நானும் நீயும்
இருப்பதொன்றுமில்லை
மீந்திருக்கும் இந்தச் சாம்பலைத்
தவிர
காலத்தின் கெட்டித்தட்டிய என்
அந்தரங்கத்தின்மீது
உமிழப்பட்ட எச்சிலைத் துடைக்க
என் ஆயுதங்கள் அத்தனையையும் நான்
பயன்படுத்துகிறேன்
நான் படித்த புத்தகங்களை உன்
மேசைமீது வைக்கிறேன்
என் எழுத்துக்களை என் பாட்டியின்
நிலக்கடலைப் பானையைப் போல்
உன் முன்னால் கவிழ்த்துக்
கொட்டுகிறேன்
நாகரிகமடைந்த என் சொற்களை நான்
காற்றில் உலவ விடுகிறேன்
உன் செவிப்பறைகளை வந்தடைய
ஏழு கடல் ஏழு மலைகளைத் தாண்டி
நான் எடுத்துவந்த
என் தாமரையைப் பூவை நான்
உனக்களிக்கிறேன்
சொற்களின் சூட்சமம்நிறைந்த என்
கவிதைகளை
உனக்குத் தருகிறேன்
என் கதைகள் உன் கனத்த
இருதயத்திற்குள் ஊசியைப் போல்
மெல்ல இறங்கும் என நம்பியே
சொன்னேன்
மாறிப் போன என் வாழ்வின்
பலமுறைமைகளை நான்
உனக்கு விளங்க நடந்தேன்
எல்லாவற்றையும் விட
வேறெவரைவிடவும்
மிகவும் அதீத நட்போடு இருக்கவே
நான்
உன்னை நோக்கி வருகிறேன்
எப்படி நான் வந்தாலும்
நீ நெருப்பாகவே வந்து
என்குடிசைகளைக் கொளுத்திவிட்டே
செல்கிறாய்
இனி நான் என் செய்வது என்
சகமனிதனே
சாம்பலிலிருந்து ஊற்றெடுத்துத்
தண்ணீராய்ப் பிரவகிக்கிறேன்
வா இனி நீ நெருப்பாய்.
அக்.2014 புதிய கோடாங்கி
No comments:
Post a Comment