Monday, October 22, 2012



இடிந்த கரை
 
யாழன் ஆதி


1
அலைகள் எழும்பும் மண்ணில்
அசைகிறது துர்கனவின் வாசனை
அதிகாரங்களின் சமையலறையில் சிக்கிச் சிதறுண்ட
ஒரு வெள்ளரிப்பிஞ்சைப் போல் சிதைந்துகிடக்கிறது
அன்றையப் பகல்
கடற்கரையின் மணற்பரப்பில் மனிதர்கள்மீது
விடிந்த நாளின் கணம் தாளாது தத்தளிக்கிறது கடல்
போர்க்குழந்தைகள் தங்கள் கைகளை எழுதுகுச்சிகளாக்கி
எழுதிக்கொண்டிருக்கின்றனர் கடற்கரையில்
கடலில் துரத்தப்பட்ட மக்கள் அலைகளாகி
திரும்பி வருவார்களா என
வலைகளோடு காத்திருக்கின்றனர் காவலர்கள்
ஆணைகள் நிரம்பிய பைகளில் அவர்கள்
குண்டுகளையும் கண்ணீர்ப் புகைகளையும் வைத்திருக்கிறார்கள்
மக்கள் நிரப்ப விடாமல் தடுக்கும் எரிபொருளை
அவர்கள் வயிறுகளில் நிரப்ப எத்தனிக்கிறார்
முண்டாசும் தாடியும் வைத்திருக்கும் ஆட்சியாளர்
யாரோ வெளியிலிருந்து தூண்டுவதாக வந்ததாம்
தகவல் என்று கூறி விட்டு
மக்கள் சாவதைக் குறித்த கவலைகளுக்கானக் குறிப்புகள்
ஏதுமின்றி
கிளம்புகின்றனர் அவர்கள்
அடுத்த நாள் என்ன போராட்டம் என
திட்டமிடுகின்றனர் மக்கள்.











2.
கைகளிலிருந்து ஓங்கி
தூற்றிய மணலில்
தன் வசவுகளையும்
வயிற்றெரிச்சலையும்
வாரி இறைக்கிறாள் அந்த மாணவி
கூடவே விழுகின்றன
அன்றைக்கு அவள் படித்த வீட்டுப்பாடங்கள்.


3.
இரும்புக்கவசங்களோடும்
தடிகளோடும் நிற்கின்றன
காவல் படைகள்
கையில் மண்ணோடும்
காய்ந்த தாவரங்களோடும்
எதிர்கொள்ள வருகின்றனர் மக்கள்.


4.
கடல் வென்றவர்கள்
அலை நின்றவர்கள் மக்கள்
உலை வெல்வர்
நிலை கொள்வர்.


5.
விபரீதங்களைக் கனவுக் காணும்
அரச வம்சங்கள்
மக்களைக் கண்டு அச்சமுறுகின்றன
மக்களின் வெறுங்கைகளே அவர்களுக்கு ஆயுதங்களாய்த்
தெரிகின்றன
அவர்களின் விழிகள் கோபம் கொண்ட
தீக்கோளங்களாய் புனையப்பட்ட நேரத்தில்
ரகசிய உத்திரவோடு வருகிறார்கள் காவலர்கள்
தாங்கள் வாழ்வதற்கு அனுமதி கேட்கும்
மக்களில் குழந்தைகள்
பாடல்களைப் பாடுகின்றன
பீடி சுற்றும் பெண்ணொருத்தி
முறத்தை கீழே வைத்துவிட்டு முழக்கமெழுப்பிவிட்டு
செல்கிறாள்
தீராத பக்கங்களைப் படித்துக்கொண்டே இருக்கின்றனர் மக்கள்
அவ்வப்போது அவர்கள் சாப்பிடுகிறார்கள்
வீடுகளைவிட்டு கடலைவிட்டு
அவர்கள் போராட்டத்திற்கு வந்துவிடுகின்றனர்
குழந்தைகள் கோயிலுக்குப் போவதைப் போல
காலையிலும் மாலையிலும் பந்தலுக்கு வருகிறார்கள்
அவர்கள் கேட்கிறார்கள்
நாங்கள் கேட்கிறோம்
நீங்கள் ஏன் அதை மூடிவிடக்கூடாது?
மக்களற்ற வீதியில்
யாருக்கு விளக்கெரிக்கப் போகிறீர்கள்
அணுவுலையில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தில்.
  •  







யாழன் ஆதி
கஸ்பா
ஆம்பூர்.வே.மா.
9443104443

Sunday, September 30, 2012

மழைப்பயணம்

மழையின் சப்தம் கூரையில் விழுந்து கேட்கிறது
இருளை ஈரமாக்கி அதன் எடையைக் கூட்டுகிறது குளிர்
மழைத்துளிகளின் பலம் தாளாமல் வளைந்து கொடுக்கின்றன தளிர்கள்
முட்டைகளை பத்திரமாக்கத் தவிக்கிறது காகம்
கொய்யா மரத்தின் அணிலின் வால் நனைந்திருக்கும்
நேற்று ஈரப்பதத்தில் நட்ட மணிச்செடி மழையின் நீர் உறிஞ்சுகிறது
குருவியின் இறகொன்று தொப்பலாய் நனைந்து மாமரத்தின் தண்டில்
ஒட்டிக் கொள்ள  பயந்து கிளம்புகின்றன எறும்புகள்
மழை நீரைக் குடித்த மண்குழிகள் நிறைந்து மகிழ்கின்றன
அழகிய மழை பொழியும் இந்த இரவின் அடர்ந்த ஏகாந்தத்தில்
நீ வருகிறாய் நினைவுகளில்
மழைச்சாரல் வராமல் பேருந்து சன்னல் கண்ணாடியை இறக்கிய
பயண நினைவுகளோடு
கண்ணாடியில் வழிந்துகொண்டிருந்த மழைத்தாரைகளை மறித்து
ன் மாவிலைக் கண்களில் தீட்டுகிறேன்.

Wednesday, June 20, 2012

யாழன் ஆதி

யாழன் ஆதி

தேடுகை
தேடுகை


எப்போதும் அலையும் காற்றின் இயக்கத்தில்
சுழன்றுகொண்டிருக்கிறது அகன்ற சருகொன்று
சிவந்த கூரிய அலகுடையப் பறவை
பிய்த்துச் சென்ற செம்மரக்கட்டையின் ஓரிழையை
அது தனது கூட்டுக்குள் பதுக்கி வைக்க
அதன் பிம்பம் எதிரொலிக்கும் மாலைநேர வானில்
மேகங்கள் முப்பரிமாணக் கூடல் காட்ட
மோகினி ஒருத்தி ஆடைகளற்ற பின்புறத்தைக் காட்டி
நடக்கிறாள்
விலகாத தவிப்புகளடங்கியப் பெட்டியை வைத்துக்கொண்டு
சுமையின் வலிதாளாமல் கால்கள் இடர
கண்களிலிருந்து வழியும் காமத்தைத் துடைத்துக்கொண்டே
நடக்கிறான்
யாருமற்றத் தெருவில்
புணர்ந்துத் தீர்க்கப்பட்டவர்கள் நிறைந்த அந்தத் தெருவின்
புராதனத்தில் வீழ்ந்து கிடந்த வாளொன்றை எடுத்து
அவன் பெட்டியை உடைக்க
அதிலிருந்து கிளம்பிய புகையில்
இருந்தன அவன் முன்னோர்களின் கண்கள்.

Friday, October 28, 2011

தீராத விளையாட்டுப் பிள்ளையா கண்ணன்



தமிழ்க் கவிஞர்களின் ஈழத்தமிழருக்கான டெல்லிப் போராட்டம் குறித்து ‘அகவிழி திறந்து’ என்னும் பத்தியில் ‘ஷூட்டிங்’ என்னும் தலைப்பில் அவருடைய பத்திரிகையான காலச்சுவடில் எழுதியிருக்கிறார் திரு.கண்ணன் அவர்கள். ஒரு பத்திரிகை முதலாளி தன்னுடைய கார்ப்போரேட் தனமான நிறுவனத்தின் செய்தி மடலாக வரும் பத்திரிகையில் தன் கருத்தை எழுதுவது என்பது உலகில் நடக்காத செயல் அல்ல. ஆனால் அவர் எதை எழுதுகிறார் என்பதுதான் நம்மை இப்படி எதிர்வினை ஆற்ற வைக்கிறது.

அப்பத்திரிகையோடு தொடர்புடைய எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆக்கவாளிகளும் இதைக் கேட்க வேண்டும் என்னும் வேண்டுகோளையும் வைக்கிறோம்.

ஈழத்தில் போர் நடந்து அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டபோதெல்லாம் தமிழர்கள் தமிழ்நாட்டில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பது ஓர் அரசியல் செயல்பாடாகத்தான் கடந்த காலங்களிலிருந்து தொடர்ந்து வருகிறது. திராவிட அரசியல் உணர்வுள்ள அல்லது வானம்பாடிகளின் வரிசையில் வந்தவர்கள் மட்டுமே எழுத்தளவில் தங்கள் எதிர்ப்பினை இப்பிரச்சினையில் பதிவாக்கியுள்ளனர். மற்றவர்கள் அப்படி இருந்திருக்கிறார்களா எனக்கூற முடியவில்லை. பிரமிள் தன் கவிதைகள் சிலவற்றில் ஈழப்பிரச்சினையைப் பதிவாக்கியிருக்கிறார்.

ஆனால் 2009ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழ்க்கவிஞர்கள் ஈழப்படுகொலைக்கு டெல்லியில் ஆற்றிய போராட்டச் செயல்பாடுகள் கண்ணன் அவருடைய எழுத்தில் சொல்வதைப் போல ‘போராட்ட ஜோரில்’ (இத்தகையப் பகடியை அவருடையத் தந்தையிடமிருந்து கற்றிருப்பார் போல) டெல்லிக்குப் போகவில்லை. படைப்பாளிகளுக்கேயுரிய உணர்வெழுச்சியும் மானுட நேயத்தின் உந்துதலும்தான் அப்போராட்டத்தில் பங்கேற்க எங்களுக்குக் காரணாமாயிருந்தது.

இன்னும் சொல்லப்போனால் படிக்கிற காலங்களில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகப் போராடி ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆட்படுத்தப்பட்டவர்கள் நாங்கள். ஏதோ இப்போது கவிதை எழுதுகிறோம் என்பதற்காக போராடப் போகவில்லை. கவிதை எழுதுவதும் பத்திரிக்கை நடத்துவதும் எங்கள் குலத்தொழில் அல்ல. போராடுவது எங்கள் ரத்தத்தில் ஊறியது. சாதி ஒழிப்புப் போரில் நூற்றாண்டு வரலாறு வாய்ந்தது எங்கள் தனிவாழ்க்கையும் சமூக வாழ்க்கையும். பள்ளிப் பருவத்தில் குட்டிமணி,ஜெகன் படுகொலையைக் கண்டித்து வேலைநிறுத்தம் செய்து தண்டனைப் பெற்றவர்கள் நாங்கள். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபோது எங்கள் ஊரில் தொடர் உண்ணாவிரதம் நடத்திப் போராடியவர்கள் நாங்கள். ரயில் மறியல் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டவர்கள் நாங்கள். அப்போதெல்லாம் கண்ணன் என்ன செய்துகொண்டிருந்திருப்பார் என்று நான் சொல்லத் தேவையில்லை. தமிழில் எழுதக்கூடியவர்களுக்கு அது தெரியும். அது கூட தெரியாதவர்களா நாம்!

டெல்லியில் நடந்த போராட்டம் கவிஞர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டமாக இருக்கலாம். ஆனால் அதில் கவிஞர்கள் எழுத்தாளர்கள் மட்டுமல்ல மனித உரிமை அமைப்பினர், மீனவ அமைப்பினர், மாணவர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்ற போராட்டம் அது. அது மட்டுமல்ல அப்போராட்டத்தை நடத்துவதற்கு லீனா மணிமேகலை மட்டுமே ஒருங்கிணைப்பாளர் அல்ல. கவிஞர்கள் சுகிர்தராணி, மாலதி மைத்ரி, போன்றவர்களும் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டனர். லீனா மட்டும் பணம் செலவழிக்கவில்லை. பணம் செலவானதற்கான ரசீதுகள் எல்லாம் இன்னும் சுகிர்தராணியிடம்தான் இருக்கிறது. மாலதி மைத்ரி நிகழ்ச்சிகளை வடிவமைத்தார்.மீனவ அமைப்புகளை, மனித உரிமை ஆர்வலர்களைத் திரட்டினார்.

பெண்களின் தலைமையை ஏற்க வேண்டும், அவர்களின் வழிகாட்டுதலில் நடக்க வேண்டும் என்னும் சீரிய சிந்தனைதான் ஆண் ஆக்கவாளிகளிடம் அன்றையப் போராட்ட நாட்களில் இருந்தது.(இப்படி ஒரு விஷயத்தைச் சொல்வதைக் கூட ஆணாதிக்கம் என்றுதான் நான் நினைக்கிறேன்) அதனால்தான் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளாக இருக்கக் கூடிய கோணங்கி, ரமேஷ், கரிகாலன், அஜயன் பாலா,அசதா, திருநங்கைக்களுக்காகப் போராடும் லிவிங் ஸ்மைல் வித்யா,சுகிர்தராணி, மாலதி மைத்ரி, இன்பா, நரன், செல்மா பிரியதர்ஷன், லட்சுமி சரவணக்குமார் என இன்னும் நிறைய பேர் கலந்துகொண்டார்கள்.

இவர்கள் கண்ணன் சொல்வதைப் போல போராட்ட ஜோரில் வந்தவர்கள் இல்லை. உண்மையான அக்கறையில் வந்தவர்கள்.

லீனாவிறகும் காலச்சுவடிற்கு உள்ள கருத்துவேறுபாடுகளினால் லீனாவை கேள்வி கேட்கும் எண்ணத்தில் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் எப்படி அவரால் இழிவுப்படுத்த முடியும்? அவருக்கு அத்தகைய எந்த உரிமையும் இல்லை என்றே நான் கூறுகிறேன்.

அந்தப் போராட்டம் டில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த உணர்ச்சிகரமான போராட்டம். தமிழக அரசியல்வாதிகள் எல்லாம் வந்து போராட்டத்தினை வாழ்த்திவிட்டு சென்றார்கள். எங்கள் கருத்தோடு உடன்படாதவர்கள் எங்களை வாழ்த்த வந்தபோது வேண்டாம் என தடுத்து நிறுத்தினோம். பக்கத்தில் கட்சித்தொண்டர்களுடன் வைகோ உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.

யாருமே கண்டுகொள்ளாத அந்தத் தெருவில் தமிழ்படைப்பாளிகள் தொண்டைக் காய கத்தினோம். அடுத்த நாள் இலங்கைத் தூதரகம் முன்னால் அனுமதியின்றி போராடி, தூதரக பெயர்ப்பலகையை செருப்பால் அடித்து, அங்கிருக்கும் துப்பாக்கி வைத்திருந்த காவலாளிகளுக்கு அஞ்சாமல் ராஜபக்சேவின் கொடும்பாவியைக் கொளுத்தி, டில்லியின் முக்கிய பகுதியான நெரிசலான போக்குவரத்துடைய சாலையை மறித்து கைது செய்யப்பட்டு சாணக்கியபுரி காவல்நிலையத்தில் ஒரு நாள் முழுமையும் வைக்கப்பட்டு படைப்பாளிகள் போராடினார்கள். அத்தகைய உணர்ச்சி வசப்பட்ட போராட்டம் அது. அதை கண்ணன் போராட்ட ஜோர் எனக் கொச்சைப்படுத்துவதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?


அவர்கூறும் குற்றச்சாட்டு, லீனா எடுத்திருக்கிற செங்கடல் படத்தில் டெல்லியில் நடத்தப்பட்ட போராட்ட காட்சிகள் வருகிறது என்பது. அதற்காக படத்தயாரிப்பாளர் தந்த பணத்தில்தான் போராட்டம் நடந்தது என்றும் கூறுகிறார். இது முற்றிலும் பொய்யானது. படத்திற்கான ஸ்கிரிப்ட் அப்போதே எழுதப்பட்டது என்பதையும் பார்த்த மாதிரியே கூறுகிறார்.

அதனால்தான் அவரால் தன்னுடைய இதழில் எழுதி தன்னுடைய பதிப்பகத்தில் புத்தகம் போடுவதற்காக படைப்புகளைத் தந்து அவருடைய வியாபாரத்தைப் பெருக்கும் எழுத்தாளர்களையே அவரால் துணை நடிகர்கள் என்று சொல்ல முடிந்திருக்கிறது. போராட்டத்தின் முன்னணியினர் காலச்சுவடு இதழோடு தொடர்புடையவர்களாக இருக்கும்போது அவர்களிடம் ஒரு வார்த்தை கேட்டு கண்ணன் இதை எழுதியிருக்கலாம்.

இப்போராட்டத்தின் காட்சி செங்கடல் படத்தில் இடம்பெறுவது குறித்து எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. போராட்டத்தை செய்தியாக்கும் ஊடகங்கள் யாரும் இதை செய்தியாகப் போடலாமா என போராடுபவர்களிடம் உத்தரவுக் கேட்டுக்கொண்டு செய்தியாக்குவதும் இல்லை. செய்தியில் வரும் யாரும் துணை நடிகர்களும் இல்லை. கண்ணனுக்குத் தெரியாததா!

ஆனால் அவர் ஏன் இப்படிப்பட்ட விஷத்தை படைப்பாளிகள் மேல் கக்குகிறார் எனத் தெரியவில்லை. லீனாவுடனானப் பிரச்சினையை அவர் அகவிழியைத் திறந்து பேசுவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது ஏன்?

மற்றவர்கள் நடத்தும் போராடங்களைத்தான் படங்களில் பயன்படுத்தவேண்டும் என்பது விதி ஒன்றும் அல்ல. போராட்டம் நடத்தியவரே அதை ஓர் இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்னும் தேவை வரும்போது பயன்படுத்தலாம் என்பதும் குற்றமில்லை. மேலும் செங்கடல் படத்தில் அப்போராட்டம் என்ன நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

செங்கடல் படம் முழுமையும் சரியானது என நாம் சொல்லவரவில்லை.அதில் நாம் முரண்படக் கூடிய இடங்களும் இருக்கலாம்.படம் இன்னும் பார்வையாளனுக்குக் கிடைக்கவே இல்லை. அதற்குள் அதைப் பற்றி பேசுவதில் என்ன நாகரிகம் இருக்கப்போகிறது.

மேற்படி போராட்ட பயணத்தில் பங்கேற்றவன் என்னும் உரிமையில் இந்தக் கருத்தைக் கண்ணன் அறிய நான் கூறுகிறேன், உங்கள் தனியான காழ்ப்புணர்வுகளுக்கெல்லாம் எங்கள் ஒட்டுமொத்த போராட்டத்தை பகடி செய்ய வேண்டாம். அது எங்கள் உணர்வுகளோடு விளையாடுவது.

Saturday, October 8, 2011

உயிர்க்கொடி




இன்னும் விடியவில்லை. இருளின் பிடியிலிருந்து விலகாமல் வானம் மூச்சுத் திணறிக்கொண்டிருந்தது. கிணற்றின் சுவரோரம் பல்லி ஒன்று கத்தியது. காற்று வீசியதால் கயிறு அசைந்து ராட்டிணத்திலிருந்து ஒலி எழும்பிக்கொண்டிருந்தது. இரவு குறித்த அச்சம் இன்னும் குறையவில்லை அமிர்தத்திற்கு. இலேசான வெளிச்சக்கோடுகள் வந்தால்கூட பரவாயில்லை என்று தோன்றியது அவளுக்கு மடியில் தூங்கிக்கொண்டிருந்த தன் ஒரு வருடக் குழந்தையை மேலும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அது தைரியம் கொடுப்பதாக உணர்ந்தாள்..

அமிர்தத்திற்கு இது புதிது. பிறந்த ஊரில் ஒரு பட்டாம்பூச்சியாய் பாடி திரிந்தவள் அமிர்தம். ஆம்பூருக்கு வந்து வாழ்க்கைப்பட்டு அவள் இப்படி துன்பப்படுவாள் என்று கனவில்கூட நினைத்திருக்கவில்லை. நேற்று இரவு மாமியாருடன் போட்ட சண்டையில் வீட்டிற்கு வெளியே துரத்தப்பட்டவள் இரவெல்லாம் இப்படி கிணற்றருகிலேயே உட்கார்ந்திருக்கின்றாள். அது தாழ்வாரம் இறக்கிக் கட்டப்பட்ட வீடு. மனையில் பாதிதான் வீடாக இருந்தது. மீதி இடத்தில் முருங்கை மரம் ஒன்றும் ஈசானி மூலையில் வேப்பமரமமும் கிணறும் இருந்தன. வலது ஓரத்தில் குளியலறை. கிணற்றண்டையில் பூசணிக் கொடி படர்ந்து மஞ்சள் நிற பூசணிப்பூக்களும் பூக்களுக்குப்பிறகான பிஞ்சுகளும் தெறித்திருந்தன. தன்னுடைய முந்தானையை எடுத்து தலையிலிருந்து கால்வரை இழுத்துப் போர்த்தி ஒரு கூடாரத்தைப் போலாக்கி கால்களை மடக்கி தொட்டிலாக்கி அதில் குழந்தையைப் படுக்கவைத்து கால்களை மெதுவாக ஆட்டி தூங்கப்பண்ணினாள். இந்த இரவு முழுக்க ஒரு பொட்டு தூக்கத்தைக்கூட அவள் தூங்கவில்லை. கண்கள் மூடும்போதெல்லாம் அவளுக்கு கோபமும் அழுகையும் பீறிட்டு வந்துக் கொண்டிருந்தது.

’இவ்ளோ தூரம் கண்காணாத எடத்துல குடுக்கணுமாப்பா?’ எனக் கேட்ட அம்மாவைப் பார்த்து ’டீச்சருக்கு வாத்தியாருதான் நல்லது. மிலிட்டரிகாரனுக்கா பொண்ண கொடுக்கமுடியும்?’ என்று சொன்ன சின்ன அண்ணன் நினைவுக்கு வந்தான். குழந்தையாய் இருக்கும்போது அவன்தான் தலைவாரி பவுடர் பூசி அலங்காரம் செய்து பள்ளிக்கு அனுப்புவான். அந்தக் கிராமத்தில் அப்போது கடைகள்கூட கிடையாது ஆனால் தினமும் பள்ளிக்குப் போகும்போது காசு தருவான். தான் வேலை பார்க்கும் கரும்புத் தோட்டத்திலிருந்து தேர்ந்தெடுத்த நல்ல சிவந்த கரும்பினை வெட்டி அதன் தோலை செதுக்கி முள்ளங்கி பெத்தையைப் போல கரும்பினை ஒரே அளவாக அரிந்து தன்னுடைய துண்டில் ஒரு முனையில் மூட்டையைப் போல் கட்டிக் கொண்டு தங்கச்சிக்குத் தருவான். இது அவனுடைய அன்றாட வேலை. இவள் அதை தன் பாவாடையில் வைத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்குவாள்.

அம்மாவின் விரல் அளவு கோடுகள் பதிந்திருக்கும் சாணம் மெழுகிய திண்ணையில் உட்கார்ந்து ஒவ்வொரு துண்டாய் கரும்பினை எடுத்து வாயில் போட சாறு தொண்டைக்குள் இறங்கும். மேலும் அதை மெல்லமெல்ல மீதிச்சாறு உதட்டு வழியாக வாய்க்கு வெளியே வரும். உதட்டைச் சுழித்து உள்ளங்கையில் துணையோடு கரும்புச்சாற்றை மீண்டும் வாய்க்குள் செலுத்த எழும் சப்தம் வித்தியாசமான ஒரு பறவை கத்துவதைப் போல இருக்கும். கரும்புச் சத்தைகளை மென்று அந்த இடத்திலேயே துப்பி இருப்பாள் அமிர்தம். சுற்றி எறும்புகள் மொய்த்துக் கொள்ளும். ‘ஏம்பாப்பா எதனா ஒரு எடத்துல போடக்கூடாது?’ எனக்கேட்டுக் கொண்டே குனிந்து அவற்றை எடுத்துக்கொண்டிருக்கும் அம்மாவின் இடுப்பைக் கிள்ளிவிட்டு ஓடிவிடுவாள் அமிர்தம். அவள்தான் அவ்வீட்டில் கடைக்குட்டி. ஒரே பெண்.

அமிர்தம் அந்தக் கிராமத்தின் செல்லப்பெண்ணாக வலம் வந்தவள். நெல்வயல்களும் கரும்புத்தோட்டங்களும் சூழ்ந்திருக்கும் அழகிய கிராமம் அது. அந்த ஊருக்குள் செல்லவேண்டுமென்றாலே ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரில் நடந்துதான் செல்லவேண்டும். பாலாற்றங்கரையில் அமைந்த வளமான ஊர் அது. வாலாஜா முக்கிய சாலையிலிருந்து கிளைபிரிந்து தெற்கு திசையில் திரும்பும் சாலையில் போனால் அணைக்கட்டு வரும் அவ்விடத்தில் பாலாறு இரு கிளைகளாகப் பிரிந்து செல்லும். அந்த இரண்டு ஆறுகளுக்கு இடையேயுள்ள கிராமங்களில் சாதம்பாக்கமும் ஒன்று. இருண்ட தென்னந்தோப்புகள் அதிகம். பறவைகளும் அவற்றின் சப்தங்களும் எப்போதும் அவ்வூரின் வெளியை நிறைத்துக் கொண்டேயிருக்கும்.

இரண்டு தெருக்கள் கொண்டது இவர்கள் வாழ்ந்த பகுதி. எல்லா வீடுகளின் பின்பகுதி காலி இடங்களில் உயர உயரமான கோணக்கா மரங்கள். அவர்கள் அதை கொர்கலிக்காய் மரம் என்று சொல்லுவார்கள். கோடை காலங்களில் உயரங்களில் சிவந்து வெடித்த கோணக்காய் சுளைகளைக் கொத்தித் தின்ன கிளிகள் வந்து கூடும். மக்களுக்கு விவசாயம்தான் முக்கியத் தொழில். சேடை அடிப்பது,ஏரோட்டுவது, நெல்லறுப்பது, கரும்பு வெட்டுவது, ஆலை ஆடுவது. வெல்லம் பிடிப்பது என்று அவர்கள் தொழில் விவசாயத்தையே சார்ந்ததாக இருக்கும். காலையிலும் மாலையிலும் மாடு ஓட்டிக்கொண்டு பால் சொசைட்டிக்குப் போய் பால் கறந்து கொடுத்துவிட்டு அப்படியே கால்வாயில் மாட்டைக் கழுவிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் கிணற்றில் இரண்டு குதிப்பான்களைப் போட்டு குளித்துவிட்டு வீடு வருவார்கள். கால்களில் படிந்திருக்கும் புழுதியில் அழுக்கிருக்காது. அதில் வண்டல்தன்மை படிந்திருக்கும்

சாத்தம்பாக்கத்திலிருந்து வடக்கு பக்க ஆற்றைக் கடந்து வரப்புகள்மீது நடந்து பக்கத்து ஊரான பூண்டியில் உள்ள பள்ளியில்தான் படித்தாள் அமிர்தம். பள்ளிக்கு போவது வருவதும் ஒரு கொண்டாட்டமாகவே அவர்களுக்கு அன்றாடம் இருக்கும். பூண்டி கோயிலில் அர்ச்சனையை முடித்துவிட்டு வரும் சுப்புரு அய்யர் இவர்கள் எதிரே வருகிறார்கள் என்பதற்காக வேறு வரப்பில் வருவார். ஆனால் அமிர்தமும் அவளுடன் பூண்டியில் படிக்கும் பையன்களும் விடமாட்டார்கள். சுப்புரு அய்யர் எந்த வரப்பில் வருவாரோ அந்த வரப்பிற்கு அப்படியே தாவிச் சென்றுவிடுவார்கள். தலையில் அடித்துக்கொண்டு வேறு வழியில்லாமல் கழனிச்சேற்றில் கால்கள் பதிய இறங்கி நடந்துச் செல்வார் சுப்புரு அய்யர்.

பத்தாம் வகுப்புவரை பூண்டியில்தான் படித்தாள் அமிர்தம். அவளுடைய அத்தை ஆசிரியப்பயிற்சி முடித்துவிட்டு சாத்தம்பாக்கத்திற்கே ஆசிரியையாக வேலைக்கு வந்தாள். இருவரும் நல்ல ஜோடி சேர்ந்தார்கள். புத்தகங்களைப் படிப்பதுதான் இருவரின் முக்கிய வேலை. அமிர்தத்தின் தாத்தா பாவலர் அந்தப்பகுதியில் அப்போது முக்கியமான சமூகத் தொண்டர். அதனால் இவர்களின் படிப்புக்கும் வாசிப்புக்கும் எந்த குந்தகமும் இல்லை.

அமிர்தம் அவளுடைய பத்தாம் வகுப்பு விடுமுறையில் நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர்கள் நாவலைப் படித்துவிட்டு அவள் அண்ணனுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு பூரணி என்ற அந்நாவலில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயரை வைத்தாள். சும்மா இருக்கும் நேரங்களில் அமிர்தமும் அவள் அத்தையும் ஊரில் இருக்கும் ரேடியோ ரூமுக்கு போய் பாடல்களை வைப்பார்கள். எந்த நேரத்தில் எந்த ஸ்டேஷன் எடுக்கும் என்று இவர்கள் இருவருக்கும்தான் தெரியும். சிவாஜி கணேசன் பாடல்கள் என்றால் அந்த ஊர் மக்களுக்கு கொள்ளைப்பிரியம். ’ஏம்பாப்பு! அண்ணன் பாட்டு எதனா வையேன்’ என்று இவளிடம்தான் கேட்பார்கள்.

பத்தாம் வகுப்புக்குப் பிறகு ராணிப்பேட்டையிலுள்ள தன்னுடைய இன்னொரு அத்தை வீட்டில் தங்கி ஆசிரியைப் பயிற்சியை இரண்டு ஆண்டுகள் படித்து முடித்துவிட்டு மீண்டும் தன் கிராமத்திற்கு வந்தாள் அமிர்தம். அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். ‘திவ்ளோண்டு புல்லுகிட்டி மாதிரி இருந்துக்குண்ணு இந்தப் புள்ள டீச்சாராயிடுச்சே!’ என்று புகழ்ந்து அமிர்தத்தின் அம்மாவிடமே சொல்லியிருக்கின்றார்கள். ஆறுமாதங்கள் கழித்து எந்தப்பள்ளியில் அமிர்தம் படித்தாளோ அந்தப்பள்ளிக்கு ஆசிரியையாக வேலை வந்திருந்தது. அவளுடைய அண்ணன்களுக்கு பெருமிதம். அவளுடைய பெரிய அண்ணன் அந்த கிராமத்தின் தலைவராக ஆகியிருந்தார். ’தலைவரூட்டுப் பொண்ணுக்கு வேலை வந்திருச்சி’ என்று அனைவரும் பேசினார்கள்.

அமிர்தம் முதல் சம்பளத்தை தன் அம்மாவிடம் கொடுக்க அதை அன்போடு வாங்கி அண்ணன்களிடத்தில் கொடுத்தாள் அம்மா. வீடே இன்னொரு சொர்கமாய் இருந்தது. அண்ணன் குழந்தைகள், வேலை, வீடு, அந்த அழகிய கிராமம் என்று இருந்தாள் அமிர்தம். அவளுக்கு என்று தனி மரியாதை கூடியிருந்தது.

அன்று பூண்டி பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் அமிர்தம். ஊரின் எல்லையிலுள்ள அரசமரத்தடியில் வரும்போது அவளுடைய ஊர்க்கார தம்பிகள் ரச்சக்கல்மீது உட்கார்ந்திருந்தனர். ’யக்கா சீக்கிரமா ஊட்டண்ட போ; உன்ன பொண்ணு பாக்க சாயந்தரம் பஸ்சுக்கு வந்திருக்காங்க’ என்று ரேணு கத்தி சொன்னான். ரேணு எதிர்த்த வீட்டு பையன். அமிர்தத்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் சின்ன உடலில் சுற்றிக்கொண்டிருந்த புடவை அவிழ்வதைப் போல உணார்ந்தாள். அடிவயிற்றில் இலேசான கலக்கம். வீட்டிற்கு புறக்கடை வழியாகச் சென்றாள்.

‘எம்மா பொயக்கட வழியாகத்தான வந்த. போய் மூஞ்ச கழுவினு வா’, தங்கம் பெரியம்மா சொன்னபோது கோபமாக வந்தது. பெரிய அண்ணன் சீக்கிரமா வா என்று அதட்டிவிட்டு போனான்.

ஆம்பூருலர்ந்து வந்திருக்காங்க; மாப்பிள்ள வாத்தியாராம். நல்ல கருப்பா கட்டையாத்தான் இருக்கார் என்று வனிதா சொன்னபோது பார்க்க வேண்டும் என்று தோணவே இல்லை அமிர்தத்துக்கு. திருமணம் பேசி முடிக்கப்பட்டு கல்யாணநாள் குறித்தபிறகு கூட அவள் இன்னும் சரியாக மாப்பிள்ளையை பார்க்கவில்லை. சனிக்கிழமையானால் வாரந்தோறும் வீட்டுக்கு மாப்பிள்ளை வந்தாலும்கூட பேசியதில்லை அமிர்தம். தண்ணீரும் சாப்பாடும் தருவதோடு சரி.

மிக நேராக அவள் மாப்பிள்ளையை பார்த்தது காஞ்சிபுரத்தில்தான். புடவை எடுக்கவந்த கடையில் எதிரில் இருக்கும் கண்ணாடியில்தான் மாப்பிள்ளையை முழுமையாகப் பார்த்தாள் அமிர்தம். அவள் மனதுக்குள் எதுவுமே தோன்றவில்லை. அண்ணன்கள் சொல்லிவிட்டார்கள் என்பதோடு நின்றாள்.

கல்யாணம் ஆம்பூரில்தான் நடந்தது. அப்போதுதான் இவ்வளவு தூரம் ஆம்பூர் இருக்கும் என்று அவ்வூரிலிருந்து கல்யாணத்திற்கு வந்திருந்தவர்களுக்குத் தெரிந்தது. ஏன் அமிர்தத்துக்கே அப்போதுதான் தெரியும். ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமைகளில் நடக்கும் ஆசிரியர் கூட்டங்களுக்கு வாலாஜா வரை வருவாள். அவளுடைய தோழி கஸ்தூரியிடம் பேசுவதற்காகவே அங்கு வருவாள். இல்லை என்றால் வாலாஜாவிலுள்ள நூலகத்திற்கு வருவாள். அவ்வளவு தூரம்தான் அவள் அதிகம் பயணம் செய்த தூரம் அவள் திருமணத்திற்கு போகும்போதுதான். வாலாஜாவைத் தாண்டி வண்டி வேலூருக்கு வந்தது. இடையில் இருக்கும் ஆற்காடு, விஷாரம் ஆகிய ஊர்களில் எல்லாம் அவளுக்கு உறவினர்கள் இருக்கின்றார்கள். ஒரு நாளும் அவள் அவர்கள் வீட்டிற்குச் சென்றதில்லை. இப்போது அவர்கள் ஞாபகத்தில் வந்தார்கள். கல்யாணத்திற்கு வருவார்களா என்று மனதுக்குள் எண்ணத்தை ஓட்டினாள்.

வேலூர் வருவதற்கு ஒருமணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டிருந்தது. ஆம்பூர் இன்னும் ஒருமணி ஆகும் என்று வாத்துக்காரமூட்டு சுப்பிரமணி சொன்னான். எம்மாந்தூரம் என்று சலித்துக்கொண்டாள் அமிர்தத்தின் தாய். ஆம்பூர் வந்து எதோ ஒரு சந்தில் வளைந்து மீண்டும் நேராக போய் ஓர் அரசமரத்தடியில் வந்து வண்டி நின்றது. இரவாகி விட்டிருந்தது. நிலா அரசமரத்தின் இலைகளை ஜொலிக்க வைத்துக்கொண்டிருந்தது. அரச மரத்து இலைகள் இவர்கள் திருமணத்திற்கு ஜோடிக்கப்பட்ட தேர்போல அந்த இரவில் மின்னியது.

மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்திருந்தார்கள். மாரியம்மன் கோயில் மேடைமீது பாய்கள் விரிக்கப்பட்டு நடுவில் பெட்ரோமாகஸ் விளக்கு வைக்கப்பட்டிருந்தது. அது வெளிச்சத்தையும் சப்தத்தையும் ஒருசேர தந்துகொண்டிருந்தது. பெண்ணைக் கூட்டிக்கொண்டு போய் அங்கே உட்காரவைத்தார்கள்.மேடையை சுற்றி சின்ன பையன்களும் பெண்களும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். புதுப்பெண்ணைப் பார்க்கும் ஆசை அவர்களுக்கு. இந்தா, என்று வேகமாக ஒருகை பித்தளை வாழைக்காய் செம்பை நீட்டியது. பானகம். வெல்லம் வாழைப்பழம் போட்டுக் கரைத்தது. வாங்கிக் குடி என்று யாரோ இடிக்க அமிர்தம் வாங்கிக் குடித்தாள். எப்போதும் குவளையில் வாய் வைத்து அவள் குடித்ததில்லை. யாராவது அப்படி குடித்தாள் திட்டுவாள். ஆனால் இன்று தலைநிமிராமல் வாய் வைத்துக் குடித்தாள். வெல்லம் கரைந்து கரையாமல் இருந்த சின்ன சின்ன கரும்புத்துணுக்குகள் தொண்டையில் சிக்கியது. துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருந்த நேரத்தில்தான் ’அதான் ஒன் சின்ன நாத்தனா’ என்று காதில் சொன்னாள் அத்தை. அவளைப் பார்க்கக் கூட முடியவில்லை. வந்த மாதிரியே போய்விட்டிருந்தாள் அவள். பெண்ணை அழைத்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டுக்கு உப்பில் கைவைக்க சென்றார்கள். எறவானம் சற்று இறக்கமாக இருப்பதால் குனிந்துதான் செல்லவேண்டும். அதை கவனிக்காத அமிர்தத்தின் சின்ன அண்ணன் வீட்டினுள் நுழையும்போது தலை இடித்துக் கொண்டான். ’வரும்போதே தல இடிக்குதே’ என்று சொல்லிக்கொண்டே உள்ளே போனான்.

அடுத்த நாள் காலையில் மணமகன் இல்லத்தில் திருமணம். ஊர் பெரியவர் ஆதிமூலமும் கிராமத்திலிருந்து வந்திருந்த பாவலரும் வாழ்த்துரை வழங்கி கல்யாணத்தை நடத்தி வைத்தார்கள்.

அதன்பிறகு ஒன்றரை வருடங்கள் ஒடிவிட்டிருந்தன. ஒரு கனவைப்போல இவற்றையெல்லாம் அந்த இரவு முழுதும் நினைத்திருந்தாள் அமிர்தம். இடையில் பூண்டியில் செய்த ஆசிரியை வேலையை வீட்டுக்காரர் சொன்னார் என்பதற்காக ராஜினாமா செய்து அது தெரிந்த சின்ன அண்ணன் அவளிடம் பேசாமலே இருந்துவிட்டார். பெரிய அண்ணன்தான் கல்யாணத்திற்குப் பிறகான சீர்களையெல்லாம் செய்தார்.

பொழுது விடிந்துவிட்டிருந்தது. அன்று வழக்கத்திற்கு மாறாக வானம் சற்று கருமையாக இருந்தது. பூசணிக்கொடியில் புதிய பூசணிப்பூக்கள் பூத்திருந்தன. பக்கத்து வீட்டில் சண்முகம் வெள்ளாவியைப் பற்றவைக்கும் சத்தம் கேட்க் ஆரம்பித்தது.

குழந்தைக்குப் பால் கொடுத்தாள் அமிர்தம். எதுவுமே தெரியாத அக்குழந்தை பாலை உள்ளிழுத்துக் குடித்துக்கொண்டிருந்தது. தன்னையறியாமலேயே அமிர்தத்தின் கண்களில் கண்ணீர் வழிய குழந்தையின் மார்பின்மீது சொட்டியது. கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள். உரலின் அருகில் குழந்தையைக் கிடத்திவிட்டு கிணற்றில் கயிற்றை விட்டு தண்ணீரை சேந்தி எடுத்து முகம் கழுவிக்கொண்டாள். புடவையை உதறி இறுக்கிக் கட்டிக்கொண்டு குழந்தையை தோளில்மேல் போட்டுக்கொண்டு நடந்தாள்.பேருந்து நிலையம் நோக்கி அவள் கால்கள் சென்றுக்கொண்டிருந்தன. அவள் மனம் எதையெதையோ எண்ணிக்கொண்டிருந்தது. போய் அம்மாவின் மடியில் படுத்துக்கொள்ள வேண்டும் கதறி அழ வேண்டும் என என்னென்னவோ அவளுக்குத் தோன்றியது.

வேலூர் பஸ் ஏறி உட்கார்ந்து டிக்கெட் எடுத்தாள். குழந்தை சிணுங்கினான். மீண்டும் குழந்தைக்கு பாலூட்டினாள். சன்னல் காற்றில் இலேசாக கண்ணய்ர்ந்தாள். வேலூரில் இறங்கினால் பதினோரு மணிக்கு அவள் கிராமத்துப் பேருந்து கிடைக்கும். நேராக சென்று விடலாம். இல்லையென்றால் அடுத்த பேருந்து ஒரு மணிக்குத்தான். அதில் போனால் மூன்று மணிக்குத்தான் போக முடியும் என்ற கணக்கு தூக்கத்தோடே அவளுள் ஓடிக்கொண்டிருந்தது. வேலூரில் பஸ் இறங்கியதும் அம்மாவுக்குப் பிடித்த கமலா பழமும் கருப்பு திராட்சையையும் வாங்கிக்கொண்டு காத்திருக்க சாத்தம்பாக்கம் பேருந்து வந்தது. ஏறி தனக்கு வாகான இடத்தில் அமர்ந்துகொண்டாள். காலையிலிருந்து எதையும் அவள் சாப்பிடவில்லை ஒரு தேநீர் குடித்தால் தேவலாம் போலிருந்தது. ஆனால் அது முடியாது அதற்குள் பேருந்தை எடுத்துவிட்டார்கள். பேருந்து கிளம்பி நிலையத்தை விட்டு வெளியேறி சி.எம்சி. சத்துவாச்சாரி என ஆட்களை ஏற்றிக்கொண்டே முக்கியச்சாலைக்கு வந்து வேகம் பிடித்தது. விஷாரம் வழியாக ஆற்காடு சென்று ராணிப்பேட்டையைக் கடந்து வாலாஜா பேருந்து நிலையத்தில் வந்து நின்றபோது அவளுக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. யாராவது ஊர்க்காரர்கள் ஏறுவார்கள் என்று நம்பினாள். கூட்டம் முந்தித் தள்ளியது. அவள் ஊர் மொழிவழக்கு அவள் காதுகளுக்கு எட்டியது.

’அமிர்தம் இப்பத்தான் வர்றியா? வாத்தியாரு வர்ல? நேத்தே வருவேன்னு நினைச்சோம். நாங்காலயில பஸ்சுக்கு வந்து வாய இலைய மார்கெட்டுல போட்டுட்டு வர்றேன்.’ என்று நீளமாகப் பேசி முடித்தார் பின்னிருக்கையில் இடம்பிடித்திருந்த ஜெயப்பால். தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை. கூட்டம் இருவருக்கும் இடையே தடுப்புச்சுவர்போல நின்று விட்டிருந்தது. ’ஏன் இவரு நேத்தே வருவேன்னு நினச்சாரு’ என யோசித்தாள். குழந்தை அழவே அந்த சிந்தனை அவளுக்குள் அறுந்துபோனது.

பேருந்திலிருந்து இறங்கியதும் ஜெயப்பால் குழந்தையை வாங்கிக்கொண்டார். மெல்ல நடந்தார்கள். கால்களுக்கு இதமாக இருந்தது. எத்தனை முறை இந்தத்தெருவில் அவள் ஓடி விளையாடி இருக்கின்றாள்! நினைக்க மன்சில் இன்னும் துக்கம் அடைத்துக்கொண்டது. அவள் நினைத்த மாதிரியே ஊர் எல்லையில் உள்ள கால்வாயில் தண்ணீர் ஓடியது. அதன் மேல் மெல்லிய அலைகள் பரவியிருந்தன. அந்த நேரத்திலும் தவளைகள் கத்திக்கொண்டிருந்தன. வாத்துகளை கூட்டமாக ஓட்டிகொண்டு எதிரில் வந்தான் செம்பட்டை முடியுடன் ஒரு சிறுவன். அமிர்தத்தைப் பார்த்ததும் அவன் தலையை கீழே போட்டுக்கொண்டான். சின்ன சின்ன நீர்ப்பூச்சிகளை குறிவைத்து வாத்துகள் தண்ணீருக்குள் தலைகளை விட்டு தேடிக்கொண்டே நீந்திக்கொண்டிருந்தன. கால்வாயிலிருந்து ஏறும் இடத்தில் கால்களை அலசிக்கொண்டு ஏறினாள். குழந்தையை ஜெயப்பாலிடமிருந்து வாங்கிக்கொண்டாள்.

’ஏங்கொழந்த இப்பத்தான் வர்றீயா?’ என்று கேட்டாள் அன்னம் சித்தி. அன்னம் சித்தி கால்வாய்க்கரையில் மாரியம்மா கோயிலுக்குப் பக்கத்திலே இருப்பவள். யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பது அவளுக்கு அத்துப்படி. அவள் கண்களில் ஏதோ பரிதாபம் இழையோடியது. அதை அமிர்தம் கவனிக்கவில்லை. கோயிலைக் கடந்து ரேடியோரூமைத் தாண்டி நடந்தாள், சின்ன அண்ணன் எசேக்கியல் வீட்டு அகன்ற திண்ணையில் உட்கார்ந்திருந்தான். அவனைக் கட்டிக்கொண்டு அழ வேண்டும் போலிருந்தது. ஆனால் இருவரும் பார்வையத் தவிர்த்துக்கொண்டனர். பால் சொசைட்டிக்காகப் புதிதாக கட்டப்பட்டிருந்த கட்டிடத்தில் வெளியே நாய் ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது.

வீடு நெருங்க நெருங்க வேகமாக நடந்தாள். எல்லாவற்றையும் விட்டுவிட்டு அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஓவெனக் கதறி அழவேண்டும் என்று நினைத்தாள். வீட்டிற்குள் போகவும் அண்ணி வெளியே வரவும் சரியாக இருந்தது. கையில் வைத்திருந்த கஞ்சி குடிக்கும் கட்றாவை கீழே போட்டுவிட்டு குழந்தையை கையில் வாங்கிக்கொண்டு தேம்பிதேம்பி அண்ணி அழ ஒன்றுமே புரியவில்லை அமிர்தத்துக்கு.’பாப்பா அம்மாவுக்கு ரெண்டுநாளா ஒடம்பே சரியில்ல; எதுவுமே இறங்கல; கண்ணத் தொறக்கவே முடியல’ என்று சொல்லி ஓவென அழுகையைத் தொடர அம்மாவை கிடத்தி வைத்திருந்த வீட்டிற்குள் ஓடினாள்.

அம்மா படுக்க வைக்கப்பட்டிருந்தாள். முகம் வீங்கியிருந்தது. வீக்கத்திற்குள் கண்கள் புதைந்திருந்தன. கண்களை திறக்க முடியவில்லை. கைகால்களும் வீங்கியிருந்தன. கிட்டே போனாள் அமிர்தம். அவளால் இப்போது அழ முடியவில்லை. ’யம்மா எம்மா நா அமிர்தம் வந்திருக்கேன். குழந்தைய தூக்கிட்டு வந்திருக்கேன். கண்ண தொறந்து பாரு’ காதோரம் சென்று கெஞ்சினாள். அம்மாவின் கண்களிலிருந்து நீர் வடிந்து காதுகளைத் தொட்டது. கண்கள் மெல்ல மேலே வர ஆரம்பித்தன. ஏறக்குறைய மூன்று மணி ஆகியிருந்தது. ‘இந்தா இந்த பால கொஞ்சம் வுடுமா.ரெண்டு நாளா ஒண்ணுமே சாப்டல’ ஒரு சின்ன டம்ளரில் பாலையும் கரண்டியையும் கொண்டு வந்து கொடுத்தார்கள். அமிர்தம் ’ம்மா குடிம்மா’ என்று கூறிக்கொண்டே கரண்டியில் பாலை அள்ளி ஊட்டினாள். கொஞ்சம் கொஞ்சமாக பால் உள்ளே இறங்கியது. ’இந்தப் புள்ளைய பாக்கணுனுதான் இந்தம்மா நெனச்சி இப்டியிருக்கு’ என்று குழந்தையைக் காட்டினார்கள். அம்மா பெரிதும் முயற்சி எடுத்து கண்களைத் திறந்துப் பார்த்தாள். அண்ணிதான் அம்மாவை தலையைப் பிடித்து முதுகைத் தூக்கி சுவரில் சாய்த்து உட்கார வைத்தாள். குழந்தையை மடியில் கிடத்தினார்கள். குழந்தை பாட்டியின் மடிமீது படுத்துக்கொண்டு கைகளையும் காலையும் யாரோடோ சண்டை போடுவதைப் போல ஆட்டிக்கொண்டிருந்தான்.

அன்று மாலை ஆறு மணிக்கெல்லாம் அம்மாவின் வீக்கம் குறைந்திருந்தது. முகம் தெளிவாகியது. கம்மிய குரலில் அம்மா கேட்டாள் ‘யாமா வாத்தியார் வரல?’ ‘அவருக்கு எதோ முக்கியமான வேல இருக்குன்னு என்னய அனுப்புனாரு. நாளக்கி வராங்கலாம்’ என்று கையை அதிகமாக சைகை காட்டி பேசினாள் அமிர்தம். அம்மா புரிந்துகொண்டதைப் புன்னகையால் சொன்னாள்.

இரவு, பாயைப் போட்டு அம்மாவை படுக்க வைத்தாள் அமிர்தம். சூடாக கஞ்சி காய்ச்சி கொடுத்திருந்தாள். ’கொயந்தையை எம்பக்கத்துல போடு’ அம்மா கேட்டதும் குழந்தையைப் படுக்க வைத்தாள். தன்னுடைய தளர்ந்த கைகளால் குழந்தையை அணைத்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல கண்களை மூடி தூங்க ஆரம்பித்தாள் அம்மா. ஆழமாக மூச்சை இழுத்துவிடும் சப்தம் வந்தது. அண்ணன் வந்து பார்த்தார். ‘நா பாத்துக்கிறேன் நீ போய் படு’ என அனுப்பிவிட்டு அம்மாவின் புடவைகளை விரித்துப்போட்டுவிட்டு படுத்தாள் அமிர்தம். தன்னுடைய எந்தப் பிரச்சினையும் அவள் நினைவில் இல்லை. தான் வந்ததும் அம்மா எழுந்து உட்கார்ந்தது, குழந்தையைப் பார்த்தது, பேசியது, சாப்பிட்டது எல்லாம் ஒரு நிறைவாக அவள் மனதுள் இருந்தது. அயர்ந்து தூங்கினாள்.

மறுநாள் காலை ஏழு மணி. குழந்தை சத்தமாக அழுதுகொண்டிருந்தான். அமிர்தம் ஆழ்ந்த உறக்கதில் இருக்கின்றாள். பெரிய அண்ணன் வந்து ‘பாப்பா! பாப்பா! கொயந்த அழுவுறான் பாரு’ சத்தமாக கத்தினார். ’இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லை எழுப்பு அவங்களே’ இன்னும் சத்தம் அதிகமானது.

அமிர்தம் மெல்ல நகர்ந்து அம்மாவிடம் போனாள்.
‘யம்மா யம்மா எம்மா’
சலனமில்லை.
குழந்தைமேலிருந்த கையை தன் கையால் தூக்கினாள் அமிர்தம்.
அம்மாவின் கை சில்லிட்டிருந்தது.
இறுகிபோயிருந்தது.

Friday, October 7, 2011

பரமக்குடி படுகொலை கண்டன கருத்தரங்கம்



பறை விடுதலை இயக்கம் நடத்திய பரமக்குடி படுகொலை கருத்தரங்கம் கடந்த 24.09.2011 அன்று மாலை 6.00 மணியளவில் சென்னை தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது.


ஆக்கவாளிகளும் பத்திரிகையாளர்களும் சேர்ந்து ஒருங்கிணைத்திருந்த இந்நிகழ்வில் கவிஞர் கரிகாலன் வரவேற்புரையாற்றினார். “அரசயங்கரவாதத்தை எதிர்ப்பதுதான் ஒரு எழுத்தாளனின் முக்கிய பணி. எழுதுவதே ஒரு கலகச்செயல்பாடு என்று பலர் இருக்கின்றனர். இத்தகைய வன்கொடுமைகளைக் கண்டும் அமைதியாகவும் சலனமில்லாமலும் இருக்கும் தமிழ்ச்சமுதாயத்தை என்ன சொல்வது எனத் தெரியவில்லை. ஒரு படைப்பாளி தான் வாழ்கின்ற காலத்தில் நடக்கும் அக்கிரமங்களை எதிர்க்கும் வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் எழுத்தும் வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்கும். ஈழம் சார்ந்த போராட்டங்களில் ஒன்றுபட்ட இலக்கிய புலம் இந்த படுகொலையைக் கண்டு கனத்த மௌனத்தைக் கடைபிடிப்பது ஏன் என்று தெரியவில்லை. பரமக்குடி படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு அரசபயங்கரவாதம் தான் என்பது வெளிப்படையான ஒன்று. இதை எதிர்ப்பதற்காக இணைய வேண்டியவர்கள் இணையாமல் இருப்பது நியாயமல்ல. இந்த வரவேற்புரை என்பது ஏதோ சம்பிரதாயத்திற்கு அல்ல. நம்மீது சுமத்தப்பட்ட இந்த கனத்த சோகத்தைத் தாங்கிக் கொண்டுதான் நாம் இயங்குகிறோம்” என்று கூறி கருத்தரங்கிற்கு வந்திருந்தவர்களை வரவேற்றார்.


கருத்தரங்கில் உரையாற்றிய வழக்கறிஞரும் எழுத்தாளருமான ச.பாலமுருகன் பரமக்குடி படுகொலையின் பின்னணியில் இருக்கும் ஆதிக்க சாதி உளவியலையும் அது அரசு எந்திரங்களில் இயங்கும் விதத்தினையும் விளக்கினார். சந்தைகளை பாதிக்காத அளவுக்குதான் சட்டங்கள் இயற்றப்பட்டன. இதைத்தான் நியோ காலனிசம் என்று சொல்ல வேண்டும். 1993ல் மனித உரிமைப் பாதுகப்புச் சட்டங்கள் வந்தன. அதன்பிறகுதான் பல ஆணையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் அந்த ஆணையங்களின் அதிகார வரம்பு என்பது சந்தையை பாதிக்காத வகையில் மட்டுமே இடுக்கும்படி அதிகாரவர்க்கம் பார்த்துக்கொண்டது. அதனால் தவறு செய்யும் அதிகாரிகளை தண்டிக்கும் சட்டம் எந்த அமைப்பிலும் இல்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியும். ஒருய் லட்சம் தருகிறார்கள் என்றால் கொஞ்சம் போராடியோ வற்புறுத்தியோ அதிகம் கேட்கலாம். அனால் தவறுசெய்த அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க முடியுமா என்றால் அதற்கு வழியில்லை. அது எந்த ஆணையமாக இருந்தாலும் அப்படித்தான். இப்படிப்பட்ட கேள்வி எழுப்ப முடியாத அதிகாரம் காவல்துறை இருக்கிறது. அய்யாவின் ஆட்சியானாலும் அம்மாவின் ஆட்சியானாலும் துப்பாக்கியால் சுடுகிற அதிகார வன்முறையை கேள்வி கேட்க இயலாது. அரசியல் சட்டம் மனிதனுடைய மாண்பைக் காக்க வேண்டும். தலித்துகளுக்குக் கோபம் கொள்ளக் கூடிய தேவை இருக்கிறது. காவல்துறைக்கு என்ன தேவை இருக்கிறது. காவல்துறையைத் தொடர்ந்து வன்மப்படுத்தகிற வேலையை அரசியல்வாதிகள் செய்துகொண்டிருக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடப்பது ஜனநாயகத்தின் பெரிய அவமானம்’ என்று உரையாற்றினார்.


எவிடன்ஸ் கதிர் அவர்கள் உரையாற்றிய போது, பரமக்குடியில் நடந்த படுகொலை காவல்துறையின் சாதி மனோபாவத்தின் வெளிப்பாடு அல்லது அடையாளம். பல ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து வந்தபிறகு ஜான்பாண்டியன் அவர்கள் சுற்றுப்பயணத்தை நடத்தினார். அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதைக்கண்டித்த தலித்துகள் 26 பேரை அபிராம் காவல் நிலையத்தில் வைத்து வதைத்தார்கள். இது வெளிவராத செய்தி. தேவர்சிலை மீது அவமதிப்பு நடத்தியபோது காவல்துறை ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவரைக் கைது செய்தது. ஆனால் தேவரை இழிவாக எழுதினார்கள் என்று பொய் சொல்லி பழனிக்கும்மர்சட்டத்திற்குப் புறம்பாக கூடுகின்ற கூட்டத்தை எப்படிக் கலைக்கவேண்டும் என்பதற்கு கேரள காவல் அறிக்கை 1970 என்ன கூறுகிறது என்றால் தடியடி நடத்தும்போது தடிக்கும் அடிக்கப்படுகிறவருக்கும் இடைவெளி அரையடியாகத்தான் இருக்கவேண்டும். அடிக்கும்போது உடலின் மென்மையானப் பகுதிகளில்தான் அடிக்க வேண்டு. ஆனால் பரமக்குடி கலவரத்தில் கொல்லப்பட்டவர்களில் அடித்தே சித்திரவதை செய்யப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆறுபேரில் மூன்று பேர் அய்ம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள். இருவர் மட்டுந்தான் குருபூஜைக்கு சென்றவர்கள். மீதி நான்குபேர் பொதுமக்கள். நமக்கெல்லாம் ஒரு செய்தி புலனாகவில்லை. நாமெல்லாம் தூக்குதண்டனைக்கு எதிராக கத்துகிறோம். ஆனால் நிறைய பேர் இந்தப் படுகொலையைக் கண்டிக்கக்கூட இல்லையே. கேமிராவுக்கு கட்டுப்பட்டவர்களாக போராட்டங்களை அவர்கள் நடத்துகிறார்கள். பொதுவுடைமைவாதிகளில் சி.பி.எம் கண்டித்தது. ஆனால் சி.பி.ஐயில் தா.பாண்டியன் கண்டிக்கவில்லை, நல்லக்கண்ணு அவர்கள் கண்டிக்கிறார்கள். இது புரியவே இல்லை. நாம் தமிழிதேசிய அரசியலில் இருக்கிறோமோ அல்லது தலித் அரசியலில் இருக்கிறோமே என்று தெரியவில்லை என்று அடக்குமுறை சட்டங்களின் பல பிரிவுகளை எடுத்துக்காட்டி எவிடன்ஸ் கதிர் அவர்கள் உரையாற்றினார்.


ஓவியா அவர்கள் காவல்துறையின் வன்முறையால் விளைந்த இந்த படுகொலை நடந்திருக்கிறது. குழந்தையை அடிப்பதுபோல காவல்துறையினர் மக்களை கலைவதற்காக அடித்திருக்கலாம் ஆனால் இப்படி வெறியாட்டம் நடத்துவது ஏற்ற்குகொள்ள முடியாதது. கண்டிக்கத் தக்கது. பெயர்களை வைத்து சாதிய வெறியாடுவது படித்த சமூகத்திற்கு அழகல்ல என்றார்.