிக அதிகமான தடி யடிகள் விழுந்ததினால் ஏற்பட்டிருக்கிற காயங்கள் பார்க்க முடியாமல் அழுகையை வர வழைக்கின்றன. ஈழத் தாக்குதல்களுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல இது.

ஒருவர் தனியாக சிக்கிக் கொண்டால் பத்துபேராக கையில் ஆயுதங்களை வைத்திருக்கும் காவலர்கள் அவரைக் கைது செய்து விடலாம். ஆனால் அறத்திற்கு மாறாக தனியாளாக மாட்டிக்கொண்டவர்களை எல்லாம் கும்பலாக தங்களிடமிருக்கும் ஆயுதங்களைக் கொண்டு தாக்குவது என்பது எந்த போலிஸ் சட்டத்தில் இருக்கிறது? ஒருவரால் பலருக்கு ஆபத்தா? பலரால் ஒருவருக்கு ஆபத்தா? என்று பாமரத்தனமாகக் கூட ஒரு கேள்வியை நாம் வைக்கலாம்.

இப்படித் தாக்கப்பட்டவர்கள் தான் கற்களை எடுத்துவந்திருக்கிறார்கள் என்கிறார்கள் அதிகாரிகள். தங்கள் விடுதலைக்காக உயிர்கொடுத்த ஒரு தலைவனுக்கு மலர் மாலையை எடுத்து வந்தவர்கள் அவர்கள்.

ஆனால் தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், தியாகி இம்மானுவேல் பேரவையின் சார்பில் நடத்தப்படும் மரியாதைச் செலுத்தும் நிகழ்ச்சிக்கு யாரும் போகக்கூடாது என்று செப்டம்பர் 11ந்தேதிக்கு முன்பிருந்தே காவல்துறை மக்களை மிரட்டி இருக்கிறது. அப்படிப் போவதென்றால் யார் யார் செல்கிறார்களோ அவர்கள் பெயர்களை காவல்நிலையத்தில் தெரிவித்துவிட்டு செல்லவேண்டும் என மக்கள் கூறியிருக்கின்றனர். அது மட்டுமல்ல கிராமங்களிலிருக்கும் ஆதிக்க சாதியினரும் விழாவுக்குப் போகக்கூடாது என மிரட்டி இருக்கிறார்கள். இவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்துதான் ஆயுதங்களைத் தயாராக வைத்திருந்தனர் காவலர்கள் என்பது புலனாகிறது.

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு முன்பே மதுரை சிந்தாமணிப் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இது நடந்து ஒரு மணிநேரம் கழித்துதான் தனக்குத் தெரியும் என ஆகச்சிறந்த ஆட்சியராக நாம் கருதும் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்து இருக்கிறார்கள். அந்தத் துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமாக அதிகாரிகள் சொல்வது தாமிரபரணி படுகொலைக்குச் சொல்லப்பட்ட காரணம்தான். இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு புகார் அளித்திருப்பவர் காளியம்மா என்னும் பெண் காவலர். அவர் கூறும் காரணம் என்னவாக இருக்கும் என்று நாம் சொல்லவே தேவையில்லை. பெண் காவலர்களை அவர்களின் மனித மாண்புக்கு எதிராக அவர்களையே பேசச்சொல்லும் அரசதிகாரத்தின் உளவியலின் மோசமான அம்சம் இது. தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு மரியாதைச் செலுத்த பாட்டம் என்னும் ஊரிலிருந்து திறந்தநிலை வண்டியில் முழக்கங்களை எழுப்பி வந்தவர்களை சிந்தாமணியில் காவல் இருந்த காவலர்கள் தடுத்து இப்படி போகக்கூடாது என்று கூற அதனால் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த வண்டியிலிருந்து வந்தவர்கள் போய்விட்டார்கள். ஆனால் அதன்பிறகு டாட்டா சுமோ வில் பரமக்குடிக்கு மரியாதை செலுத்துவதற்காக வந்த தலித் மக்களைத் தடுத்து நிறுத்தி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது. ஏன் சுடுகிறார்கள் என்று தெரியாமலே மக்கள் சிதறி ஓட ஆரம்பித்திருக்கிறார்கள். என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் தாக்குதலுக்கு இலக்கான அம்மக்களின் நிலையை அரசு புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை என்பது தான் உண்மை. துப்பாக்கி சூடு நடத்திய காவல் அதிகாரி இப்போது பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனால் பாய்ந்த குண்டுகள் திரும்பி அவருடைய துப்பாக்கிக்குள் மீண்டும் சென்றுவிடுமா என்ன?

அதேபோல் இளையான்குடி துப்பாக்கிச் சூடு. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இளயான்குடி புறவழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட தலித் இளைஞர்கள் பத்துபேர் கூட இருக்கமாட்டார்களாம். அவர்களைக் கலைக்க வேண்டி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் ஆனந்த் என்னும் தலித் இளைஞரின் கையில் குண்டுபாய்ந்து காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்த உடனே கூடைகளில் கற்களை எடுத்துவந்து சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள் போட்டிருக்கிறார்கள். அதிகமான கற்களைக் கொண்டு தலித்துகள் காவல்துறையினரைத் தாக்கினார்கள் என்று அதை படம்பிடித்தும் சென்றிருக்கின்றனர். காவல்துறைக்கு எத்தனையோ சலுகைகளை வழங்குகின்ற அரசு கற்களுக்கான சலுகைகளையும் வழங்க வேண்டும். இல்லை என்றால் எச்.பரளையில், பரமக்குடியில், இளையான்குடியில் இப்படி கற்களைக் கொண்டு கலவரத்தை எப்படி நடத்துவதாம்.

துப்பாக்கிச்சூட்டில் பலியான ஜெயபாலின் ஊரான மஞ்சூருக்குச் சென்றோம். ஊர் வெறிச்சோடி இருந்தது. திருமணமான ஓர் ஆண்டுகூட ஆகாத அவரின் மனைவி காயத்ரியைச் சந்தித்தோம். இருவருக்கும் கலப்புத்திருமணம். வளைகாப்புக்கு தாய்வீட்டில் இருக்கும் மனைவியைப் பார்க்க வந்தவருக்கு குண்டுகள் பரிசாகக் கிடைத்திருக்கிறது. ஜெயபாலைக் கொன்று அவரை கொஞ்சமும் இரக்கமின்றி கட்டையால் முட்டுக்கொடுத்து தூக்கி வந்து அருகில் இருந்த பேனரைக் கிழித்து மூடியிருக்கிறார்கள்.

தன்னுடைய கணவன் வரவில்லை என்று குடும்பத்தோடு தேடியிருக்கிறார் காயத்ரி. உறவினர்கள் தேடி இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எந்தவிதமான செய்தியும் தெரியாமலேயே இருந்திருக்கிறது. ஜெயபாலின் கைப்பேசிக்கு தொடர்பு கொள்ள இவ்வளவு நேரம் அணைத்து வைக்கப்பட்ட கைப்பேசி இயங்க யாரோ போலீஸ்காரர் எடுத்துப் பேசி எதுவுமே சொல்லாமல் போனைத் துண்டித்து மீண்டும் அணைத்துவிட்டு இருக்கிறார். எனவே குடும்ப உறுப்பினர்கள் ராமநாதபுரம் மருத்துவமனைக்குச் சென்று பார்த்திருக்கிறார்கள். அங்கே அவருடைய உடலை அடையாளம் காணக்கூட காவல்துறை மறுத்திருக்கிறது. பின்னர் ,மீண்டும் கைப்பேசியில் தொடர்பு கொள்ள குண்டுப் பட்டு இறந்த செய்தியை காவல்துறை உறுதிப்படுத்த அதற்குள் ஜெயபால் கொலையுண்ட செய்தி தொலைகாட்சிகளில் ஒலிபரப்பாகியிருக்கின்றது. உடலை வாங்குவதற்கு அவர்கள் படாத பாடு பட்டிருக்கிறார்கள்.

இப்படி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது.இத்தகைய கொடூரத்தைக் காவல்துறையினர் நிகழ்த்தி பரமக்குடியில் தலித்துகளின் மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தலித் மாணவர் பழனிக்குமார் கொல்லப்பட்டது செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி. இந்தக் கொலை நடத்தப்பட்டதன் பின்னணி என்பதே தலித்துகள் யாரும் தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு மரியாதை அளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்னும் எச்சரிக்கைத்தான்.

ஆப்ப நாட்டு மறவர் சங்கம் என்னும் அமைப்பு விடுத்துள்ள அறைகூவலில் இது தெளிவாகத் தெரிகிறது. முத்துராமலிங்கத்தின் குருபூஜையைப் போலவே இம்மானுவேலின் மரியாதை நிகழ்ச்சியும் லட்சக்கணக்கான மக்கள் திரளுகின்ற விழாவாக மாறி இருக்கிறது. அதை அரசுவிழாவாக மாற்றாமல் நாம் தடுப்பதற்காக அணிதிரளவேண்டும் என்னும் அந்த சுற்றறிக்கை கவனத்தில் கொள்ளத் தக்கது.

அது மட்டுமல்ல மின்சாரவாரிய தலித் பணியாளர்கள் வைத்த பதாகையில் இம்மானுவேல் சேகரனைக் குறிப்பிடும்போது “தெய்வத்திருமகன்’ ‘தேசியத் தலைவர்’ என்னும் புகழ்மொழிகளைப் போட்டிருக்கின்றனர். இது முத்துராமலிங்கத்திற்கு மட்டுந்தான் சொந்தம் என்று அந்தப் பதாகையை எடுக்க வேண்டும் என ஆதிக்க சாதியினர் வற்புறுத்த காவல்துறையும் அதற்கு ஒத்துழைத்து தலித்துகளை அப்பதாகைகளை எடுத்துவிட வலியுறுத்தியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டிற்கான உளவியல் காரணம் என்பது தலித்துகள் அதிக்கப்படியாக இது போன்ற பண்பாட்டு விழாக்களில் ஒன்றாகிவிடக்கூடாது. தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 50 வது நினைவு நாளிலிருந்து அவருடைய கல்லறைக்கு வரும் மக்களின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே இருக்கிறது என்று தியாகி இம்மானுவேல் பேரவையின் தலைவர் பூ.சந்திரபோஸ் கூறியது நினைவில் கொள்ள வேண்டியது.

இதைத் தடுப்பதற்காக காவல்துறையில் உள்ள ஆதிக்க சாதியினர் இந்த நிகழ்ச்சியை சரியாகப்பயன்படுத்திக்கொண்டனர். அப்படி என்றால் தலித்துகளை இவ்வாறு கொடுமையாக அடிப்பது என்பது அப்போது எடுத்த முடிவல்ல என்பது நன்றாக விளங்கும். அவர்களின் நெஞ்சில் எப்போதும் இருக்கும் சாதீய வன்மம் உருக்கொண்டு வெளிவர இது சரியான தருணாமாகிவிட்டது என்பதுதான் உண்மை. இதில் தேவர் சாதியை சார்ந்தவர்கள் மட்டுந்தான் என்றில்லை. இத்தகைய சூழலில் ஆதிக்கசாதியினரின் அனைத்துப் பிரிவினைகளும் ஒன்றாக மாறிவிடுவார்கள் என்பது நாம் கண்கூடாக காணுகின்ற ஒன்றாக இருக்கிறது.

எனவே இத்தகைய பகுதியிகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருக்கும் ஆதிக்கசாதி காவல்துறையினரை வேறு மாவட்டங்களுக்கு மாற்றவேண்டும். அவர்கள் உயர்ந்த பதவி வகிப்பவர்களானாலும் அடிமட்ட காவலர்களானாலும் அவர்களுக்கு இத்தகைய இடங்களில் பணிவாய்ப்பு என்பதைத் தரக்கூடாது.

இத்தகைய நேரங்களில் காவல்துறையினர் மற்றும் முடிவெடுக்கும் நிலையிலிருக்கும் அதிகாரிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்னும் உளவியல் பயிற்சியையும் இந்திய, தமிழக இனவரைவியல், பண்பாட்டு வாழ்வியல், சமூகப் படியாக்கம் ஆகியவற்றை சரியான நீள அகலத்தில் பார்க்கும் பார்வையை வளர்க்கும் பயிற்சிகளைத் தரவேண்டும்.

நாங்கள் சென்று பார்த்த தலித் பகுதிகள் எல்லாம் தலித்துகள் குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லாதவர்களாக, வேலை வாய்ப்புகள் ஏதுமற்றவர்களாக, நிலமற்றவர்களாக, ஆதிக்கசாதியினரின் நிலத்தையோ அவர்களின் கைகளையோ எதிர்ப்பார்த்து இருப்பவர்களாகவே இருக்கின்றனர். விவசாயம் என்பது முற்றிலும் அற்றுப்போன இடங்களாக அக்கிராமங்கள் இருக்கின்றன. குடும்பங்கள் என்றால் ஒரு பகுதியில் 60 முதல் 100 வரைதான் இருக்கின்றன. அதில் வேலைவாய்ப்பு அற்றவர்களையும் வாழ்வியல் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாதவர்களையும் அத்தகைய கிராமங்களை விட்டு குடிபெயர்த்தி வேலைவாய்ப்புகள் உள்ள நகரங்களில் அரசே கொண்டு வந்து வைக்கவேண்டும்.

துப்பாக்கிச் சூடு குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின்மீது யாருக்கும் நம்பிக்கையில்லை. அவர்கள் கண்டிப்பாக மக்களைதான் குற்றம் சொல்வார்கள். எனவே இந்த துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை என்பது மத்திய புலனாய்வுத்துறையினாரால் நடத்தப்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அதுவரை துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யவேண்டும்.

பரமக்குடி துப்பாக்கிச் சூடு போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடக்காத வண்ணம் இருக்கவேண்டும் என்றால் மக்கள் சாதிக்கெதிரானப் போராட்டங்களை முன்னேடுப்பதற்கான கருத்தியல்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

No comments: