ரத்தவனம்
பசுமையாய் இருந்த என் நந்தவனத்திற்குள்
நான் நடக்கையில் ஈரிட்டிருந்தன என் பாதங்கள்
துயரத்தின் முட்கள் எதுவும் என் தோட்டத்தில் இல்லை
வெண்மைநிற அழகிய அன்னங்கள் நீந்திவிளையாடின
அன்பே நீ தந்த முத்தத்தினை
ஓர் உதிராத பூவாக்கி அதன் கனிவிதையை நட்ட இடத்தில்
உன் வண்ணத்துப்பூக்கள் மலரும் மரம் வளர்ந்திருந்தது
பறக்கமுடியா தன் குஞ்சுகளுக்கு உணவூட்டிய பிறகு
பாடல்களைச் சொல்லிக்கொடுத்தது அந்த நீலப்பறவை
தன் புல்லாங்குழலில் சுவாசத்தை அனுப்பி
இசைத்துணுக்குகளை மெல்ல எறிந்தான் என்னிரவுப் பாடகன்
அமைதியின் ஓவியங்கள்
எங்கும் வியாபித்த வான்வெளியில் அசைந்தன
அன்று ஆம் அன்றுதான்
குண்டுகளின் சிதிலங்களை
என் சுவர்களுக்கு அவர்கள் உடுத்தியபோது
கட்டிலுக்கு அடியில் பதுங்கியக் குழந்தை
ஒட்டிக்கொண்டிருந்தது வயிற்றிலிருந்து வெளியேறிய பச்சை ரத்தத்தில் தரையோடு
பிய்த்தெடுத்துப் போனோம் நந்தவனத்திற்கு
கால்களைக் கிழிக்கின்றன குண்டுகளின் சிதறல்கள்.
யாழன் ஆதி
புதிய வாழ்வியல் அக்டோபர் 2014
No comments:
Post a Comment