Friday, October 7, 2011

பரமக்குடி படுகொலை கண்டன கருத்தரங்கம்



பறை விடுதலை இயக்கம் நடத்திய பரமக்குடி படுகொலை கருத்தரங்கம் கடந்த 24.09.2011 அன்று மாலை 6.00 மணியளவில் சென்னை தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது.


ஆக்கவாளிகளும் பத்திரிகையாளர்களும் சேர்ந்து ஒருங்கிணைத்திருந்த இந்நிகழ்வில் கவிஞர் கரிகாலன் வரவேற்புரையாற்றினார். “அரசயங்கரவாதத்தை எதிர்ப்பதுதான் ஒரு எழுத்தாளனின் முக்கிய பணி. எழுதுவதே ஒரு கலகச்செயல்பாடு என்று பலர் இருக்கின்றனர். இத்தகைய வன்கொடுமைகளைக் கண்டும் அமைதியாகவும் சலனமில்லாமலும் இருக்கும் தமிழ்ச்சமுதாயத்தை என்ன சொல்வது எனத் தெரியவில்லை. ஒரு படைப்பாளி தான் வாழ்கின்ற காலத்தில் நடக்கும் அக்கிரமங்களை எதிர்க்கும் வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் எழுத்தும் வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்கும். ஈழம் சார்ந்த போராட்டங்களில் ஒன்றுபட்ட இலக்கிய புலம் இந்த படுகொலையைக் கண்டு கனத்த மௌனத்தைக் கடைபிடிப்பது ஏன் என்று தெரியவில்லை. பரமக்குடி படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு அரசபயங்கரவாதம் தான் என்பது வெளிப்படையான ஒன்று. இதை எதிர்ப்பதற்காக இணைய வேண்டியவர்கள் இணையாமல் இருப்பது நியாயமல்ல. இந்த வரவேற்புரை என்பது ஏதோ சம்பிரதாயத்திற்கு அல்ல. நம்மீது சுமத்தப்பட்ட இந்த கனத்த சோகத்தைத் தாங்கிக் கொண்டுதான் நாம் இயங்குகிறோம்” என்று கூறி கருத்தரங்கிற்கு வந்திருந்தவர்களை வரவேற்றார்.


கருத்தரங்கில் உரையாற்றிய வழக்கறிஞரும் எழுத்தாளருமான ச.பாலமுருகன் பரமக்குடி படுகொலையின் பின்னணியில் இருக்கும் ஆதிக்க சாதி உளவியலையும் அது அரசு எந்திரங்களில் இயங்கும் விதத்தினையும் விளக்கினார். சந்தைகளை பாதிக்காத அளவுக்குதான் சட்டங்கள் இயற்றப்பட்டன. இதைத்தான் நியோ காலனிசம் என்று சொல்ல வேண்டும். 1993ல் மனித உரிமைப் பாதுகப்புச் சட்டங்கள் வந்தன. அதன்பிறகுதான் பல ஆணையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் அந்த ஆணையங்களின் அதிகார வரம்பு என்பது சந்தையை பாதிக்காத வகையில் மட்டுமே இடுக்கும்படி அதிகாரவர்க்கம் பார்த்துக்கொண்டது. அதனால் தவறு செய்யும் அதிகாரிகளை தண்டிக்கும் சட்டம் எந்த அமைப்பிலும் இல்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியும். ஒருய் லட்சம் தருகிறார்கள் என்றால் கொஞ்சம் போராடியோ வற்புறுத்தியோ அதிகம் கேட்கலாம். அனால் தவறுசெய்த அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க முடியுமா என்றால் அதற்கு வழியில்லை. அது எந்த ஆணையமாக இருந்தாலும் அப்படித்தான். இப்படிப்பட்ட கேள்வி எழுப்ப முடியாத அதிகாரம் காவல்துறை இருக்கிறது. அய்யாவின் ஆட்சியானாலும் அம்மாவின் ஆட்சியானாலும் துப்பாக்கியால் சுடுகிற அதிகார வன்முறையை கேள்வி கேட்க இயலாது. அரசியல் சட்டம் மனிதனுடைய மாண்பைக் காக்க வேண்டும். தலித்துகளுக்குக் கோபம் கொள்ளக் கூடிய தேவை இருக்கிறது. காவல்துறைக்கு என்ன தேவை இருக்கிறது. காவல்துறையைத் தொடர்ந்து வன்மப்படுத்தகிற வேலையை அரசியல்வாதிகள் செய்துகொண்டிருக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடப்பது ஜனநாயகத்தின் பெரிய அவமானம்’ என்று உரையாற்றினார்.


எவிடன்ஸ் கதிர் அவர்கள் உரையாற்றிய போது, பரமக்குடியில் நடந்த படுகொலை காவல்துறையின் சாதி மனோபாவத்தின் வெளிப்பாடு அல்லது அடையாளம். பல ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து வந்தபிறகு ஜான்பாண்டியன் அவர்கள் சுற்றுப்பயணத்தை நடத்தினார். அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதைக்கண்டித்த தலித்துகள் 26 பேரை அபிராம் காவல் நிலையத்தில் வைத்து வதைத்தார்கள். இது வெளிவராத செய்தி. தேவர்சிலை மீது அவமதிப்பு நடத்தியபோது காவல்துறை ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவரைக் கைது செய்தது. ஆனால் தேவரை இழிவாக எழுதினார்கள் என்று பொய் சொல்லி பழனிக்கும்மர்சட்டத்திற்குப் புறம்பாக கூடுகின்ற கூட்டத்தை எப்படிக் கலைக்கவேண்டும் என்பதற்கு கேரள காவல் அறிக்கை 1970 என்ன கூறுகிறது என்றால் தடியடி நடத்தும்போது தடிக்கும் அடிக்கப்படுகிறவருக்கும் இடைவெளி அரையடியாகத்தான் இருக்கவேண்டும். அடிக்கும்போது உடலின் மென்மையானப் பகுதிகளில்தான் அடிக்க வேண்டு. ஆனால் பரமக்குடி கலவரத்தில் கொல்லப்பட்டவர்களில் அடித்தே சித்திரவதை செய்யப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆறுபேரில் மூன்று பேர் அய்ம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள். இருவர் மட்டுந்தான் குருபூஜைக்கு சென்றவர்கள். மீதி நான்குபேர் பொதுமக்கள். நமக்கெல்லாம் ஒரு செய்தி புலனாகவில்லை. நாமெல்லாம் தூக்குதண்டனைக்கு எதிராக கத்துகிறோம். ஆனால் நிறைய பேர் இந்தப் படுகொலையைக் கண்டிக்கக்கூட இல்லையே. கேமிராவுக்கு கட்டுப்பட்டவர்களாக போராட்டங்களை அவர்கள் நடத்துகிறார்கள். பொதுவுடைமைவாதிகளில் சி.பி.எம் கண்டித்தது. ஆனால் சி.பி.ஐயில் தா.பாண்டியன் கண்டிக்கவில்லை, நல்லக்கண்ணு அவர்கள் கண்டிக்கிறார்கள். இது புரியவே இல்லை. நாம் தமிழிதேசிய அரசியலில் இருக்கிறோமோ அல்லது தலித் அரசியலில் இருக்கிறோமே என்று தெரியவில்லை என்று அடக்குமுறை சட்டங்களின் பல பிரிவுகளை எடுத்துக்காட்டி எவிடன்ஸ் கதிர் அவர்கள் உரையாற்றினார்.


ஓவியா அவர்கள் காவல்துறையின் வன்முறையால் விளைந்த இந்த படுகொலை நடந்திருக்கிறது. குழந்தையை அடிப்பதுபோல காவல்துறையினர் மக்களை கலைவதற்காக அடித்திருக்கலாம் ஆனால் இப்படி வெறியாட்டம் நடத்துவது ஏற்ற்குகொள்ள முடியாதது. கண்டிக்கத் தக்கது. பெயர்களை வைத்து சாதிய வெறியாடுவது படித்த சமூகத்திற்கு அழகல்ல என்றார்.

No comments: