Friday, October 28, 2011

தீராத விளையாட்டுப் பிள்ளையா கண்ணன்



தமிழ்க் கவிஞர்களின் ஈழத்தமிழருக்கான டெல்லிப் போராட்டம் குறித்து ‘அகவிழி திறந்து’ என்னும் பத்தியில் ‘ஷூட்டிங்’ என்னும் தலைப்பில் அவருடைய பத்திரிகையான காலச்சுவடில் எழுதியிருக்கிறார் திரு.கண்ணன் அவர்கள். ஒரு பத்திரிகை முதலாளி தன்னுடைய கார்ப்போரேட் தனமான நிறுவனத்தின் செய்தி மடலாக வரும் பத்திரிகையில் தன் கருத்தை எழுதுவது என்பது உலகில் நடக்காத செயல் அல்ல. ஆனால் அவர் எதை எழுதுகிறார் என்பதுதான் நம்மை இப்படி எதிர்வினை ஆற்ற வைக்கிறது.

அப்பத்திரிகையோடு தொடர்புடைய எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆக்கவாளிகளும் இதைக் கேட்க வேண்டும் என்னும் வேண்டுகோளையும் வைக்கிறோம்.

ஈழத்தில் போர் நடந்து அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டபோதெல்லாம் தமிழர்கள் தமிழ்நாட்டில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பது ஓர் அரசியல் செயல்பாடாகத்தான் கடந்த காலங்களிலிருந்து தொடர்ந்து வருகிறது. திராவிட அரசியல் உணர்வுள்ள அல்லது வானம்பாடிகளின் வரிசையில் வந்தவர்கள் மட்டுமே எழுத்தளவில் தங்கள் எதிர்ப்பினை இப்பிரச்சினையில் பதிவாக்கியுள்ளனர். மற்றவர்கள் அப்படி இருந்திருக்கிறார்களா எனக்கூற முடியவில்லை. பிரமிள் தன் கவிதைகள் சிலவற்றில் ஈழப்பிரச்சினையைப் பதிவாக்கியிருக்கிறார்.

ஆனால் 2009ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழ்க்கவிஞர்கள் ஈழப்படுகொலைக்கு டெல்லியில் ஆற்றிய போராட்டச் செயல்பாடுகள் கண்ணன் அவருடைய எழுத்தில் சொல்வதைப் போல ‘போராட்ட ஜோரில்’ (இத்தகையப் பகடியை அவருடையத் தந்தையிடமிருந்து கற்றிருப்பார் போல) டெல்லிக்குப் போகவில்லை. படைப்பாளிகளுக்கேயுரிய உணர்வெழுச்சியும் மானுட நேயத்தின் உந்துதலும்தான் அப்போராட்டத்தில் பங்கேற்க எங்களுக்குக் காரணாமாயிருந்தது.

இன்னும் சொல்லப்போனால் படிக்கிற காலங்களில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகப் போராடி ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆட்படுத்தப்பட்டவர்கள் நாங்கள். ஏதோ இப்போது கவிதை எழுதுகிறோம் என்பதற்காக போராடப் போகவில்லை. கவிதை எழுதுவதும் பத்திரிக்கை நடத்துவதும் எங்கள் குலத்தொழில் அல்ல. போராடுவது எங்கள் ரத்தத்தில் ஊறியது. சாதி ஒழிப்புப் போரில் நூற்றாண்டு வரலாறு வாய்ந்தது எங்கள் தனிவாழ்க்கையும் சமூக வாழ்க்கையும். பள்ளிப் பருவத்தில் குட்டிமணி,ஜெகன் படுகொலையைக் கண்டித்து வேலைநிறுத்தம் செய்து தண்டனைப் பெற்றவர்கள் நாங்கள். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபோது எங்கள் ஊரில் தொடர் உண்ணாவிரதம் நடத்திப் போராடியவர்கள் நாங்கள். ரயில் மறியல் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டவர்கள் நாங்கள். அப்போதெல்லாம் கண்ணன் என்ன செய்துகொண்டிருந்திருப்பார் என்று நான் சொல்லத் தேவையில்லை. தமிழில் எழுதக்கூடியவர்களுக்கு அது தெரியும். அது கூட தெரியாதவர்களா நாம்!

டெல்லியில் நடந்த போராட்டம் கவிஞர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டமாக இருக்கலாம். ஆனால் அதில் கவிஞர்கள் எழுத்தாளர்கள் மட்டுமல்ல மனித உரிமை அமைப்பினர், மீனவ அமைப்பினர், மாணவர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்ற போராட்டம் அது. அது மட்டுமல்ல அப்போராட்டத்தை நடத்துவதற்கு லீனா மணிமேகலை மட்டுமே ஒருங்கிணைப்பாளர் அல்ல. கவிஞர்கள் சுகிர்தராணி, மாலதி மைத்ரி, போன்றவர்களும் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டனர். லீனா மட்டும் பணம் செலவழிக்கவில்லை. பணம் செலவானதற்கான ரசீதுகள் எல்லாம் இன்னும் சுகிர்தராணியிடம்தான் இருக்கிறது. மாலதி மைத்ரி நிகழ்ச்சிகளை வடிவமைத்தார்.மீனவ அமைப்புகளை, மனித உரிமை ஆர்வலர்களைத் திரட்டினார்.

பெண்களின் தலைமையை ஏற்க வேண்டும், அவர்களின் வழிகாட்டுதலில் நடக்க வேண்டும் என்னும் சீரிய சிந்தனைதான் ஆண் ஆக்கவாளிகளிடம் அன்றையப் போராட்ட நாட்களில் இருந்தது.(இப்படி ஒரு விஷயத்தைச் சொல்வதைக் கூட ஆணாதிக்கம் என்றுதான் நான் நினைக்கிறேன்) அதனால்தான் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளாக இருக்கக் கூடிய கோணங்கி, ரமேஷ், கரிகாலன், அஜயன் பாலா,அசதா, திருநங்கைக்களுக்காகப் போராடும் லிவிங் ஸ்மைல் வித்யா,சுகிர்தராணி, மாலதி மைத்ரி, இன்பா, நரன், செல்மா பிரியதர்ஷன், லட்சுமி சரவணக்குமார் என இன்னும் நிறைய பேர் கலந்துகொண்டார்கள்.

இவர்கள் கண்ணன் சொல்வதைப் போல போராட்ட ஜோரில் வந்தவர்கள் இல்லை. உண்மையான அக்கறையில் வந்தவர்கள்.

லீனாவிறகும் காலச்சுவடிற்கு உள்ள கருத்துவேறுபாடுகளினால் லீனாவை கேள்வி கேட்கும் எண்ணத்தில் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் எப்படி அவரால் இழிவுப்படுத்த முடியும்? அவருக்கு அத்தகைய எந்த உரிமையும் இல்லை என்றே நான் கூறுகிறேன்.

அந்தப் போராட்டம் டில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த உணர்ச்சிகரமான போராட்டம். தமிழக அரசியல்வாதிகள் எல்லாம் வந்து போராட்டத்தினை வாழ்த்திவிட்டு சென்றார்கள். எங்கள் கருத்தோடு உடன்படாதவர்கள் எங்களை வாழ்த்த வந்தபோது வேண்டாம் என தடுத்து நிறுத்தினோம். பக்கத்தில் கட்சித்தொண்டர்களுடன் வைகோ உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.

யாருமே கண்டுகொள்ளாத அந்தத் தெருவில் தமிழ்படைப்பாளிகள் தொண்டைக் காய கத்தினோம். அடுத்த நாள் இலங்கைத் தூதரகம் முன்னால் அனுமதியின்றி போராடி, தூதரக பெயர்ப்பலகையை செருப்பால் அடித்து, அங்கிருக்கும் துப்பாக்கி வைத்திருந்த காவலாளிகளுக்கு அஞ்சாமல் ராஜபக்சேவின் கொடும்பாவியைக் கொளுத்தி, டில்லியின் முக்கிய பகுதியான நெரிசலான போக்குவரத்துடைய சாலையை மறித்து கைது செய்யப்பட்டு சாணக்கியபுரி காவல்நிலையத்தில் ஒரு நாள் முழுமையும் வைக்கப்பட்டு படைப்பாளிகள் போராடினார்கள். அத்தகைய உணர்ச்சி வசப்பட்ட போராட்டம் அது. அதை கண்ணன் போராட்ட ஜோர் எனக் கொச்சைப்படுத்துவதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?


அவர்கூறும் குற்றச்சாட்டு, லீனா எடுத்திருக்கிற செங்கடல் படத்தில் டெல்லியில் நடத்தப்பட்ட போராட்ட காட்சிகள் வருகிறது என்பது. அதற்காக படத்தயாரிப்பாளர் தந்த பணத்தில்தான் போராட்டம் நடந்தது என்றும் கூறுகிறார். இது முற்றிலும் பொய்யானது. படத்திற்கான ஸ்கிரிப்ட் அப்போதே எழுதப்பட்டது என்பதையும் பார்த்த மாதிரியே கூறுகிறார்.

அதனால்தான் அவரால் தன்னுடைய இதழில் எழுதி தன்னுடைய பதிப்பகத்தில் புத்தகம் போடுவதற்காக படைப்புகளைத் தந்து அவருடைய வியாபாரத்தைப் பெருக்கும் எழுத்தாளர்களையே அவரால் துணை நடிகர்கள் என்று சொல்ல முடிந்திருக்கிறது. போராட்டத்தின் முன்னணியினர் காலச்சுவடு இதழோடு தொடர்புடையவர்களாக இருக்கும்போது அவர்களிடம் ஒரு வார்த்தை கேட்டு கண்ணன் இதை எழுதியிருக்கலாம்.

இப்போராட்டத்தின் காட்சி செங்கடல் படத்தில் இடம்பெறுவது குறித்து எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. போராட்டத்தை செய்தியாக்கும் ஊடகங்கள் யாரும் இதை செய்தியாகப் போடலாமா என போராடுபவர்களிடம் உத்தரவுக் கேட்டுக்கொண்டு செய்தியாக்குவதும் இல்லை. செய்தியில் வரும் யாரும் துணை நடிகர்களும் இல்லை. கண்ணனுக்குத் தெரியாததா!

ஆனால் அவர் ஏன் இப்படிப்பட்ட விஷத்தை படைப்பாளிகள் மேல் கக்குகிறார் எனத் தெரியவில்லை. லீனாவுடனானப் பிரச்சினையை அவர் அகவிழியைத் திறந்து பேசுவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது ஏன்?

மற்றவர்கள் நடத்தும் போராடங்களைத்தான் படங்களில் பயன்படுத்தவேண்டும் என்பது விதி ஒன்றும் அல்ல. போராட்டம் நடத்தியவரே அதை ஓர் இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்னும் தேவை வரும்போது பயன்படுத்தலாம் என்பதும் குற்றமில்லை. மேலும் செங்கடல் படத்தில் அப்போராட்டம் என்ன நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

செங்கடல் படம் முழுமையும் சரியானது என நாம் சொல்லவரவில்லை.அதில் நாம் முரண்படக் கூடிய இடங்களும் இருக்கலாம்.படம் இன்னும் பார்வையாளனுக்குக் கிடைக்கவே இல்லை. அதற்குள் அதைப் பற்றி பேசுவதில் என்ன நாகரிகம் இருக்கப்போகிறது.

மேற்படி போராட்ட பயணத்தில் பங்கேற்றவன் என்னும் உரிமையில் இந்தக் கருத்தைக் கண்ணன் அறிய நான் கூறுகிறேன், உங்கள் தனியான காழ்ப்புணர்வுகளுக்கெல்லாம் எங்கள் ஒட்டுமொத்த போராட்டத்தை பகடி செய்ய வேண்டாம். அது எங்கள் உணர்வுகளோடு விளையாடுவது.

No comments: